Main Menu

ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே கொரோனாவிலிருந்து மீள வழி – ஜவாஹிர் சாலி

இந்த செய்தியைப் பகிர்க >>>

ஓட்டமாவடி அஹ்மட் இர்ஷாட்
இவ்வருடம் ஜனவரி 10ந்திகதி சீனாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட Corona என அழைக்கப்படும் Covid -19 வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் ஆட்கொண்டு விட்டது. இதை எழுதும் போதான கணக்கெடுப்பில் உலகம் முழுவதும் 6,78,103 கொரோனா நோயாளிகள் அடையாளங்காணப்பட்டு அதில் 31,771 பேர் மரணமடைந்துள்ளனர். அத்துடன், 1,46,319 பேர் கொரோனாவிலிருந்து பாதுகாப்புப் பெற்றுள்ளனர்.

கொரோனாவிலிருந்து பாதுகாப்புப் பெற்றவர்களுடன் ஒப்பிடுகையில், இறந்தவர்களின் சதவீதம் 18% ஆகும். நோய்வாய்ப்பட்டவர்களில் மரணித்தவர்களின் சத வீதம் 4.65% ஆகும்.

தற்போதைய நிலவரப்படி சீனா தனது நாட்டை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதென்றே சொல்லலாம்.
கொரோனாவின் மூல காரணம் சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையேயான உயிரியல் யுத்தம் என்பதில் உண்மையுள்ளதா? இல்லையா? என்பது வேறு விடயமென்றாலும், ஜனவரி 20ம் திகதி முதல் நோயாளியைக்கண்ட அமெரிக்கா தற்போது மிக மோசமான நிலையை அடைந்துள்ளது.

அங்கு 1,23,781 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் நோய் நீங்கிய 3,238 பேருடன் ஒப்பிட்டால், இறந்த 2,229 பேரின் சதவீதம் 40.78% ஆகும். முழு உலகில் இது 18% ஆக இருக்கையில், அமெரிக்காவில் 40.75% ஆகமுள்ளது. இருந்தாலும், அமெரிக்கா இதற்காக எடுக்கும் கடும் முயற்சிகள் மூலம் நோயோடு இருக்கும் 1,18,314 பேருடன் மிக மோசமான நிலையிலுள்ள 2,666 பேரை ஒப்பிடுகையில், இது 2.25% ஆகவேயுள்ளது, மேலும், நோய்வாய்ப்பட்ட மொத்தத் தொகையான 1,23,781 பேரில் மரணித்த 2,229 என்பது 1.8% என்ற குறைந்த நிலையிலேயேயுள்ளது.

நோய் நீங்கியவர்கள், இறந்தோரிடையேயான சதவீதத்தைக் கவனித்தால் நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம், இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளே மிக மோசமான நிலையிலுள்ளன. எது எப்படியிருந்தாலும், இலங்கையைப் பொறுத்த வரை அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் முன்னெடுக்கப்படும் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் மிகச் சிறப்பாகவேயுள்ளன, பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்பில்லாத நிலையிலும் வைத்தியர்கள், சுகாதாரப்பிரிவினர், இதில் சம்பந்தப்படும் அரச திணைக்களங்கள், பாதுகாப்புப்படையினர் போன்றோரின் தன்னலங்கருதாத அர்ப்பணிப்பு இலங்கையில் கொரோனா தொற்றை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வரக்கூடிய வாய்ப்பையே காட்டுகிறது.

இதுவரை இங்கு 115 பேர் பாதிக்கப்பட்டு, 10 பேர் முற்றாக நோய் நீங்கிய நிலையில் ஒருவரே மரணமடைந்துள்ளார். இது சர்வதௌச ரீதியில் 18% ஆக இருக்கையில் இலங்கையில் 9.1% ஆகவுள்ளது, சீனாவில், இது 4.19% ஆகும்.
அத்துடன், நோய்வாய்ப்பட்டவர்களில் இறந்தவர்களின் சதவீதம் சர்வதேச ரீதியில் 4.65% ஆகவுள்ள நிலையில், எமது நாட்டில் 0.87% மாத்திரமே, இது சீனாவில் 4.05% ஆகும்.

மேலும் நோயுடனுள்ளவர்களில் மோசமான நிலையிலுள்ளவர்களின் சதவீதத்தைக் கணக்கிட்டால், உலகில் 5.13% உம் இலங்கையில் 4.76% உம் அமெரிக்காவில் 2.25% உம் சீனாவில் 27.57% உம் ஆகும்.

இதே வேளை, இலங்கையில் கொரோனாவால் இறந்தவர் 60 வயதுக்கு மேற்பட்டவர் மாத்திமல்லாமல், இவர் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்தவர், அதனால் அவர் நோய் எதிர்ப்பு சக்தி (Immune) குறைந்தவர் என்பது புரிகிறது,

எனவே, உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கையின் நிலை சிறப்பாகவேயுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை இங்கு 1800 பேருக்கு ஒரு வைத்தியர் என்ற ரீதியில் தான் உள்ளது, ஆனால், அமெரிக்காவில் 430 பேருக்கும், சீனாவில் 660 பேருக்கும், பிரித்தானியாவில் 450 பேருக்கும் ஒரு வைத்தியருள்ளார், எல்லாவற்றையும் விட உலகமே தற்போது பேசும் 170 பேருக்கு ஒரு வைத்தியரைக்கொண்ட கியூபாவுடன் எமது நாட்டை ஒப்பிட்டால் அங்கு நோய்த்தொற்று காணப்பட்ட 119 பேரில் 04 பேரே பூரண குணம் பெற்றுள்ளனர். மற்றும் 03 பேர் தயாரித்துள்ளனர்.
எனவே, நாம் உயர்ந்த நிலையிலுள்ளோம் என்பதை ஏற்று இன்னும் சிறப்பான நிலையையடைய எமது பங்களிப்பைச்செய்ய வேண்டும்.

