Main Menu

மாவீரன் கேணல் அஸ்லம் பஸ்லி லாபிர் – தொடர் 2

இந்த செய்தியைப் பகிர்க >>>

மாவீரன் கேணல் அஸ்லம் பஸ்லி லாபிர் – தொடர் 1
https://thehotline.lk/archives/13935

அஷ்ரப் அலி பரீத்
1985ம் ஆண்டில் துரத்தித்தாக்கும் படைப்பிரிவில் இணைவதற்கு முன்னதாக இரண்டாம் லெப்டிணன்ட் பதவி தொடக்கம் லெப்டிணன்ட் பதவி வரையான காலப்பகுதியில் லாபிர் யாழ்ப்பாணத்தின் புலனாய்வு அதிகாரியாகக் கடமையாற்றிருந்தார். அவரது தமிழ் மொழி ஆற்றல் காரணமாக ஏராளமான முக்கிய தகவல்களை அக்காலத்தில் அவர் தேடிக்கண்டறிந்து இராணுவத்துக்கு பேருதவியாக இருந்தார். அதன் பின்னர் துரத்தித்தாக்கும் படைப்பிரிவிலும் பின்னர் அதிலிருந்து உருவாக்கப்பட்ட துரிதப்பரம்பல் படைப்பிரிவிலும் தன்னை இணைத்துக்கொண்ட அவர், புலிகளுக்கெதிரான சிற்சிறு தாக்குதல்களில் ஈடுபட்டடார்.

மேஜர் ஹெட்டியாரச்சி கட்டளையிடும் அதிகாரியாக இருந்த போதும், அவருக்கு அடுத்த நிலையிலிருந்த லெப்டிணன்ட் லாபிர் தான் தாக்குதல்களுக்குத் தலைமை தாங்குவது வழக்கமாக இருந்தது.

இப்படியிருக்கையில், விடுதலைப்புலிகள் சிங்கள அப்பாவிப் பொது மக்களையும் கிழக்கில் ஆங்காங்கே முஸ்லிம்களையும் இலக்கு வைத்து தாக்குதல்களை மே்ற்கொள்ளவும் படுகொலைகளை கட்டவிழ்த்து விடவும் ஆரம்பித்திருந்தார்கள். புலிகளின் கிளிநொச்சி இராணுவப்பொலிஸ் முகாம் மீதான வாகனக்குண்டுத்தாக்குதலும் அவர்கள் இராணுவ ரீதியாக பலம் பெற்று வருவதை உணர்த்தியது.

அதே நேரத்தில் இந்தியாவினால் நேரடியாக வழங்கப்பட்டிருந்த நவீன மோட்டார் எறிகணைகள் மற்றும் இயந்திரத் துப்பாக்கிகள் என்பன புலிகள் உள்ளிட்ட இயக்கங்களின் தாக்குதல் திறனை அதிகரித்திருந்தன. அவ்வாறான நவீன ஆயுதங்களின் முன்னால் தாக்குப்பிடித்து பதில் தாக்குதல் தொடுப்பதில் இராணுவத்தினர் சவால்களை எதிர்கொண்டனர்.

இதன் காரணமாக விடுதலை இயக்கங்களின் முன்னால் இராணுவத்தின் தாக்குதல் திறன் வீழ்ச்சியடையத் தொடங்கியிருந்தது. அதனை வாய்ப்பாகக்கொண்டு விடுதலை இயக்கங்கள் சிற்சில பகுதிகளைப் படிப்படியாக தங்கள் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாக மாற்றியமைத்துக் கொள்ளத்தொடங்கினர்.

1985ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் முற்றுமுழுதான முற்றுகையொன்றை எதிர்கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்துக்கான தரை வழி விநியோகங்களில் ஆபத்து எதிர்கொள்ளப்பட்டது. தூர இடங்களில் அமைந்திருந்த முகாம்களின் பாதுகாப்புக் கேள்விக்குறியாக மாறத் தொடங்கியிருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் அன்றைய ஜனாதிபதி ஜெனரல் ஸியாஉல் ஹக் 1985ம் ஆண்டின் டிசம்பர் 10ம் திகதி இலங்கைக்கு நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டார். விடுதலை இயக்கங்களுக்கு பயிற்சி, ஆயுதம் மற்றும் நிதியுதவி மட்டுமன்றி பின்புல ஆதரவையும் வழங்கியதன் காரணமாக இலங்கை அரசாங்கம் மற்றும் இராணுவம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை அவர் தௌிவாகப் புரிந்து கொண்டார்.

இலங்கை ராணுவத்தின் தாக்குதல் திறனை மேம்படுத்துவதற்காக எந்தவொரு பயிற்சியோ ஆயுதங்களோ எந்தநேரத்திலும் வழங்குவதற்கு பாக்கிஸ்தான் தயாராக இருப்பதாக ஜெனரல் ஸியாஉல் ஹக் தனது விஜயம் தொடர்பான ஊடக சந்திப்பில் வலியுறுத்தினார். இலங்கை இராணுவத்தளபதி ஜெரி டீ சி்ல்வாவும் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.

