Main Menu

ஐங்கால ஜமாஅத்தொழுகை, ஜும்ஆத்தொழுகைகளை இடை நிறுத்துவதால் குரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து தப்பி விடலாமா?

இந்த செய்தியைப் பகிர்க >>>
அஷ்ஷெய்க் ஏ.எல். பீர்முகம்மது (காஸிமி)
உலகின் பல்வேறு நாடுகளை பதம் பார்த்துக் கொண்டிருக்கும் குரோனா வைரஸ் தொற்றுநோய் இலங்கை திருநாட்டையும் பதம் பார்க்கத் தொடங்கியுள்ளது.
 
இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் குரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை இதனை நன்கு தெளிவுபடுத்துகின்றது.
 
இலங்கை அரசு மற்ற நாடுகளிடம் படித்த பாடங்களை முன்னுதாரணமாகக் கொண்டு இவ்வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தேவையான முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
 
அந்த வகையில் முஸ்லிம் சமய பண்பாட்டு
அலுவல்கள் திணைக்களம் ,வக்பு சபை என்பவற்றின் ஆலோசனைகளுக்கு அமைவாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கையிலுள்ள பள்ளிவாசல்களில் ஜமாத் தொழுகை, ஜும்ஆத் தொழுகை என்பவற்றை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது .
 
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் இக்கோரிக்கையை சில பள்ளிவாசல்கள் ஏற்றும் பல பள்ளிவாசல்கள் நிராகரித்தும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றமை அவதானிக்கக்கூடியதாக உள்ளது . இதன் பின்னணியிலேயே ஜம்இய்யத்துல் உலமாவின் இவ்வேண்டுகோளின் நியாயத்தை தெளிவுபடுத்துவதற்காக இக்கட்டுரை எழுதப்படுகிறது.
 
ஜம்இய்யத்துல் உலமாவின் இத்தீர்மானத்தை விமர்சிப்பவர்கள் அல்லது அங்கீகரிக்காதவர்கள் பல கேள்விகளை தமது நியாயங்களாக முன்வைத்து வருகின்றனர்.
 
அவற்றை பின்வருமாறு தெளிவு படுத்தலாம்:
 
1.ஜும்ஆத் தொழுகை, ஜமாஅத் தொழுகை என்பவற்றை தற்காலிகமாக இடை நிறுத்துவதால் வைரஸ் தொற்றின் பரவலை தடுத்து நிறுத்திவிட முடியுமா ? என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர் .
 
நோய் என்பது அல்லாஹ் நாடியவர்களுக்கு வரும். அல்லாஹ் நாடாமல் அணுவும் அசைவதில்லை என நம்பி இருக்கும் நாம் இந்நோய்க்கு பயந்து ஜமாஅத் தொழுகை மற்றும் ஜும்ஆத் தொழுகை என்பவற்றை கைவிடலாமா? என அவர்கள் வினவுகின்றனர். உண்மையில் இக்கேள்வி இஸ்லாமிய அறிவு பின்புலம் அற்றதும் அடிப்படை அறிவற்றதுமாகும். இஸ்லாமிய மார்க்கம் விதியை நம்பச் சொன்ன போதும் மதியை பயன்படுத்தாமல் காரண காரியங்களை மீறி நடக்க ஒருபோதும் அனுமதிக்க வில்லை. இந்த வகையில் நோய் விடயத்தில் கண்டிப்பான அறிவுரைகளை வழங்கியுள்ளது. குறிப்பாக தொற்று நோய் விடயத்தில் நோய் பரவியுள்ள ஊரிலிருந்து வேறொரு ஊருக்கு செல்வதையும் நோய் பரவாத ஊரில் உள்ள ஒருவர் நோய் பரவியுள்ள ஊருக்குச் செல்வதையும் நபிமொழிகள் தடை செய்துள்ளன .
 
இது நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான இஸ்லாத்தின் அறிவுரையாகும். நோய்கள் பரவும் போது மக்கள் ஒன்றுகூடல்களை தவிர்த்துக் கொள்வது அவசியமாகும் .அந்த வகையில் முஸ்லிம்கள் ஐங்காலத் தொழுகைகளை கூட்டாக நிறைவேற்றுவதற்கும் வாராந்தம் ஜும்ஆ கடமையை நிறைவேற்றுவதற்கும் பள்ளிவாயலில் ஒன்று கூடுகின்றனர். இத்தகைய சந்தர்ப்பங்களில் தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. தென் கொரியா ,மலேசியா போன்ற நாடுகளில் குரோனா வைரஸ் திடீரென வேகமாக பரவியதற்கு
சமய வழிபாட்டுத் தலங்களில் நடைபெற்ற ஒன்று கூடல்கள் முக்கிய காரணமாக இருந்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
எனவே முஸ்லிம்கள் தற்காலிகமாக ஐங்கால கூட்டுத் தொழுகைகள் மற்றும் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகை என்பவற்றை தற்காலிகமாக தவிர்ப்பதன் ஊடாக இத்தொற்று நோயை கட்டுப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உதவிட முடியும்.
 
2. முக்கிய கடமையான ஐங்கால கூட்டுத் தொழுகைகள் மற்றும் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகை என்பவற்றை தற்காலிகமாக தடைசெய்து விட்டு நோய்த் தொற்றுக்கான ஏனைய வாசல்களை திறந்து வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்? இக்கேள்வி மிகவும் நியாயமானது.
மார்க்கத்தின் முக்கிய கடமையை தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்யும் நாம் வீடுகளில் தனித்திருப்பதை கைவிட்டு ஆங்காங்கே கூட்டமாய் கூடி நிற்பதும் தெருவோரங்களில் குட்டிக் குட்டி கூட்டங்களை நடாத்துவதும் தேவையற்ற மற்றும் உல்லாச போக்குவரத்துக்களை
மேற்கொள்வதும் சன நெரிசல் கூடிய இடங்கள், கடைத்தெருக்களில் நடமாடுவதும் எமது முயற்சிகளை அர்த்தமற்றதாக்கிவிடும் என்பதை கவனத்திற் கொண்டு அனைவரும் செயற்படுதல் வேண்டும்.
 
3. இவ்வாறு மார்க்கக் கடமைகளை இடை நிறுத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா?
சாதாரணமாக மழைகாலத்தின் போதும், வீதிகள் சேறு சகதிகள் நிறைந்து போக்கு வரத்துக்கு அசௌகரியமாக இருக்கும் போதும் பள்ளிவாசல்களில் ஜமாஅத்துத் தொழுகைக்கு சலுகையளித்து வீடுகளில் தொழுது கொள்ளுமாறு அனுமதியளித்த மார்க்கம் இஸ்லாம். இத்தகைய கொடூர தொற்று நோய்களுக்கு அனுமதி மறுத்தா இருக்கப் போகின்றது.?
கஃபாவில் ஹஜ், உம்ரா, தவாப் என்பன உள்நாட்டு யுத்தம், அந்நிய படையெடுப்பு, தொற்று நோய் காரணங்களுக்காக வரலாற்று நெடுகிலும் சுமார் நாற்பது தடவைகள் ஆட்சியாளர்களாலும் எதிரிகளாலும் தடைசெய்யப்பட்டுள்ளன என்பதை வரலாறு சொல்லும்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இவ்வேண்டுகோளை மார்க்க ஆதாரமின்றி தன்னிச்சையாக விடுக்கவில்லை. பல இஸ்லாமிய நாடுகளின் முன்மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டே இவ்வேண்டுகோளை விடுத்துள்ளன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். குவைத் நாட்டின் சமய விவகார அமைச்சு, கத்தார் நாட்டின் சமய விவகார அமைச்சு, ஐக்கிய அரபு அமீரகத்தின் சமய விவகார அமைச்சு என்பன அங்குள்ள தேர்ச்சிபெற்ற உலமாக்களின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் குரோணா வைரஸ் தொற்றின் பரவலை தடுக்கும் முகமாக மக்கள் ஒன்று கூடலை தவிர்ப்பதற்காக ஐங்கால ஜமாத் தொழுகை, ஜும்ஆத் தொழுகை என்பவற்றை தற்காலிகமாக இடைநிறுத்தி வீடுகளிலே தொழுகையை நிறைவேற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளன .சவுதி அரேபியா இவ்வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் முகமாக அனைத்து நாடுகளுக்குமான உம்ரா விசாவை தடை செய்து மக்கள் ஒன்று கூடலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இதனால் பல இலட்சக்கணக்கான மக்களால் எப்போதும் நிறைந்திருக்கும் கஃபத்துல்லாஹ் சன நடமாட்டமின்றி வெறுமையாக காட்சியளிக்கின்றது. எனவே முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட அத்தகைய நாடுகள் இத்தகைய அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் போது சிறுபான்மையாக இந்த நாட்டில் வாழும் நாம் குரோனா வைரஸை கட்டுப்படுத்த இலங்கை அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்தாசையாக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது எந்த வகையிலும் மார்க்கத்திற்கு முரணாகாது என்பதனை புரிந்து கொள்ளல் வேண்டும்.
 
4. இஸ்லாமிய மார்க்கம் யுத்த காலத்தின் போதும் அச்ச சூழ்நிலையின் போதும் ஜமாஅத் தொழுகைக்கு சலுகை அளிக்காத நிலையில் எவ்வாறு இந்த நோய்க்காக இதனை இடை நிறுத்த முடியும் ? என சிலர் விதண்டாவாதம் செய்வது கவலைக்குரியதாகும். யுத்த சூழ்நிலையையும் தொற்று நோயின் பாதகத்தையும் பிரித்துப் பார்த்து நோக்கத் தெரியாத இவர்களை நாம் என்னவென்பது? யுத்த சூழ்நிலையில் ஜமாஅத் தொழுகையின் சட்டம் என்பது ஒரு சாரார் உஷார் நிலையில் இருக்க மற்றவர்கள் தொழுகையில் கூட்டாக ஈடுபட சந்தர்ப்பம் அளித்த நிலையாகும். அதனை ஒப்பீடாகக் கொண்டு வைரஸ் தொற்றுக்கும் சட்டம் காண்பது மிகவும் ஆபத்தானது. மக்கள் அதிகமாக கூடுகின்ற இடங்களில் தொற்று நோய் தொற்றி விட்டால் பலநூறு அல்லது பல்லாயிரம் பேரை காவு கொள்ளக்கூடியது. அதிலும் குரோனா வைரஸ் என்பது வீரியமிக்கதும் குறுகிய நாட்களில் பெரும்பாதிப்பை ஏற்படுத்த வல்லதுமாகும் என்பதை புரிந்து செயற்பட வேண்டும். இதனைப் புரியாமல் முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப் போடும் மதியிழந்த செயலில் ஈடுபடக்கூடாது .எனவே இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் கால சூழல் அறிந்து செயற்படுவதும் புத்தி சாதுரியமாக செயற்படுவதும் அவசியமாகும். இவ் அறிவுறுத்தல்களை நாம் கவனத்தில் எடுக்காது செயற்படுவோமாயின் இதன் விளைவு மிகவும் பாரதூரமாக அமைந்துவிடும் என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
 
எனவே நாம் சுகாதார அமைச்சினதும் அரச அதிகாரிகளினதும் அறிவுறுத்தலுக்கு அமைவாகவும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் வழிநடாத்தல்களுக்கு அமைவாகவும் செயற்பட்டு குரோணா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முயற்சிப்போமாக.
 
அஷ்ஷெய்க் ஏ.எல். பீர்முகம்மது (காஸிமி)
பொதுத் தலைவர், JDIK
இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed