Main Menu

நிழல் பலகை-2 “மக்கத்து சால்வையின் தந்தை” எஸ்.எல்.எம்.ஹனிபா

இந்த செய்தியைப் பகிர்க >>>

SHM.ரபிதீன்
“மக்கத்து சால்வையின் தந்தை” எஸ்.எல்.எம்.ஹனிபா

சோடா புட்டி செதுக்கிய மூக்குக்கண்ணாடியும், அரை கைச்சட்டையும் – காடு, மேடு, கரை, காற்று தொட்டு ஊரெல்லாம் தன்னோடு உலாவும் ஒரு சின்னஞ்சிறு துவிச்சக்கரம்!. பஞ்சு வர்ண முடியோடு நெஞ்சம் முழுதும் வஞ்சமின்றி வாஞ்சையோடு வார்த்தை பேசி வாசல் தேடி வாசம் பூக்கும் இலக்கியத் தோன்றலின் இன்னும் மங்காமல் ஒலிரும் கல்குடாவின் கலங்கரை விளக்காம் ‘எஸ்.எல்.எம்.ஹனிபா’.

இயற்கை தந்த நமது மிகப்பெரிய இலக்கிய சொத்தான ‘மக்கத்து சால்வையின்’ தந்தை. இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்திலும் பேசப்படும் சிறுகதைகளின் ஆளுமை. அரசியல், கலை, கலாசாரம் எனும் தோன்றலின் விசித்திரப்பிறவி இவர்.

கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிறந்த படைப்பாளிகளில், இயக்குனர் பாலுமகேந்திராவுக்கு அடுத்து என் மனதிலிருக்கும் ஒரே ஜீவன். ஹனிபா மாமாவாகும்.

குறுகிய காலத்தில் நான் அவருடைய படைப்புகளைத்தேடி விரைந்தாளும் அவசர அவசரமாகச்சென்று, அவருடைய விசிறியாக ஒட்டிக்கொண்டேன்!.

இவருடைய இலக்கிய வாழ்க்கை தாண்டி சிறு சுவாரசியமும் உண்டு. வயதுக்கும் அனுபவத்துக்கும் அப்பால் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை மதம் கடந்த நண்பர்களையும் விசிறிகளையும் அதிகமாக சம்பாதித்து கொண்டவர். அதில் இன்புற்று இன்னுமின்னும் இளமை தேடி ஓடிக்கொண்டிருக்கும் ஓர் இளைஞன் இவர்.

வித்தியாசமான பிடிப்பு, வித்தியாசமான எழுத்து நுட்பம். மதம் தாண்டிய மனித நேயம் – கடல் தாண்டிய நட்பு உலகம் என்று தனக்கென்று தடங்களை உருவாக்கிக் கொண்டதால், இலக்கியவாதிகள் முதல் கடைக்குடிமகன் வரை மாமாவின் தோழமை சொத்துக்கள் ஏராளம்.

எமது நாட்டின் யுத்தம் பிரித்து எரிந்த மதம், மொழி, கொள்கை என்பவற்றை இவர் உடைத்தெறிந்து
‘என்னுடைய ஆசான் – என்னுடைய – நண்பன் – என்னுடைய மாணவன் – என்னுடைய சொந்தம் – என்னுடைய பந்தம்’ என கடந்து வந்த பாதையின் சுவடுகளை அவ்வப்போது இவர் நினைவூட்டும் போதெல்லாம் இந்த அருமையான மனிதரின், மனிதத்தின் ஆச்சரியங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

‘பச்சையை, இச்சை கொண்டு நேசிக்கும் நடமாடும் கவிதை, பசுமையின் பிடிவாத பித்தன் என்று கூட இவரைக்கூறலாம். தனது நேரம் – காலத்தை இயற்கையோடு ரசிக்கும் ஒரு ரசிகன் என்பதனாலவோ என்னவோ இவருடைய படைப்புகள் இன்னும் செழிப்பாக ஓங்கி நிற்கின்றன.

இம்மண்ணின் சிறுகதை தளத்தை உலக அரங்கில் கொண்டு சென்ற இந்த திறவுகோலின் வரலாற்றுக்கு பின்னரே அதிகளவில் இலக்கிய, படைப்பாளிகள் நம் சூழலில் உள் நுழையத் தொடங்கினார்கள். அத்தோடு, ஒரு தைரியமான தன்னம்பிக்கையின் உந்துதலின் ஆணி வேராக இருந்து வழி நடத்தியவர் எஸ்.எல்.எம்.ஹனிபா மாமா என்பதையும் யாராலும் மறுக்க முடியாது.

அரசியல் பார்வையிலும், இலக்கியப் பார்வையிலும் அப்பட்டமான கருத்தாற்றல்களை எவருக்கும் அஞ்சாமல் மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் துணிவு கொண்ட மூத்த ஆளுமையும் இந்த மனிதர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேடிச் சோறு நிதந்தின்று-பல சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம் வாடித்துன்பமிக உழன்று-பிறர்வாடப் பல செயல்கள் செய்து- நரை கூடிக்கிழப்பருவம் எய்தி – கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?

பாரதியின் இந்தக்கவிதையின் கூற்றுக்கு ஏற்றாட்போல் இவர் இனி வீழவேமாட்டார். பூமி காணாமல் போகும் வரை, அவருடைய மனிதமும், படைப்புக்களும் அவரை வாழ வைத்துக்கொண்டே இருக்கும்.

மனிதம் போற்றும் மானிடர்- இயற்கையின் இருதயம், ஹனிபா மாமாவின் நிஜங்களில் சில துளிகள் எனது நிழலில் சங்கமிக்க, அந்த மாபெரும் கலைஞனின் ஆயுளையும், மறுமையின் வாயிலையும் விறுச்சமாக்கி இறைவன் கொடுத்தருள வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.

எனது நிழல் பலகையின் நினைவூட்டலில் ஹனிபா மாமாவைப் பற்றிய என்னுடைய பதிவின் ஓட்டம் அதிகப்பிரசிங்கத் தனாமாகவே தோன்றினாலும், அவரைப்பற்றி எழுதுவதற்கு, எனக்கு போதிய தகுதியில்லை என்பது மட்டும் உண்மை.

அவருடைய பல்லாயிரக்கணக்கான விசிறிகளில் நானும் ஒருவன் என்ற தைரியத்தில் பதிவிடுகின்றேன். “வானத்தில் பிரகாசமாக ஒளிரும் நட்சத்திரத்தைப் பூமியில் நின்று வேடிக்கை பார்க்கும் மனிதர்களில் நானும் ஒருவன் எனும் மகிழ்ச்சியில் பெருமையும் அடைகின்றேன்”.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed