Main Menu

வைரலாகும் முகநூல் கேள்வித்தொடுக்குகளில் அவதானம் தேவை

இந்த செய்தியைப் பகிர்க >>>
M.I. MUHAMMADH SAFSHATH -UNIVERSITY OF MORATUWA

நீங்கள் ஹரிபொட்டர் திரைப்படத்தின் எந்தக்கதாபாத்திரம் உங்களது முன் ஜென்மத்தில் நீங்கள் யாராக இருந்தீர்கள்? நீங்கள் செல்லவுள்ள இடம் சுவனமா அல்லது நரகமா? உங்கள் எதிர்கால மனைவி எவ்வாறு இருக்கப்போகிறார்? நீங்கள் (ஆண்) பெண்ணாக இருந்தால் எவ்வாறிருக்கும்? இருபது வருடங்களில் உங்கள் தோற்றம் எப்படி இருக்கும்?

இம்மாதிரியான கேள்விகளையெல்லாம் நாம் வழமைக்கு மாறாக அதிகமாகவே காண்கிறோம் என்று உணர்கிறீர்களா? நீங்கள் முகநூல் பாவனையாளர்களாக இருந்தால், நிச்சயம் உணர்வீர்கள். இத்தகைய வினாக்களைக் கொண்ட தொடுக்குகளைப் (Links) பகிர்வது அண்மைக்காலமாக முகநூலில் ஒரு உள நோயாகவே மாறி விட்டது எனலாம்.

எந்தளவெனில் வைக்கற்போரில் ஆழ விழுந்த குண்டூசியைத் தேடும் கணக்கானது முகநூலில் பயன்தரக்கூடிய பதிவுகளைக் காண்பதென்பது. அந்தளவு இத்தகைய தொடுக்குகள் அதிகமதிகம்  பகிரப்படுவதே இப்பரிதாப நிலைக்குக்காரணமாகும்.

சிறியோர், பெரியோர், ஆண்கள், பெண்கள் என எந்த வேறுபாடுகளுமின்றி அனைத்துத்தரப்பாரையும் கவரக்கூடிய விதத்திலான, அவர்களது ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்த கேள்விகளுடன் இத்தகைய தொடுக்குகள் உலா வருவதால் கணிசமானோரை இதன் உபயோகர்களாக இத்தகைய பிரயோக மென்பொருட்கள் (Apps) ஆக்கிரமித்துள்ளன எனலாம்.

இத்தகைய பிரயோக மென்பொருட்களில் ஒன்றும் மிகப்பிரபலமானதுமான FaceApp, அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு எனும் குறுகிய காலப்பகுதியுள்ளேயே அதிக பாவனையாளர்களைக் கொண்ட பட வடிவமைப்பு மென்பொருட்களில் இரண்டாம் நிலையைத்தக்க வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆண்களைப் பெண்கள் போன்றும், பெண்களை ஆண்கள் போன்றும், எதிர்காலத்தோற்றம், முன் ஜென்மத்தோற்றம், உங்கள் இரட்டை உலகிலுள்ள இடம், … எனப்பல தரப்பட்ட கேள்விகளுடனான படவடிவமைப்புகளை இம்மென்பொருள் (App) வழங்குவதானது, அதன் துரித வளர்ச்சிக்கான காரணமாகக் கருதப்படுகிறது.

FaceApp மாத்திரமின்றி Nametests, Meaaw, Quizzstar, Dhadhagames, Daddygames எனப்பல பிரயோக மென்பொருட்களும் இத்தகைய  கேள்வித்தொடுக்குகளுடன் (Quiz Links) வலம் வருகின்றன. கேலிக்காகவும், நண்பர்கள் பகிரும் போது ஏற்படும் ஆர்வத்தின் காரணமாகவும் எம்மில் பலரும் இத்தகைய தொடுக்குகளை விரும்பி பகிர்வதை வழக்கமாக்கியுள்ள இன்றைய சூழலில் அவை எந்தளவு பாதுகாப்புத்தன்மை வாய்ந்தவை என்பதை உணர வேண்டியது காலத்தின் தேவையாகிறது.

இவை பாதுகாப்பானவையா?

தற்போது வரை இரண்டு பில்லியனுக்கும் மேற்பட்ட பாவனையாளர்களைக் கொண்ட முதல் தர சமூக வலைத்தளமாக வலம் வருகிறது முகநூல். நிமிடமொன்றுக்கு 400 புதிய பயனர்கள் முகநூலில் உள் நுழைகிறார்கள். முகநூல் பாவனையாளர்கள் குறைந்தது 8 முறையேனும் சராசரியாக நாளொன்றுக்கு தமது முகநூல் தளத்தை பார்வையிடுபவர்களாக உள்ளார்கள்.

35 மில்லியன் மக்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் முகநூல் கணக்கில் பதிவிடுபவர்களாக உள்ளார்கள். இத்தகைய பிரமாண்ட சமூக வலைத்தளம் அதன் பாவனையாளர்களது தகவல்களின் அந்தரங்கம் (Privacy) பேணுதலில் தவறிழைத்து அதன் நிறுவனர் மார்க் சகர்பேர்க் அவர்களே அதை ஒப்புக்கொண்ட விவகாரம் அதன் பாவனையாளர்களை அதிர்ச்சியில் தள்ளியிருந்தது.

இத்தனை பிரமாண்ட வலைத்தளமே தனது பாவனையாளர்களின் தகவல்களின் அந்தரங்கம் பேணத்தவறியுள்ள நிலையில் மூன்றாம் நிலை பிரயோக மென்பொருட்களுக்கு (Third-party Apps) எமது முகநூல் கணக்குகளைக் கையாள இடமளித்து பதிவுகளை மேற்கொள்ள விடுவதானது, எந்தளவு பாதுகாப்பானது என்கிற கேள்வி எழுப்பாமலில்லை.

ஏனெனில், அத்தகைய சம்பவமொன்று அண்மையில் நடந்தேறியது. 2016 முதல் முகநூலில் வலம் வந்த  Nametests எனும் பிரயோக மென்பொருளும் இவற்றுள் ஒன்றாகும். இது ‘உங்கள் பெயரின் உண்மை அர்த்தம் என்ன?’ ‘உங்களை காதலிக்கும் எத்தனை பேருள்ளார்கள்?’ போன்ற கவர்ச்சிகரமான கேள்விகளுடன் வலம் வந்த  மிகவும் அதிகமான பயனர்களாலும் பயன்படுத்தப்பட்ட மென்பொருட்களுள் ஒன்றென்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் 22ம் திகதியன்று முகநூல் நிறுவனர் வெளியிட்டிருந்த செய்தியில், Nametests நிறுவனம் 120 மில்லியன் பயனர்களது முகநூல் தரவுகளை மறைமுகமாக பிரிதொரு நிறுவனத்திற்கு வெளியிட்டிருந்தமை தொடர்பில் குறிப்பிட்டிருந்தார். அது பாவனையாளர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியிருந்தது.

இத்தகைய தகவல் திருட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இருப்பதில்லையென்பதும், விடயத்தை மேலும் விபரீதமாக்குகிறது. குறித்த சம்பவத்தைத்தொடர்ந்து முகநூல் உலா வந்த 200 ற்கும் மேற்பட்ட மூன்றாம் நிலை பிரயோக மென்பொருட்கள் நீக்கப்பட்டுள்ளன.

எவ்வாறு இது சாத்தியமாகிறது?

இத்தகைய கேள்வித்தொடுக்குகளுள் உள் நுழையும் போது, குறித்த கேள்விக்கான உங்களுக்குரிய பதிலைத் தரவென உங்களது ஒரு அனுமதியை அது வேண்டி நிற்கும்.

கேள்வியின் மீதான ஈர்ப்பும், வரப்போகிற பதிலை எதிர்பார்த்தான எமது ஆர்வத்திலும் நாம் அனுமதிக்கும் போது, குறித்த மூன்றாம் நிலை மென்பொருள் ஒப்பந்தமாக விதிக்கும் நிபந்தனை வசனங்களை வாசிப்பதற்குக்கூட எமக்கு நேரம் இருப்பதில்லை. இங்கு தான் குறித்த மூன்றாம் நிலை மென்பொருட்களுக்கு நாம் எமது முகநூல் தொடர்பான பிரத்தியேக தகவல்களையும் எமது கணக்கை கையாள்வதற்கான அனுமதியையும் வழங்குகிறோம்.

எமது பயனர் அடையாளம், முகப்பு விபரங்கள், புகைப்படங்கள், நட்புப்பட்டியல் விபரங்கள், அமைவிட விபரங்கள் உள்ளிட்ட பிரத்தியேக தகவல்களை குறித்த மென்பொருள் கையாள்வதற்கான அனுமதியையே, எந்த வாசிப்புமின்றி “ALLOW” எனும் தொடுகைத்தானத்தை தொடுவதன் மூலம் தெரிந்தோ தெரியாமலோ வழங்கி விடுகிறோம்.  பயனர்களின் தகவல்களைக் கையாள்வது முகநூல் விதிகளுக்கமைவானது என இத்தகைய மூன்றாம் நிலை மென்பொருட்கள் நிபந்தனைகளில் குறிப்பிடுகின்றன. ஆனால், அதே சமயம், முகநூல் பாதுகாப்பு விதிமுறைகள் கூறுவதாவது, ‘மூன்றாம் நிலை பிரயோக மென்பொருட்கள், வலைத்தளங்களை முகநூலு பயன்படுத்துவதன் மூலம், உங்கள் பதிவுகள், பகிர்வுகள் தொடர்பில் அவர்களால் அறிய முடியும். இத்தகைய மென்பொருட்கள் அல்லது வலைத்தளங்கள் சேகரிக்கும் உமது தகவல்கள் அவர்களது சுய விதிமுறைகளுக்குட்பட்டது’ என பொறுப்பு துறப்பு மேற்கொள்கிறது.

குறித்த விதிமுறைக்கமைவாகவே முகநூல் பயனர்கள் அதை உபயோகிக்க உடன்படுகிறோம். எனவே, மூன்றாம் நிலை மென்பொருட்கள் சேகரிக்கும் தகவல்களுக்கு முகநூல் பொறுப்பாகாது. ஆனால், முகநூல் விதிமுறைகளின் படியே தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன என்ற நிபந்தனையின் கீழேயே இத்தகைய மூன்றாம் நிலை மென்பொருட்கள் எம்மிடம் அனுமதி பெறுவதானது மேலும் எம்மை அச்ச நிலைக்குத் தள்ளுகிறது.

இத்தகைய மூன்றாம் நிலை மென்பொருட்கள் சேகரிக்கும் எமது தகவல்கள் பிரிதொரு நிறுவனத்திற்குத்தேவையாகிற போது, எமது தகவல்கள் மறைமுகமாக அவர்களுக்குள் கைமாற முடியும். இத்தகைய சம்பவமே Nametests எனும் பிரயோக மென்பொருள் மூலம் அம்பலமாகியுள்ளது. 120 மில்லியன் பயனர்களின் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 87 மில்லியனுக்கு மேற்பட்ட அரசியல் சார் தகவல்கள் எனவும் அறிய முடிகிறது.

எமது புகைப்படங்கள், முகநூல் தரவுகளைக்கொண்டு என்ன செய்து விட முடியுமென்ற கேள்வி எமக்கு எழுமாக இருந்தால், இச்சம்பவத்தின் பின்னர் உங்களுக்கு அந்த சந்தேகமிருக்க வாய்ப்பில்லை. இணைய ஊடுறுவிகளால் ஜேர்மனிய அரசியல்வாதியொருவரின் செல்பியிலிருந்து அவரது கைரேகை துல்லியமாக பெறப்பட்டு போலி ஆவணமொன்று உருவாக்கப்பட்ட சம்பவம் 2014 இல் நடந்தேறியது.

மேலும், அத்தகைய திருட்டு சம்பவமொன்றும் பதிவானது. பேராசிரியர் இஸாவோ எச்சிசன் குறிப்பிடுகையில், தற்போது கையடக்கத்தொலைபேசிகளின் கமராத் தொழில்நுட்பம் விருத்தியடைந்துள்ளது. இதன் மூலம் விரல்களைக்காட்டி எடுக்கும் செல்பிகளிலிருந்து கைரேகைகளைத்திருடி அதன் மூலம் உங்கள் பிரத்தியேக தகவல்களை கையாளக்கூடிய வாய்ப்புகளும் உள்ளதென்று அச்சுறுத்தியிருந்தார். தொழிநுட்பம் வளர்வது போன்றே எமது சுதந்திரமும் பறி போன வண்ணமுள்ளதென்பதே உண்மை.

கை ரேகை திருட்டுகள், கடன் அட்டை விபரத்திருட்டுகள் என வினைத்திறன்மிக்க திருட்டுகள் கூட இவற்றைப் பயன்படுத்தி நடந்தேறக்கூடியளவு உலகம் சென்று கொண்டிருக்க ஒரு குறுகிய கேலியை எதிர்பார்த்து எமது தகவல்கள் எம்மிடமிருந்து எம்மையறியாதே திருடப்பட ஏதுவாக அமையக்கூடிய செயலிகளை எமது கணக்கைக் கையாள இடமளிப்பதென்பது எந்தளவு அறிவு பூர்வமானதென்பதைச் சிந்திக்க வேண்டும்.

எல்லா பிரயோக மென்பொருட்களும் இத்தகைய சட்டவிரோதச் செயலில் ஈடுபடுகிறதென பொதுவான முடிவுக்கு வர முடியாது. ஆனால், 200 க்கு மேற்பட்ட மென்பொருட்கள் இதுவரை முகநூலிலிருந்து நீக்கப்பட்டுள்ளமையும் எந்நிறுவனம் எதிர்காலத்தில் எமது தகவல்களை எதற்காகப் பயன்படுத்தவுள்ளதென்பதை அறிய முடியாமையும் இது தொடர்பில் எமக்கு அவதானம் அவசியமென்பதை உணர்த்தி நிற்கின்றன.

எவ்வாறு இவற்றில் இருந்து எம்மை பேணிக்கொள்வது?

1. பொதுவாக இவ்வகை எந்தத்தொடுக்குகளிலும் உள் நுழையாமை:
இத்தகைய பிரயோக மென்பொருள் நிறுவனங்கள் ஒரு வேளை எமது தகவல்களைத் தவறாகப் பயன்படுத்தினால் கூட அதற்கான எந்த ஆதாரங்களும் இருக்கப்போவதில்லை என்கிற போது, மேலும் இதற்கு முகநூல் நிறுவனம் கூட பொறுப்பேற்காத நிலையில் இத்தகைய தொடுக்குகளை எமது சுய துணிவுடன் உபயோகிப்பதைத் தவிர்ப்பது எந்தப்பாதகமுமற்ற சிறந்த வழிமுறையாகும்.
2. அவதானமாக இருத்தல்:
இத்தகைய கேள்வித்தொடுக்குகள் அதிக பயனர்கள் விரும்பி உள் நுழைவதால் இணையத்திருடர்கள் மற்றும் ஊடுறுவிகள் பயன்படுத்தக்கூடிய மிகவும் எளிமையான வழிமுறையாகவும் இது திகழ்கிறதென்பதை முதலில் நாம் உணர வேண்டும். அனைத்திற்கும் ALLOW என எடுத்த எடுப்பில் அனுமதியளித்து உள்நுழையாது நிபந்தனைகளை வாசித்தறிவது அவசியமாகும்.
3. முகநூல் கணக்கின் Privacy Setting இனை வலுவானதாகப் பேணுதல்:
இவ்வாறு செய்வதன் மூலம் நாம் இத்தகைய தொடுக்குகளில் நுழைய முற்படும் போது, மீள கணக்கில் உள்நுழைய முகநூல் அனுமதி கோரும் அதன் போதும் இதிலிருந்து தவிர்ந்து கொள்ள முடியும். மேலும், Activity Log ஐப்பார்க்கும் வசதியை Only me ஆக பேணுவதன் மூலமும் ஓரளவு கட்டுப்படுத்த முடியும். 
4. அளவுக்கதிகமான பிரத்தியேக தகவல்களை முகநூல் முகப்பில் பகிர்வதைத்தவிர்த்தல்.
இதுவரை எமது முகநூல் கணக்கிலிருந்து இடப்பட்ட இத்தகைய பதிவுகளை நீக்க வழியுண்டா?
2017 இறுதியில் மேற்கொள்ளப்பட்ட முகநூல் மேம்படுத்துகை வடிவில் இந்த பாதுகாப்பு நடைமுறை சேர்க்கப்பட்டுள்ளது.
கீழ்க்காட்டப்படும் படிமுறைகளில் சென்று குறித்த செயலிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளை நீக்கிக்கொள்ள முடியும். 
1. Account Settings > 
2. Apps > 
3. Logged in with Facebook> 
4. Select the App > 
5. Uncheck Post on your behalf.
வெறுமனே கேளிக்கைகளுக்காக, முற்றிலும் அறிவுக்குப்புறம்பான, சோதிடம் அல்லது பொய்ப்பித்தலாட்டத்துக்கு நிகரான, வேடிக்கையான இத்தகைய கேள்வித்தொடுக்குகளைப் பகிரும் ஆர்வத்தில் எமக்கு நாமே தீங்கிழைக்கக்கூடிய செயல்களில் ஈடுபடாது தவிர்ந்து கொள்வது சாலச்சிறந்ததாகும். 
விடிவெள்ளி வார இதழ் (17.08.2018)
இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed