Main Menu

அனர்த்தங்களை எதிர்கொள்ளத்தயாராவோம் : உணவுப்பற்றாக்குறையைத் தீர்க்க வழி என்ன? – Dr MB. ஹாலித்

இந்த செய்தியைப் பகிர்க >>>

பணம் பணம் என அலைந்து அழிந்து கொண்டிருந்த மனிதன், உணவு உணவு என அத்தலைந்து கொண்டிருக்கிறான். விவசாயிகளும் உணவு உற்பத்தியாளர்களும் உயர்வானவர்கள் மேன்மை தங்கியவர்கள் என்பதை மீண்டும் மனிதன் உணரத்தொடங்கியிருக்கின்றான்.

கொரோனா மனிதன் மனதில் அதன் நோயின் பயம் என்கின்ற தாக்கத்ததை விட உணவுக்கு என்ன செய்வதென்ற அச்சத்தையும் தாக்கத்தைத்தான் அதிகமதிகம் ஏற்படுத்தியிருக்கின்றது. உணவுப்பஞ்சம் எதிர்பார்க்கப்படுவதாக பொருளியலாளர்கள் கருத்துத்தெரிவிக்கின்றார்கள்.

உலகம் பூராகவும் உணவை கவனமாகப் பயன்படுத்தவும், நுகர்வைக்குறைக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும் ஆவண செய்யப்படுகின்றது .

பேஸ்புக்கிலும் வட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் இருந்து கொண்டு அதனைச்செய்ய முடியாது.களங்காண வேண்டும்.

உணவுப்பஞ்சம் ஏற்படும் முன்னர் நாம் என்ன செய்ய வேண்டும்?, எவ்வாறு தன்னிறைவான சமூகமாக மாற வேண்டுமென திட்டமிட்டு முகாமைதத்துவம் செய்வதன் மூலம் இக்கஸ்ட காலத்தை இலகுவாகக் கடக்கக்கூடியதாகவும், தவிர்க்க முடியாத முக்கிய தேவையான உணவுக்காக முண்டியடித்து சாவதிலிருந்தும் தவிர்ந்து கொள்ளலாம்.

யாரும் யாருக்கும் நீண்ட நாட்களுக்கு மேல் உதவ முடியாமல் போகலாம், பணம் பெறுமதியற்றதாக மாறலாம். பணக்காரர்கள், படித்தவர்கள், ஏழைகள் என்ற பாகுபாடின்றி மிக அவசரமாக அனைவரும் தயாராக வேண்டியது அவசியமாகின்றது.

திட்டமிடலுக்கு முன்பதாக நுகர்வைக்குறைத்தலும், தற்சார்புமே மிக அவசியமானது. அவையே எம்மை மிகப்பெரிய உணவுப்பஞ்சம் ஏற்படும் போதும் பாதுகாக்கக்கூடியது.

முதலில் நாங்கள் சாப்பிடும் உணவின் அளவுகளைக் கட்டாயம் குறைத்துக்கொள்ள வேண்டும். உண்மையாக நாங்கள் ஒரு நாளின் உடலியக்கங்களின் தேவைக்கதிகமாகவே உண்டு வந்தோம். அதனை கொஞ்சம் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.

உணவு உற்பத்தி செய்ய பெரிய விவசாயியாக மாற வேண்டிய தேவையுமில்லை. பெரும் பெரும் இடங்கள் தேவையுமில்லை. சிறிய இடம் போதுமானது. வீட்டுத்தோட்டம் மிகச்சிறப்பாகத் திட்டமிடப்படும் போது மிகப்பரந்த பலனைத்தரும். கவனிப்புக்குறைந்தளவில் தேவையான இயற்கையாலும் நோயாலும் பாதிக்கப்படுவது குறைந்த பயிர்களையும், விலங்குகளையும் வளர்த்தலே பிரதானமானது.

இடத்தைப்பொறுத்து நாட்டுக்கோழி, காடை, வாத்து, வான் கோழி போன்றன வளர்ப்பதற்குப் பொருத்தமானது. இதனால் மிகவும் போசனை நிறைந்த முட்டைகள் கிடைப்பதோடு, இறைச்சியையும் பெற்றுக்கொள்ளலாம். எந்தவொரு கடினமான காலத்தையும் மிகச்சிறந்த போசனையுடனும், புரதமும் நிறைந்த உணவுடனும் கடத்திச்செல்ல முட்டைகள் மிகச்சிறந்த அடிப்படை உணவு. 3-4 பேருள்ள குடும்பத்திற்கு 20 நாட்டுக்கோழிகள் இருந்தால் என்றுமே கறிக்கு பஞ்சம் ஏற்படப்போவதில்லை.

முட்டைகளை விற்றுக்கொள்ளவும் பண்டமாற்றுச் செய்தும் உணவுத்தேவையை என்றும் பூர்த்தி செய்யலாம். அத்தோடு, கோழிகளுக்கு வெளியிலிருந்து தீவனம் கொடுத்து தீவனச்செலவையும் கூட்டிக்கொள்ள வேண்டியதில்லை. வீட்டில் கிடைக்கும் உணவுப்பொருட்களின் மீதிகள், மார்க்கட், கடைகளில் கிடைக்கக்கூடிய உணவுக்கழிவுகள், வெள்ளாமை அறுவடையின் போது கிடைக்ககூடிய பதர் நெல், அரிசி ஆலை தானியமிகுதிகள் போன்றன உணவாகப் பயன்படுத்தப்படும் போது, தீவனச்செலவு குறையும், அத்தோடு, புளு பூச்சிகள் (கறையான்) போன்றன உருவாகக்கூடிய இடங்களை கோழிகள் மேயக்கூடிய இடங்களில் உருவாக்கிக்கொள்ளுங்கள்.

எனவே, செலவு குறைந்த முறையில் இவற்றை நாங்கள் மேற்கொள்வதால் பூரண பலனை அனுபவிக்கலாம். கஸ்ட காலத்தையும் சமாளிக்கலாம். மிகச்சிறிய இடமேயுள்ளது. இடமே இல்லையென்றாலும், கொஞ்சம் காடைகளையாவது வளர்ப்பதுடன், அருகிலுள்ள பயன்படுத்தப்படாத இடங்களை இரவல் வாங்கி பயிர்ச்செய்கைப் பண்ணை அமைப்பது சாலச்சிறந்தது.

வீடுகளில் சில பயிர் வகைகள் மிக இலகுவாகப் பராமரிக்கக்கூடியவை. பயன் தரக்கூடியவை. அப்பயிர் வகைகள் எல்லாக்காலங்களிலும் பயன்தரக்கூடியதாகவும், பல வகையான பயன்களைக்கொண்டதாகவும் இருக்கும் போது, அவை உணவுத்திட்டமிடலில் சிறப்பான விளைவை ஏற்படுத்தும். அவை குறுகிய காலப்பயிர்களாகவும் நீடித்து நிலைத்து பயந்தரக்கூடியதாகவும் இருக்கும் போது, தொடர்ச்சியான பலனை ஆண்டு பூராகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

அந்த வகையில், மர வகைப்பயிர்களில் முக்கியமாக முருங்கை, அகத்தி, வாதமடக்கி, முள்முருங்கை, கீரை வகைகள் முக்கியமானவை. அத்தோடு, தூதுவலை, சுரைக்கொடி, பாகற்கொடி போன்ற கொடி வகைகள் கீரைகளுக்களுக்காகவும் இலகுவாக வளர்த்துப் பயன்பெறலாம்.

பப்பாளி, வெண்டி, வல்லாரை, இரம்பை, அலொவேரா போன்றன மிகச்சாதாரணமாக வளரக்கூடியன பராமரிப்பும் மிக இலகுவானது. நல்ல பலனையும் தரக்கூடியவை. அவரை இனப்பயிர்கள் மண்ணுக்கும் எமக்கும் மிகச்சிறந்தவை. சிறந்த போசனைகளையும் புரதத்தையும் தருவதோடு, பராமரிப்பும், இலகுவானது. நல்ல மகசூலையும் பெற்றுக்கொள்ளலாம்.

அதில் சிறகவரைக்கொடி, கொத்தவரை போன்ற பல வகைகள் உள்ளன. வீடுத்தோட்டத்தில் மிக முக்கியமாக இருக்க வேண்டிய தாவரங்கள் இவை. சிறுபிள்ளைகளின் புரதச்சத்து தேவையை மிகவும் வினைத்திறனாக சமாளிக்கக்கூடியவை. அத்தோடு, இவ்வகையான பயிர்களின் வித்துக்களில் அண்டியொக்சிடன், சிங்க் போன்றன காணப்படுவதால் நோயெதிர்ப்பு சக்தியை உங்கள் பிள்ளைகளுக்கும், உங்களுக்கும் கூட்டக்கூடியது.

கொஞ்சம் இடம் அதிகமாக இருந்தால் வாழை மற்றும் சில பழ மரங்களும் நட்டுக்கொள்ளல் சிறந்தது. வாழை, மா, பலா, கொய்யாப் பழங்கள் மிகவும் சிறந்தவை. அனைத்துசூழலிலும் தாங்கி வளரக்கூடியவை மிகச்சிறந்த விட்டமின்களினதும் , கணியுப்புக்களினதும் உறைவிடம் அவை.

அத்தோடு, தோடை இனத்தைச்சேர்ந்த ஒரு செடி இருக்கும் போது, நோயெதிர்ப்பு சக்தியைத்தூண்டும் விட்டமின் சீ யை இலகுவாகப் பெறக்கூடியதாக இருப்பதோடு, இவ்வகை மரங்கள் இலகுவாக வளரவும், பலன் தரவும் கூடியன. விரைவாகவும் அதிகமாகவும் பலன் தரக்கூடிய உங்கள் பகுதிகளுக்குப் பொருத்தமான தோடை இனப்பயிர்கள் எவையெனக்கண்டரிந்து நடவு செய்யுங்கள்.

வட்டக்காய் ,வற்றாலைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, பனங்கிளங்கு போன்றன. இலகுவில் பலன் தரக்கூடியவை அவற்றை வீட்டுத்தோட்டங்களில் தவிர்ந்து கொள்ளுதல் கூடாது. ஈரலிப்பான சூழலிலுள்ளவர்கள் பலா மரத்தை அதிகமதிகம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அவற்றை உருவாக்கக்கடினமான பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிகமதிகம் அதன் விளைபொருட்களை அனுப்புதல் வேண்டும்.

நாம் ஏற்கனவே கூறியது போல, எமது வீட்டின் கோழி போன்ற விலங்குகளின் எச்சங்கள், வீட்டுக்கழிவுகள் சேதனப்பசளையாக மேற்கண்ட பயிர்களுக்குப் பயன்படுத்த முடியும். அத்தோடு, மாட்டெரு எடுத்து எமது வீட்டுத்தோட்டத்தில் சேமித்தால் மண் மிகவும் சிறப்பாக வளம் பெறுவதோடு, கோழிகளின் உணவுக்கான பூச்சி இனங்கள் உருவாகவும் ஏதுவாகும்.

முடியுமானவர்கள் இயற்கை உரங்கள், இயற்கைப்பூச்சி மருந்துகள் தயாரிக்கவும் பழகிக்கொண்டால், இவ்வகையான தோட்டங்ககளைப் பராமரித்தலும் இலகுவானதோடு, ஜீரோபட்ஜட் எனப்படும் செலவில்லாத உணவுற்பத்தியை நோக்கி நகர முடியும். கழிவுகள் மீள் சுழற்சியும் அடைவதால் கழிவு மேலான்மையும் சிறக்கும்.

பெரிய தோட்டங்கள் வைத்திருப்போர் அவற்றைப்பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். நிலங்களைப் பயன்படுத்தாமல் வைத்திருத்தல். அதிலும், நீரேந்துப் பகுதிகளிலுள்ளவர்கள் பயன்படாமல் வைத்திருத்தல் எங்கோ ஒரு மூலையில் பட்டினியை ஏற்படுத்தும். எனவே, மிகவும் வினைத்திறனாகப் பயன்படுத்த வேண்டும். முடியாவிடில் பயன்படுத்தக் கூடியவர்களுக்கு இலவசமாகப் பயிர்ச்செய்கைக்காக வழங்க வேண்டும்.

விவசாயிகள் தனிப்பயிர் செய்வதிலிருந்து கொஞ்சம் விடுபட்டு, தனிப்பயிரோடு சேர்த்து கலப்புமுறைப்பயிர்களும், ஆடு, மாடு, பறவைகளையும் சேர்த்து இணைந்த விவசாயத்திலும் கவனஞ்செலுத்தி, ஒருங்கிணைந்த பண்ணையாக மாற்றிக்கொள்ள வேண்டும். இதனால் ஏற்படப்போகும் உணவுப்பஞ்சத்தை சமாளிப்பதோடு, நஸ்டம் ஏற்படுவதைத் தவிர்த்து நல்ல வருமானத்தையும் பெறலாம்.

ஒருங்கிணைந்த பண்ணையொன்றை இலகுவாக எவ்வாறு உருவாக்குவது? சம்பந்தமாக அருகிலுள்ள விவசாய அதிகாரியை அணுகி தெரிந்து கொள்வதோடு, வலைத்தளங்களிலும் அறிந்து கொள்ள முடியும்.

அத்தோடு, விவசாயிகள் தமது நிலத்தில் உச்சபலனை அடைந்து கொள்ள வேண்டும். பயனற்ற மரங்களில் கொடி வகை பயிர்களைப்படரவிடல், பெசன்புரூட் போன்ற கொடிகளைப்படரவிடல், தென்னங்காணிகளை ஒருங்கிணைந்த பண்ணையமாக மாற்றிக்கொள்ளல், குறுகிய காலப்பயிர்கள், ஆண்டுப்பயிர்கள், மிகப்பெறுமதியானதும் உணவுப்பிரச்சினைக்கான காலம் நீழும் போது, அதனைச்சமாளிக்கவும் உதவும் முறைகளாகும்.

கச்சான், வட்டக்காய், வற்றாலைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, பனங்கிழங்கு போன்ற உங்கள் பிரதேசத்தில் இலகுவாக பயன் பெறக்கூடிய பயிர்களை இனங்கண்டு அவற்றை நடுதலோடு, அனைவரையும் ஊக்கப்படுத்தலும், பல வழிகளில் அடுத்தவர்கள் உருவாக்க உதவுதலும் சிறந்தது.

அத்தோடு, விவசாயிகள் முடியுமானளவு விதைகளையும், நாற்றுக்களையும் உருவாக்கி அடுத்தவர்களுக்கு அன்பளிப்பாக அல்லது சிறிய இலாபத்தில் மக்களுக்கு வழங்குதல் இன்னும் சிறப்பானதாக இருக்கும்.

அதிகமான மகசூல் நிகழும் போது, அவற்றை விற்பனை செய்ய முடியாமல் போனால், பள்ளிகளில் அல்லது சமூக நிறுவனங்களைத்தொடர்பு கொண்டு ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்தல் மிகவும் பெரிய நன்மையாக அமையும். இதனை ஏற்கனவே திட்டமிட்டுக்கொண்டால், இலகுவாகச் சமாளிக்கலாம்.

வீடுகளிலோ தோட்டங்களிலோ, பொது இடங்களிலோ மரங்கள் பராமரிக்கப்படாமல் இருந்தால் அவற்றை சிறிது கவனமெடுத்து பராமரிக்கும் போது, ஏதாவதொரு வகையில், அவை எமக்குப்பலன் கொடுக்கக்கூடியதாக மாறுவதோடு நல்ல நன்மையான காரியமாகவும் அமையும்.

பள்ளிவாசல், தொண்டு நிறுவனங்கள் பொதுத்தளங்களை வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்கு முன்வர வேண்டும். குளங்களில், நீர் நிலைகளில் மீன்குஞ்சுகளை விடுதல் பரமரித்தல், பொதுத்தோட்டங்களை தனியாருடன் இணைந்த அடிப்படையில் ஒப்பந்தத்தில் பராமரித்தல் போன்ற பல செயற்பாடுகளை இக்காலத்தில் வேண்டி நிற்கின்றோம்.

மேற்குறிப்பிட்ட கொரோனா நோயின் தாக்கத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகளையும் தாண்டி உலக சனத்தொகை அதிகரிப்பும், அதிநுகர்வுக்கலாசாரமும் மிகவும் பெரிய சூழல் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதனால், உலகம் அடிக்கடி அனர்த்தங்களைச் சந்திக்குமென எதிர்வுகூறப்படுகின்றது. எனவே, எமது மேற்குறித்த செயற்பாடுகள் வீரியமாகச் செயற்படுத்தப்படும் போது, அனர்த்தங்களைச் சிறப்பாக எதிர்கொள்ளவும், அனர்த்தங்கள் ஏற்படுவதைக் குறைப்பதற்கான ஏதுவான வழியாகவும் இருக்கும்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed