Main Menu

நிழல் பலகை -தொடர் -4 -அஷ்ரப் சிஹாப்தீன்

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எஜ்.எம்.ரபிதீன்
‘காற்றின் அலைவரிசை’ ஒரு காலத்தில் மாலை 7 மணியானதும் தொலைக்காட்சியின் முன்பு உட்கார்ந்து இலங்கை ரூபவாஹினியில் ஒளிபரப்படும் தமிழ்ச்செய்திகளைப் பார்த்தோமோ இல்லையோ ‘அஷ்ரப் சிஹாப்தீன்’ என்ற மனிதரை பார்ப்பதற்காகவே, அதிகமானோர் உட்கார்ந்து கிடந்ததை எவராலும் மறக்கவே முடியாது.

நான் அறிந்த வகையில், எமது கல்குடாவில் மட்டுமன்றி, கிழக்கு மாகாணம் முதல் முழு இலங்கையிலும் தமிழ் மொழி பேசும் ஊடகக்கலைஞர்களில் தொலைக்காட்சி மற்றும் வானொலியூடாக புகழை தேசிய ரீதியில் சம்பாதித்துக் கொண்டவர்களில் மரியாதைக்குரிய அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களும் ஒருவர். 

எங்களுடைய பிரதேசத்தின் அலைவரிசை குரலின் சொத்து இவர். பெயர் போன பரம்பரை வழியில் வந்த இவர் ‘கவிதை’ களத்தில் முக்கியமான எழுத்தாற்றலுள்ள ஒரு ஆளுமையாவார். பல வருடங்களுக்கு முன்பு ஒரு சிலரின் வீடுகளில் மாத்திரம் மின்சார வசதி இருந்தது.

அதுவே பெரிய பாக்கியம் என்ற போது தொலைக்காட்சி மற்றும் வானொலி வைத்திருந்தவர்கள் ஒரு சிலர் மாத்திரமே. ஏனையவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்த மக்களாகும். யுத்தமும் வறுமையும் சூழ்ந்த அந்த நேரத்தில் இலங்கை தொலைக்காட்சி மற்றும் வானொலி செய்தி என்பது மட்டுமே மக்களின் ஊடக நண்பனாக புழக்கத்திலிருந்தது.

அதிலும் அஷ்ரப் சிஹாப்தீன் அவர்கள் நிகழ்ச்சிகளையும், செய்தியினையும் தனது குரல் மூலமாக வழங்கும் போதெல்லாம் அளப்பரிய சந்தோஷமும் நெருக்கமுமன்றி வேறில்லை எனலாம். காரணம் எமது மண்ணின் அடையாளத்தை இலங்கை முழுவதும் பரப்பிக் கொண்டிருந்தார்.

அது மட்டுமல்லாமல், ரமழான் சிறப்பு நிகழ்ச்சி மற்றும் இஸ்லாமிய கலை, கலாசாரம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்குவதே ஒரு வரலாற்றின் நினைவுகளின் சிறப்புமிக்க நிகழ்வுகளாக அமைந்திருந்தன. அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களின் ‘அறிவுக்களஞ்சியம்’ எனும் நிகழ்ச்சியை வானொலி கேட்பதற்கென்றே பக்கத்து வீட்டில் கெஞ்சி கூத்தாடி வானொலியை இயங்க வைத்த பசுமையான நினைவுகள் ஏராளம்.

அந்தச்சந்தர்ப்பங்களில் வானொலி ஒன்றில்லாமல் அடுத்தவரின் வசைகள் மூலமாக இளமையில் பட்ட அவமானங்கள் என் வாழ்க்கையின் ஒரு ஓரத்தில் இருந்தாலும், அஷ்ரப் சிஹாப்தீன் என்ற மனிதரின் தனித்துவமான குரலுக்காகவே எல்லாவற்றையும் கடந்து சென்றேன்.

மெய் சிலிர்க்கும் குரலின் ஆற்றலினூடாக அந்த நிகழ்ச்சியை இன்னும் மெருகேற்றி தெரறிக்க விட்டிருப்பார் மனுஷன். ஒவ்வொரு நிகழ்ச்சியினையும் தனது கம்பீரமான குரலூடாக மக்களைச் சென்றடையச் செய்த அஷ்ரப் சிஹாப்தீன், இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ‘அறிவுக்களஞ்சியம்’ எனும் நிகழ்ச்சியின் பெயர் பெற்ற தொகுப்பாளார்களில் ஒருவராகும்.

எமதூர் மக்கள், அவருடைய தொலைக்காட்சி செய்தி வாசிப்பினைப் பார்த்து அவரைச் சுட்டிக்காட்டி “இவர் தான் சிஹாப்தீன் மௌலவியின் மகன்” என்று ஆச்சரியத்துடன் பெருமையடித்துக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி இடம்பெறுவதும் அன்று சுவாரசியமே.

அவருடைய கலைப்படைப்புகள் மற்றும் ஊடகத்துக்கு ஆற்றிய சேவைகள் என நாளா பக்கமும் கடந்து போக, அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களை தொலைக்காட்சியில் பழையபடி பார்க்க வேண்டும். அந்த நாட்கள் திரும்பி வருமா? என்ற ஏக்கம் என் மனதில் அவ்வப்போது வந்து சென்றதுண்டு.

இப்போது இணையத்தொழிநுட்ப வளர்ச்சிகள் கிடைத்தும் சரியான ஊடகத்திருப்திகள் எமக்கு கிடைக்கவில்லை என்பதுவே உண்மை. ஆனால், அந்தக்காலத்தில் அஷ்ரப் சிஹாப்தீன், ஏ.ஆர்.எம்.ஜிப்ரி, பி.எச்.அப்துல் ஹமீத், சனூஸ் முஹம்மது பெரோஸ், மதியழகன், கலிலுல் ரஹ்மான், விஸ்வநாதன், ரேலங்கி செல்வராஜா, மக்கள் குரல் ராஜா, சட்சொருபவதி, மஹ்தி ஹசன் இப்ராஹிம், யாகூப், நடேசன் சர்மா இன்னும் பலரின் தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலமாகப் பெறப்பட்ட ஊடகத்தொடர்பாடல்களை சந்தேகமின்றி நம்பியிருந்தோம்.

அந்தக்காலங்கள் இனியும் தோன்றுமா? என்றால் ஏக்கம் மட்டுமே எஞ்சிக்கிடக்கின்றன. எதுவானாலும் தொன்னூறுக்குப்பிறகு தோன்றிய எங்களுடைய ஊடகத்தேடலில் அஷ்ரப் சிஹாப்தீன் போன்றோர்களைப் பார்த்து பெருமையும், புகழும் பேசிக்கொண்டோம் என்பதை நினைக்கையில் இதயம் இன்புற்றுக் கிடக்கின்றது.

கல்குடாவின் சிறந்த எழுத்தாளர், கவிஞர் என்ற இலக்கிய ஆற்றலோடு வாழும் அஷ்ரப் சிஹாப்தீன், இதுவரை நான் நேரில் கூடப்பார்த்ததில்லை. ஆனால் தூரத்தில் நின்று காட்சியாகவும், காற்றின் அலைவரிசையிலும் சிறு வயதில் ரசித்தவர்களில் முக்கியமானவர்களில் நானும் ஒருவன் என்பதை எனது நினைவிலிருந்து பகிர்கின்றேன்.

“எங்களுடைய மண்ணின் பல படைப்பாளிகள், தேசியம் முழுவதும் தங்களது ஆளுமைகளை ஒலி-ஒளி மூலமாக தடம் பதித்து சாதித்துக் கொண்டிருந்த காலத்தில் எமது சூழலும் மகிழ்ச்சியோடு கடந்து சென்றன என்பதை பசுமை நினைவுகளாக கூறிக்கொள்கிறேன்..!

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed