Main Menu

நிழல் பலகை -01 -“மொடர்ன் பெயிண்டர்” மீராவோடை LTA.சஜ்ஜாத்

இந்த செய்தியைப் பகிர்க >>>
எஸ்.எச்.எம்.ரபிதீன்.
“மொடர்ன் பெயிண்டர்” மீராவோடை LTA.சஜ்ஜாத்

மொடர்ன் பெயிண்டர் சஜ்ஜாத் கல்குடாவின் தூரிகைகளின் பிதாமகன். எமக்கு கிடைத்த வண்ணமயமான சொத்துக்களின் மிகப்பெரிய சொத்து  இந்த ஓவியர்.
பார்ப்பதற்கு கிரேக்க தத்துவஞானி ‘அரிஸ்டோடில்’ போன்ற தாடியும் – ஹேர்லி முடியுடன் ஒரு படைப்பாளிக்கேற்ற ரேட்மார்க் கலைஞனின் முகத்தோற்றம். அனாவசிய அரட்டை அற்றவர்களில் இவரும் ஒருவர்.

யாரிடமும் அதிகமாகப்பேசியது கிடையாது. இவருடைய மிகப்பெரிய அடையாளம் ஒரு ஓவியத்தின் தத்துவத்தை உணர்த்தும் மெல்லிய புன்னகை. சர்ச்சைகள் என்ற பெயருக்கே இடமில்லாதவர். கலை, கல்வி என சுயமாக உருவாக்கி, வெற்றி கண்ட குடும்பப் பின்னணியில் திகழும் ஒரு ஓவியர்.

தொழிலுக்கு அப்பால் நுட்பமான கற்பனைத் திறனோடு, தனது கலைப் பயணத்தைத் துவக்கி வைத்த சஜ்ஜாத்தின் பயணம் இன்றுவரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

கணனி தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே தனது ஓவியங்களில் டிஜிட்டல் முறையில் – 3D வடிவமைப்பைப் புகுத்தி ஓவியங்களிலும், எழுத்து வடிவங்களிலும் விசித்திரமான யுக்தியைக் கையாண்டு வர்ணத்தில் புரட்சியை உண்டு பண்ணியவர்.

இவருடைய கைகள் தீட்டாத ஓவியங்களும், எண்ணற்ற விளம்பரம் பலகைகளும் இல்லாத இடமே இருக்க முடியாது. வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் கூட இவருடைய கையினால் தீட்டப்பட்ட ஒரு விளம்பரப் பலகையை சில வருடங்களுக்கு முன்பு காணக்கிடைத்தது.

ஒரு ஓவியனுக்குரிய அடையாளம். “கருவிலிருக்கும் குழந்தை பிறந்து தவழ்ந்து வளர்ந்து அது தத்தி தாவி நடக்கும் அழகு போன்றதாகும்”. அது போன்றே, இவருடைய கைகளில் இருக்கும் தூரிகையின் முடிவில், அது என்னவென்பதை யூகிக்க முடியும். அந்தளவிற்கு ஒரு இயல்பான தேர்ச்சியும் முதிர்ச்சியும் அவருடைய தனித்துவமான வர்ணப் படைப்புகளில் நாம் பார்க்க முடியும்.

சஜ்ஜாத்துக்கு என்று ஒரு தனி மரியாதை எனக்குள் உண்டு. ஆரம்ப காலத்தில் அவருடைய பயணம் தொடங்கிய இடமெல்லாம் என் பார்வை பட்டுச்சென்றது. ஆச்சரியமும் பிரமிப்பும் கலந்த அந்த நாட்களை மறக்கவே முடியாது.

புகழுக்கும் பெருமைக்கும் பெயர் போன இந்த படைப்பாளியின் உடல் நடையிலும், மொழி நடையிலும் ஒரு துளிகூட பெருமையை நாம் காண முடியாது. இவருடைய எண்ணக்கரு மொத்தமும் தத்துவங்கலாளே நிரம்பி கிடக்கின்றன.

கல்குடாவின் சிகரம் தொட்ட ஓவியக்கலை படைப்புகளின் முக்கியமான ஒரு நாயகன் சஜ்ஜாத் என்றால் மிகையாகாது.

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களில் இவரும் ஒருவர். அண்மையில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அதில் நூறு சாதனையாளர்கள் எனத்தெரிவு செய்து, அவர்களுக்கு விருதுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. ஆனால், சஜ்ஜாத் என்ற பெயர் அதில் இடம்பெறவில்லை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?.

அதைப்பற்றிய எனது கருத்தையும் குமுறல்களையும் வேதனையாக அவரிடம் பதிவு செய்தேன். அதற்கும் அவர் அலட்டிக் கொள்ளவில்லை. அங்கு தான் அவருடைய பெருந்தன்மையை அறிந்து கொண்டேன்.

புறக்கணிப்பு அப்பால் இவர் வாழ் நாள் சாதனையாளர். எம்மைப் பொறுத்தவரையில் வர்ணங்களோடு வாழும் தந்தை அரிஸ்டோடில் இவர் என்பேன். சஜ்ஜாத் போன்றோரை மிகச்சரியான வரலாற்றுப் பதிவில் வைத்துருப்பது காலத்தின் கட்டாயப்படுத்தலில் தேவைப்பாடாகவுள்ளது. அதுவே மாபெரும் கலைஞர்களுக்கு நாம் தரும் மரியாதை.

அது மட்டுமன்றி, ஒரு சஞ்சிகை ஆசிரியராக மீராவோடை மண்வாசனையில் “ஓடை” கையெழுத்து சஞ்சிகையை வெளியிட்டு எழுத்துப்பணியை முன்னெடுத்த ஒருவராகவும் திகழ்கிறார்.

அந்நாட்களில் அவரது பேனாவும் தூரிகையும் ஓய்வாக இருந்த நிமிடங்கள் குறைவே.

மரியாதைக்குரிய சஜ்ஜாத் அவர்களை நான் எப்படிப் பார்க்கின்றனோ, அது போன்றே நம் கல்குடாவின் சூழலில் வாழும் அதிகப்படியான மக்களும் அவரைப் பார்க்கின்றனர். எனது நிழல் பலகையில் சஜ்ஜாத்தைப் பற்றிய ஒரு சில குறிப்புகளைத் தொகுத்தமைக்கு நான் பெருமையடைகிறேன்.

நமது கல்குடாவில் வாழும் கலை பொக்கிஷங்கள் அடையளப்படுத்தி அவர்களை வாழ்த்துவோம்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed