Main Menu

செய்திகள்

புனானையில் வெளி மாவட்டத்தைச்சேர்ந்தோர் கிறவல் அகழ்வு – வனவள அதிகாரி எஸ்.தணிகாசலம்

எஸ்.எம்.எம்.முர்ஷித் மட்டக்களப்பு கிரான் வட்டார வனவள பகுதியான புனானை பிரதேசத்தில் வெளி மாவட்டத்தைச்சேர்ந்தோர் கிறவல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பிரதேச வனவள அதிகாரி எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.

தமது அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் மகாவலி பி வலய அதிகார சபையின் அனுமதிப்பத்திரத்தினை வைத்துத்துக்கொண்டு கிறவல் அகழ்வு பணி மற்றும் விற்பனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்தார். நேற்று புதன்கிழமையன்று குறித்த கிறவல் அகழ்வு பணியினைத்தடுத்து நிறுத்துமுகமாக வாழைச்சேனைப் பொலிசாரின் உதவியுடன் தமது வன அதிகாரிகள் அவ்விடத்திற்கு கள விஜயமொன்றினை மேற்கொண்டிருந்ததாகக் கூறினார்.

இதன் போது கனரக வாகனங்கள் சில கிறவல் ஏற்றிக்கொண்டிருந்ததை அவதானித்து அவர்கள் தன் வசம் வைத்திருந்த ஆவணங்களைப் பரிசோதனை செய்திருந்தனர். இதன் போது குறித்த பிரதேசம் மகாவலி அதிகார சபைக்குட்பட்ட பிரதேசமாக கணித்து கிறவல் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக நிர்வாக சிக்கல் உள்ளதால் இதனைத்தீர்க்க நீதிமன்ற அனுமதியினைப்பெறும் நடவடிக்கையுள்ளதாகவும் அதுவரை இப்பிரதேசத்தில் கிறவல் அகழ்வுப்பணியினை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு சம்பந்தப்பட்டோர்களைப் பணித்துள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன், தமது நிர்வாக சிக்கல் தொடர்பாக நீதி மன்றமூடாக தீர்வைப் பெற்றுக்கொள்ள வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினைப் பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.