Main Menu

நிழல் பலகை -தொடர் 03 – வாழைச்சேனை ஏ.ஜீ.எம் சதக்கா

இந்த செய்தியைப் பகிர்க >>>

ரபிதீன்.
“சிலர் வாழ்ந்து மரணிக்கின்றனர். சிலர் மரணித்தும் வாழ்கின்றனர்” அவ்வாறு மரணித்தும் மனிதர்களின் உள்ளங்களில் நீங்காது இடம்பிடித்த மனிதர் தான் ‘சதக்கா’ சேர்.

கல்குடாவின் இலக்கியத்துறையிலும் கல்வியின் மாற்றத்திலும் தன்னை அர்ப்பணித்து வித்திட்ட ஓர் மனிதர்.

ஒருவரின் வாழ்க்கைத் தோன்றலின் தனக்கென்று சேர்த்துக்கொண்ட விடயங்களில் நல்ல குணமும், நற்பண்பும், மக்கள் நலன் போன்றவைகள் மட்டுமே பிற்பாடு அவருடைய வாழக்கை முடிவிலும் முற்றுப்பெறாமல் பேசப்படுகின்றது. இன்றுவரை அவ்வாறு பேசப்படும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து சென்றவர் தான் ‘சதக்கா’ எனும் மனிதர்.

சதக்கா சேர் என்றாலே கல்குடா மக்களின் மனதில் தனி மரியாதையுண்டு. தான் வாழ்ந்த காலந்தொட்டு சர்ச்சைக்குரிய எந்தவொரு நடவடிக்கைக்கும் இடமளிக்காதவர். அனாவசியமாக எவருடைய பிரச்சினைகளிலும் மூக்கை நுழைக்க விரும்பாதவர்.’ சைலன்ட் மூமெண்ட்!’ ஊடாக மக்களைச் சென்றடையும் பல நல்ல முன்னெடுப்புக்களைச் செய்து விட்டு, எதுவும் புரியாதவர் போன்ற விம்பத்தில் வாழ்ந்தவர்.

கல்குடாவின் இருபத்தோராம் நூற்றாண்டில் இழந்த சிறந்த முன்மாதிரி மனிதர்களில் சதக்கா சேருக்கு தனி இடமுண்டு என்பதை எந்தவொரு கல்குடாவாசியாலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மையாகும்.

சதக்கா சேர் தனது கல்வி கடமைக்கப்பால் சிறந்ததொரு கவிஞரும், ஊடகவியாளருமாவார். அதையும் தாண்டி பொதுநலன் விரும்பி என பன்முகங்கொண்ட ஆளுமையிலும் திளைத்து நின்றவர்.

எவரிடமும் முகம் சுழிக்காமல் நடந்து கொள்ள முனையும் தன்மையும் – இரட்டை முகவேடம் அற்ற நிஜமான உணர்வோடு நடந்து கொள்ளும் பண்பாட்டையும் தனக்கென்று நன்நடத்தை வழியாக உருவாக்கி, தன் மரணம் வரை அதை தெளிவோடு கடைப்பிடித்து நடந்து கொண்டார்.

“இலக்கியம், கல்வி என்பனவற்றின் மூலமாக நல்லபிற செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். மக்களை நல்வழி காட்ட வேண்டிய பாரிய பொறுப்பும் தனக்கு இருக்கின்றது” என்பதை உணர்ந்து அரசியல் களத்திலும் தனது உள்ளார்ந்த முயற்சியினையும் கடந்த காலத்தில் முன்னெடுத்துச் சென்றவர்.

இவருடைய குடும்பம் ‘வள்ளல் குடும்பம்’ என்றே கூறலாம். இவர்களுடைய நிலமொன்றினை உலமாக்களின் கல்விக்காக தாரைவார்த்துக் கொடுத்தவர்களாகும். அந்தளவிற்கு சமுதாயப்பற்றில் தியாக உணர்வோடு வாழ்ந்த குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதனால் பிற்பாடும் அது போன்ற நடவடிக்கைகளில் தன்னை இன்னுமின்னும் மேம்படுத்திக் கொண்டார்.

சதக்கா சேருடைய வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் சில உணர்வுபூர்வமான விடைங்களை எமக்கு காட்டித் தந்து விட்டுச் சென்றிருந்தார்.

இன்றைய காலகட்டத்தில் பள்ளி நிருவாகத்திலோ அல்லது சமூகம் சார்ந்த நிருவாகத்திலோ அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்காக தங்களுடைய தகுதியையும் மீறி, பேராசையின் காரணமாக வியாபார நோக்கங்களோடு உள் நுழைய வேண்டுமென்று அதிகமானோர் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றனர். அதிகாரத்தில் நிலைக்கத் துடிக்கும் அவர்களுக்கு மத்தியில் தனக்கு தகுதியிருந்தும் பொறுப்புக்களை கையிலெடுப்பதற்கு பயந்து பின் வாங்கிய ஒருவர் இவர்.

இருந்த போதும், மக்கள் தன்னை அடையாளப்படுத்தி உள்வாங்கிக் கொண்டதும், மறுபக்கம் நல்ல ஆளுமைகள் இறைவனுக்கு பயந்து நடந்து கொண்டவர்கள் நிலைத்திருந்து சேவைகள் புரிய முன் வந்தும், உயிரோடு இல்லை என்பது தான் துரதிஷ்டவசமாக துயரமாகின்றன.

எந்தவொரு நிருவாகக் கட்டமைப்பிலும் திறமையான அனுபவங்களே பார்க்கப்படுகின்றன. வயதும், கடந்து வந்த அனுபவ முதிர்ச்சியைக் கொண்டுமே எல்லாப் பொறுப்புக்களும் எல்லாத்துறைகளிலும் கையளிக்கப்படுகின்றன என்பது நியதி.

ஆனால், தனது அனுபவத்துக்கும் வயதுக்கும் எந்தவித சம்மந்தேமயற்ற இவர், சிறிய வயதினிலயே பெரும் அனுபவங்களைப் பெற்றிருந்தார். இதை கருத்திற்கொண்டு எல்லாத்துறைகளிலும் நிருவாகத் தெரிவுக்கு இவருடைய பெயரையே அதிகமாக முன்மொழிந்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதென்பதும் நாம் கடந்த கால நிகழ்வுகளில் அறிந்து கொண்ட ஒரு விடயமாகும்.

எந்தவொரு தவறுக்கும் இடமளிக்க விரும்பாதவர் என்ற வகையில், பல நிருவாகப் பொறுப்புகள் இவரைத்தேடி வந்தன. கிடைத்த கடமைகள் மூலமாக ஆரோக்கியமான பங்களிப்பையும் – கல்குடாவின் ஒட்டு மொத்த ஒற்றுமையில் அதிகமாக ஈடுபாட்டோடு செயற்பட்டு உழைத்தவரும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சதக்கா சேர் ஓர் மார்க்கப் பற்றுக்கொண்ட மனிதரும் சமூக சிந்தனையில் மூழ்கிய வரும் எந்த ஒரு நிலையிலும் தன் புன்முறுவலினால் ‘தான் நிலைகுலையா’ சுயநலமற்ற ஆத்மாவாகவே வாழ்ந்து விட்டுச் சென்றார்.

கடந்த காலத்தில் மக்களின் மீது இவர் கொண்ட அதிக அன்பின் விளைவாக சமூகத்தின் பிரச்சினகளை நிவர்த்தி செய்ய வேண்டுமென்ற எண்ணப்பாட்டோடு, முஸ்லிம்களுக்கென்று தனி ஊடகமொன்றை உருவாக்கி மக்களின் பிரச்சினைகளை அறியப்படுத்த வேண்டுமென்று எண்ணினார். அவர் மேற்கொண்ட முயற்சியால் பிற்காலத்தில் ‘கல்குடா முஸ்லிம் டொட் கொம்’ என்ற வெப்தள ஊடகம் உருவாகியதாகவும் சொல்லப் படுகின்றது.

இது எல்லாவற்றையும் தாண்டி, கல்குடா மக்களின் மனதில் இடம்பிடித்த ஆளுமை என்பதினை தனது மரணத்தில் தோன்றிய மக்கள் வெள்ளத்தின் மூலமாக நிஜமாக்கிக் காட்டினார் இந்த மனிதர்.

எங்கோ ஒரு மூலையில் இவருடைய அறிமுகமற்ற இதயம் கூட இவருக்காக கரைந்ததும் – இவருடைய கற்பனைகளை இழந்ததும் – இவருடைய அடுத்த கட்ட நகர்வின் எழுச்சியைப் பறிகொடுத்ததும் மட்டுமே இறுதி காலத்தில் நிரூபணமாகின.

கல்குடாவின் இன்றைய அரசியல், மக்களின் ஒற்றுமையின்மை மற்றும் நிருவாகப்போக்கு என்பன குழப்ப நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு இவருடைய இழப்பும் ஒரு காரணமே. இவர்களைப் போன்றோரை நாம் அடையாளங்காண்பது அரிது. அடையாளங்கண்டு கொண்டாலும் அவர்களுக்குரிய அங்கீகாரங்களை வழங்க நாம் பின் வாங்கியே நின்று விடுகின்றோம்.

பொய், திருட்டு, ஊழல், சுயநலம் என்பவற்றில் நிலைத்து நிற்பவர்களையே எந்தத்துறைகளிலும், எந்தப் பொறுப்பிலும் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றோம்! என்பதுவே அவமானமான உண்மை.

‘தூர நோக்கு, சமூக அக்கறை, சுயநலமற்ற செயற்பாடுகள்’ என சிந்திப்பவர்கள் பொது வாழ்வில் வருவதற்கு தயங்கி, ஒதுங்கிக் கொள்கின்றனர். அவர்களை மக்கள் கவனத்திற்கொள்வதுமில்லை. அப்படியே வந்தாலும், கணக்கில் வைத்துக் கொள்வதுமில்லை என்பதே காலங்காலமாக நடைமுறையில் இருந்து விட்டது.

சதக்கா சேர் போன்றோரை நாம் அடையாளங்கண்டு கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அவர்களைப் பொதுவெளியில் உள்வாங்கிக்கொண்டு – பொது வாழ்க்கையில் ஈடுபட உந்து சக்திகளையும் வழங்க வேண்டும். அதுவே நம் எதிர்கால சந்ததியினரின் வாழ்வுக்காக நாம் ஏற்படுத்தப்போகும் மாற்றமாகும்…

சதக்கா எனும் ஆளுமை மறைந்து விட்டது. ஆனால், அந்த ஆளுமையின் தடங்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றது. இது எதனூடாக என்பதை அவருடைய வாழ்க்கை மூலமாக நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகும்.

எமக்காக தனது வாழ்வை அர்ப்பணித்து வாழ நினைத்த இந்த மனிதரின் தூய்மையான எண்ணத்துக்காக நாம் எந்தவிதமான கைமாறும் செய்து விடப்போவதில்லை. அதை சாத்தியமாக்க ஒரேயொரு வழிமுறை மட்டுமே உண்டு. “அதைச்சரிவரப் பயன்படுத்த நினைத்தோம் என்றால், சதக்கா எனும் மனிதரின் மறுமை வாழ்வுக்காக நமது பிரார்த்தனைகளை சதக்காவாக கொடுத்து விட்டுச் செல்வோம்…”

ஒவ்வொரு ஆத்மாவையும் மரணம் சுவைத்தே தீரும்’. அல் – குர்ஆன்.

எதுவும் நிலைத்திருக்கப் போவதுமில்லை. நிலைத்து நின்ற எதுவும் ‘முயற்சி’ அன்றி நிலைக்காமல் போவது,மில்லை…

“எனது தேடலின் மிக முக்கியமானவர்களின் சதக்கா சேருடைய பெயர் எப்போதோ என் மனதில் புதைந்து கிடந்தன. இன்று அவரை ஞாபகமூட்டி மக்கள் மத்தியில் கொண்டு தந்து விட்டேன்.”

‘நிஜத்தில் தொடங்கி நிழலில் முடிந்த ஓர் ஆத்மா – ஏ.ஜீ.எம் சதக்கா.!.’

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed