Main Menu

சம்மாந்துறை பிரதேச கொரோனா தடுப்பு செயலணியின் தீர்மானங்கள்

(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை பிரதேச மட்ட கொபிட் -19 கொரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்கான செயலணியின் கூட்டம் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் சலுகைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது, ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட வேளையில் மக்களின் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது சன நெரிசலைக்குறைத்து நடமாடும் சந்தையூடாக மக்களின் காலடியில் வழங்குவது. அரசாங்கத்தினால் வழங்கப்படும் முதியோர் கொடுப்பனவுகளை கிராம உத்தியோகத்தரூடாக வழங்குதல், சமுர்த்திப் பயனாளிகளுக்கு வட்டியற்ற கடன், சமுர்த்தியால் அத்தியவதிய உணவுப்பொதிகள் வழங்குதல், சஹாய விலையில் சமுர்த்தியினால் விசேட உணவு அட்டை வழங்குதல், முதியோர் மற்றும் சிறுவர் இல்லங்களுக்கு உலருணவுப்பொருட்கள் வழங்குதல், மக்களின் சமயக்கடமைகள், அன்றாட நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில் சம்மாந்துறை பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.எம்.கபீர், சம்மாந்துறை பிரதேச சபைச்செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை பொலிஸ் நிலையப்பெறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைத்தலைவர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெப்பை, வர்த்தக சங்கப்பிரதிநிதிகள், இராணுவத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது வர்த்தகர்களும் பொது மக்களும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள் குறித்து சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

01. ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ள வேளையில் நோயாளர்களுக்கு வைத்திய சேவை மற்றும் பாமசி சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதிக்கப்படும். தனியர் மருந்துகளின் வைத்தியரின் சிட்டைகளை சமர்ப்பிப்பதன் மூலம் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், நடமாடும் விற்பனை வண்டியில் பொது மக்களுக்குத் தேவையான சகல அத்தியவசியப் பொருட்களும் பொலிஸாரின் முன் அனுமதியுடன் கட்டுப்பாட்டு விலைகளில் விற்பனை செய்யப்படும்.

02. சமூர்த்தி நல உதவி பெறும் குடும்பங்களுக்கு 10,000.00 ரூபாய் பெறுமதியான வட்டி அறவிடக்கடன் சமூர்த்தி வங்கி சமுர்த்தி உத்தியோகத்தர்களூடாக வழங்கப்படும். ஒரு வாரத்துக்குத் தேவையான உலருணவுப் பொருட்கள் சமுர்த்தி நல உதவி பெறும் குடும்பங்கள், நல உதவி பெறத்தகுதியான குடும்பங்களுக்கும் சமுர்த்தி சங்கங்களுடாக வினியோகிக்கப்படும். (இச்சேவையினைக் கொடுப்பனவு செலுத்தி பொது மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்)

03. தபால் நிலையங்களுடாக வழங்கப்படும் முதியோர், பொது சகாய நிதி ஆகிய கொடுப்பனவுகள் கிராம சேவை உத்தியோகத்தர் அலுவலகத்தில் வழங்கப்படும்.

04. நாளாந்தக்கூலி வருமான பெறுகின்ற அல்லது குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு உலருணவு வழங்குகின்ற போது சமூக அமைப்புகள், பிரதேச செயலக மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முறைமைப்படுத்தும் செயலணியினைத் தொடர்பு கொண்டு வினியோகிக்க வேண்டும்.

05. ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படுகின்ற வேளையில் பொது மக்களுக்குத் தேவையான பல சரக்கு பொருட்கள், மரக்கறி வகைகள், பிற பொருட்கள் கட்டுப்பாட்டு விலைகளில் வீரமுனை சந்தி (ஆன்டிட சந்தி) விளினியடிச்சந்தி, வண்டுச்சந்தி (கொச்சிக்காதூளர் சந்தி), பழைய பொதுச்சந்தை, கைகாட்டிச்சந்தி, சலாம் பள்ளிவாசல் சந்தி ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்படும்.

06. மக்கள் கூடுகின்ற இடங்களில் தொற்று நீக்கிகள் விசிறும் பணியானது ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படும் வேளைகளில் (இன்று தொடக்கம்) சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் செயற்படுத்தப்படும்.

07. விவசாய நடவடிக்குப்பயன்படுத்தும் உழவு இயந்திரங்களுக்கு ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தும் நாட்களில் காலை 5.00 மணி தொடக்கம் காலை 8.00 மணி வரை பொலிஸாரின் மேற்பார்வையில் எரிபொருள் நிலையங்களில் வினியோகிக்கப்படும்.

08. சகல பள்ளிவாசல்களும் மறு அறிவித்தல் வரை தொழுகையானது தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறுகின்ற பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

09. சம்மாந்துறை பிரதேச சபையூடாக நாளை வியாழக்கிழமை நடமாடும் விற்பனை நிலையங்கள் இஸ்தாபிக்கப்படும் இடங்களில் முகக்கவசம் (மாஸ்க்) இலவசமாக பொது மக்களுக்கு வினியோகிக்கப்படும்.

10. பொது மக்கள் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படுகின்ற வேளையில், பொது இடங்களில் ஒழுங்குபடுத்துவதற்காக சமூக நல அமைப்புகள் பங்களிப்புப் பெறப்படும்.

11. ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ள வேளைகளில் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை வீதிகளில் விளையாடுவதற்கோ அல்லது இன்னும் பிற தேவைக்ளுக்கோ அனுப்ப வேண்டாம். இதனை மீறுகின்ற பெற்றோர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

12. முதியோர் மற்றும் சிறுவர் இல்லங்களுக்கு இரு வாரங்களுக்குத் தேவையான உலருணவுப்பொருட்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினூடாக வினியோகிக்கப்படும்.

சம்மாந்துறை பிரதேச மட்ட கொபிட் -19 கொரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்கான செயலணியின் நேற்றைய கூட்;டத்தில் உள்ளிட்ட தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Comments are Closed