அரசாங்க ஆலோசனைகளையேற்று ஊரடங்குச்சட்ட கட்டுப்பாடுகளை மக்கள் பேணுவார்களெனில், இங்கிருந்து மிக வேகமாக கொரோனாவை விரட்ட முடியும். அதிலும் முஸ்லிம் பிரதேசங்கள் சிலவற்றில் சில உத்தரவுகளை மீறுவதாகத் தெரிவிக்கப்படுவது கொரோனாவிற்கு காரணியாக முஸ்லிம்களை குற்றஞ்சாட்டும் நிலையேற்படலாம், முஸ்லிம்கள் அதிகம் நம்பியுள்ள முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களே முஸ்லிம்களைக் குற்றஞ்சாட்டிய பதிவுகளும் உள்ளன. ஆனால், அதிமேதகு ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச எவரது பிழையையும் பெரிது படுத்தாமல், நாட்டையும் மக்களையும் காப்பாற்ற அடுத்த கட்ட நடவடிக்கைகளைச் செய்வதைப்பாராட்டாமல் இருக்க முடியாது.

வெளிநாடுகளிலிருந்து அண்மைக்காலத்தில் வந்தவர்கள், அவர்களுடன் பழகியவர்கள் தங்களை வைத்தியசாலைகளில் பரிசோதித்து தனிமைப்படுத்தலை மேற்கொண்டால் யாருக்கும் எந்தப்பிரச்சினையுமில்லை. கொரோனா தொற்றுள்ளவர் என அடையாளங் காணப்பட்ட ஒருவர் எத்தனையோ பேரைச்சந்தித்திருக்கலாம். அப்படியான ஒருவரைச் சந்தித்தவர்கள் தானாகவே முன்வந்து தனிமைப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும், அதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம் வழங்குகிறது, இது வெட்கப்படும் சமூக நோயல்ல என்பதை மனதிற்கொள்ள வேண்டும். நம்மை நாமே காத்துக்கொள்வதால் ஏனையோரையும் நாம் காப்பாற்றுகிறோம்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை 30 நாட்கள் நோன்பிருந்து பழக்கப்பட்டுள்ளோம், இஃதிகாப் என்று பல நாட்கள் பள்ளிவாயலில் நாமாகவே தனிமைப்படுத்தி இருந்திருக்கிறோம். இவற்றிற்கு பழகிய நாங்கள் எங்களுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் வீட்டிலிருப்பது என்பது கஷ்டமான காரியமேயல்ல.

முஸ்லிம்களின் ஆடைகளை எதிர்த்த உலக நாடுகள் அனைத்துமே அதை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்து விட்டன, எனவே, இருக்கும் உணவைப் போதுமாக்கி வீட்டில் தரித்திருந்து அரசாங்கம் சொல்லும் விடயங்களைச் செய்தோமென்றால், நோய் தொற்றா நிலைக்கு நாமும் பங்களிக்கலாம்.

இறுதியாக, அல்லாஹ் இரக்கமுள்ளவன், மனிதர்களை ஒரு எல்லைக்கு மேல் சோதிக்கமாட்டான், வீணாக அழிக்கவும் மாட்டான், எதிலும் ஒரு படிப்பினையை நமக்குத்தருவான். கடந்த காலங்களில் அரபு வசந்தம் என்ற பெயரிலும் உள்நாட்டு யுத்தங்களிலும், வறுமையினாலும் பல உயிரிழப்புகளைக்கண்ட லிபியா, சிரியா, கொங்கோ, சோமாலியா போன்ற நாடுகளில் கொரோனா அழிவில்லை என்றளவுக்கு மிக சொற்பமானவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்,

உலகில் 22 பேருக்கு ஒரு வைத்தியர் என உள்ளதும் நாட்டின் சனத்தொகையை விட வாகனங்கள் அதிகமுள்ளதுமான ஐரோப்பிய நாடான San Marino வில் 22 பேர் கொரோனாவால் இறக்க 50000 பேருக்கு ஒரு வைத்தியருள்ள தன்சானியாவில் அதை விட குறைந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதே நமக்கெல்லாம் பாடமாக அமையட்டும்.

தற்போது இன, மொழி, பேதமின்றி நாட்டு மக்கள் பழகும் நிலையேற்பட்டுள்ளது, ஏனைய இனத்தவர்களுக்கு உணவுப்பொதிகளை சேர்த்துக்கொடுக்கும் வேலையைப் பள்ளிவாயல் நிர்வாகங்கள் செய்வதை விட சட்டத்தை அனுசரித்து நடக்க ஊருக்கு வழிகாட்ட வேண்டும்.

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச தலைமையிலான கொரோனா ஒழிப்பு செயலணி மக்களுக்கான பல விடயங்களைச் செய்கிறது, அவர்களது தொடர்பை பள்ளிவாயல் நிர்வாகங்கள் பேணிக்கொள்ளட்டும்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed