Main Menu

மாற்றத்தை நோக்கிய நகர்வின் முதற்படி – FRD-K உலருணவு விநியோகம்

மனித வாழ்வியல் இயக்கத்தில் ஒரு முழுமை பெற்ற இயங்கியல் மேற்கொள்ளப்பட உடல், அறிவு மற்றும் ஆன்மா ஒருங்கிணைந்து செயற்படுவது இன்றியமையாததாகும்.

இதே போன்று, ஒரு சமூகத்தின் வளமான செயற்பாட்டிற்கு, அச்சமூகத்தின் அடிப்படை உட்கட்டுமான விடயங்களான கல்வியறிவு, கலாசார, பண்பாட்டு விழுமியங்கள், ஆன்மீகம், சுகாதாரப்பழக்க வழக்கங்கள் மற்றும் திட்டமிடல் உட்பட பல்வேறு காரணிகள் நன்கு ஒழுங்குபடுத்தப்படுவது காலத்தின் அவசியமாகும்.

மேலும், ஒரு சமூகம் தலை நிமிர்ந்து வாழ, இக்காரணிகளை நெறிப்படுத்தும் அச்சாணியாக களம் காண்பது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் பொறுப்புவாய்ந்த முன்மாதிரியாகும். இங்கு பல்வேறு துறைசார்ந்த மனித வளங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, ஒரு சிவில் சமூகமாக உருப்பெற்றால் உட்சபட்ச விளைவினை குறுகிய காலத்தில் அடைய முடியுமென்பது வெள்ளிடை மலை.

இதற்கு நல்ல உதாரணம், எமது சகோதர இன தமிழ் மக்களின் செயற்பாடுகளாகும். அண்மைக்காலமாக எமது இஸ்லாமிய சமூகம், இவ்வாறான ஒரு சிவில் சமூகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதை யாவருமறிவர்.

அந்த வகையில், அண்மித்த பிரதேசங்களான ஏறாவூர் மற்றும் காத்தாங்குடி சகோதரர்கள் மிக நுணுக்கமாக திட்டமிட்ட முறையில் பல்வேறு வேலைத்திட்டங்களை முடுக்கி விட்டுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக எமது கல்குடா சமூகம் கணிசமான துறைசார் புத்திஜீவிகளைக் கொண்டுள்ள போதும், முறையானதொரு முன்னெடுப்பைச்செய்ய முடியாதவாறு இதுவரை காலமும் ஏதோவொரு காரணத்தால் பிரித்தாளப்பட்டுள்ளனர்.

இதன் பாரதூரம் எதிர்காலத்தில் மிக ஆபத்தான சூழலை எமது சந்ததிக்கு கொண்டு வந்து சேர்க்குமென்று கவலைப்பட்ட பலர் இதற்கான முன்னகர்வுத்திட்டங்களை மேற்கொள்வதற்கு முன் வந்தனர்.

இதன் விளைவாக FRD-K என்ற அமைப்பு தோற்றம் பெற்று பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இவ்வமைப்பானது, எந்தவொரு தனிப்பட்ட சக்திகளதும் கட்டுப்பாட்டுக்கப்பால் சுதந்திரமாகவும் சமூகத்திற்கு பொருத்தமாகவும் தமது வேலைத்திட்டங்களை அந்தந்தக் காலத்திற்கேற்ப ஒரு மசூறா அடிப்படையில் மேற்கொள்வதென தம்மீது ஒரு விதியை உருவாக்கிக் கொண்டுள்ளது.

அதன் பிரதான இலக்காக சமூக மாற்றம் காணப்படுவதோடு, கிளைகளாக கல்வி, கலாசார, பண்பாட்டு விழுமியங்கள், வாழ்வாதாரம், அரசியல், சமூகச்சீர்திருத்தம் மற்றும் பொருளாரத் திட்டமிடல்கள் உட்பட இதர பகுதிகளையும் உள்ளடக்கியது.

இந்த வகையில், தற்போது உக்கிரமடைந்துள்ள கொரோனா நோயியின் காரணமாக, சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.

குறிப்பாக, பொருளாதார ரீதியில் நலிவுற்ற அன்றாட உணவுக்கு கஷ்டப்படுகின்ற சமூகம் மிகவும் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதைக்கவனத்திற்கொண்ட FRD-K அமைப்பினர் முதற்கட்டமாக சுமார் 2500 ரூபாய் பெறுமதியான உலருணவுப்பொதிகளை வழங்கத் தீர்மானித்தனர்.

இதற்காக ஒவ்வொரு ஜீ.எஸ் பிரிவிலுமுள்ள பயனாளிகள் அந்தந்தப்பகுதி அரச கள உத்தியோகத்தர்களின் உதவியுடன் தெரிவு செய்யப்பட்டு, நேற்று 23.03.2020ம் திகதி திங்கட்கிழமை முறையாக அப்பொதிகள் வழங்கப்பட்டது.

இங்கு முழுமையாக வெளிநாடுகளில் தொழில் புரியும் சகோதரர்கள், புத்திஜீவிகள் உட்பட இங்குள்ள எமது அமைப்பின் ஏனைய அங்கத்தவர்களின் பங்களிப்பு மாத்திரமே பெறப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்திற்குப் பங்களிப்புச்செய்ய பல்வேறு தரப்பினரும் முன்வந்த நிலையில், எங்களால் முதற்கட்டத்திற்கு மதிப்பிடப்பட்ட தொகையினை அடைந்து விட்டதால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாமைக்கு வருந்துகின்றோம். இருப்பினும், எதிர்வரும் காலங்களில் FRD-K பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொள்வதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றது  இந்நிலையில், வெளி நிதியுதவிகள் மசூறா அடிப்படையில் ஏற்றுக்கொள்கின்றோம்.

FRD-K இன் எதிர்காலச் செயற்பாடுகளில் கைகோர்க்க அனைத்து சமூக ஆர்வலர்களையும் அன்போடு அழைக்கின்றோம்.

FRDK குழுமம்Comments are Closed