வாக்களித்தது போன்று ஜெனரல் ஸியா உல் ஹக்கின் அனுசரணையில் பிரிகேடியர் தாரிக் மஹ்மூத் தலைமையிலான இராணுவப் பயிற்சிக்குழு இலங்கை வந்தது. இராணுவத்தின் தாக்குதல் திறனை அதிகரிப்பது அவர்களின் பயிற்சியின் முக்கிய நோக்கமாக இருந்தது. இந்நிலையி்ல், யுத்த களத்தில் பிரதான பங்கு வகித்துக் கொண்டிருந்த கஜபா மற்றும் விஜயபா, சிங்க ரெஜிமண்ட் படையணிகளை விட பஸ்லி லாபிர் தலைமையிலான துரத்தித்தாக்கும் படையணிக்கு விசேட பயிற்சிகளை வழங்குவது அரசாங்கத்தின் தெரிவாக இருந்தது. அன்றைய இராணுவத்தளபதி முதல் தேசிய பந்தோபஸ்து அமைச்சர் லலித் அதுலத்முதலி வரை இதற்கான தீர்மானத்தில் ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்தனர்.

புலிகளுக்கெதிரான தாக்குதல்களில் பஸ்லி லாபிர் தலைமையிலான அணி பெற்றிருந்த வெற்றிகள் அதற்கான காரணம் எனலாம்.

ஆரம்ப கட்டத்தில் கணேமுல்லை கமாண்டோ பயிற்சி முகாமில் இவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டாலும், பாகிஸ்தான் பயிற்சியாளர்களின் வருகையின் பின்னர் அநுராதபுரத்தின் சாலியபுர முகாம் மற்றும் மாதுறுஓயா முகாமில் சுமார் மூன்று மாதங்கள் இவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

பாக்கிஸ்தானிலிருந்தே இவர்களுக்கான பயிற்சிக்குத் தேவையான நவீன மோட்டார் எறிகணை லோஞ்சா்கள், இயந்திரத் துப்பாக்கிகள் உள்ளிட்ட தாக்குதல் ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டன. சரியான இலக்கை கணித்து துல்லியமாக மோட்டார் எறிகணைகளை ஏவும் பயிற்சிகள் முதல் தடவையாக இலங்கை இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டது. இலங்கை இராணுவத்தினரிடம் அதுவரை பழக்கத்தில் இல்லாத புதிய உபகரணங்கள் பலவற்றை இயக்கும் பயிற்சிகளும் இதன் போது வழங்கப்பட்டது.

இந்தப்பயிற்சிக் குழுவிலும் கேப்டன் பஸ்லி லாபிர் மற்றவர்களை விட திறமையான முறையில் தன் பயிற்சிகளை நிறைவு செய்தார்.

பின்னர் அந்தப்பயிற்சிக் குழுவிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள் சிலர் பாகிஸ்தானிலும் பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டனர். கமாண்டோ படையணிக்கு ஒத்த தாக்குதல் திறன் பெற்ற இராணுவ அணியாக இவர்கள் மாற்றம் பெற்றனர்.

ஆனால், இவர்களுக்கு கிடைத்த சில பயிற்சிகள் அக்காலத்தில் கமாண்டோ படையணிக்கும் கூட கிடைத்திருக்கவில்லை என்பதே உண்மையாகும். பாகிஸ்தான் பயிற்சியாளர்கள் அந்தளவுக்கு இலங்கை இராணுவத்தை தமது நேச நாட்டு இராணுவமாகக் கருதி சிறப்பான பயிற்சிகளை வழங்கியிருந்தனர். மேலும், தாம் பயிற்சி வழங்கிய இராணுவப்பிரிவுக்குத் தேவையான விசேட தாக்குதல் உபகரணங்கள் என்பனவும் பாகிஸ்தானிலிருந்தே நேரடியாக வழங்கப்பட்டன.

அதன் மூலம் தாக்குதல் மற்றும் அதற்கான நவீன உபகரணங்கள் தொடர்பில் இராணுவத்தின் பலம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. பங்களாதேஷ் இராணுவ அதிகாரிகள் சிலரும் இவ்வாறான பயிற்சிகளை வழங்குவதில் இலங்கைக்கு ஒத்தாசை செய்திருந்தனர்.

மேலும், இக்குழுவிலிருந்த அனைவருக்கும் ஒரே மாதிரியான பயிற்சிகள் வழங்கப்பட்டாலும், சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சில விசேட பயிற்சிகளும் வழங்கப்பட்டது. ஒரு பிரிவினருக்கு வெடிபொருட்களைக் கையாளுதல், கண்ணிவெடிகளைக் கண்டறிதல், அவற்றைச் செயலிழக்கச் செய்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன. பயங்கரவாதிகள் புதைத்து வைத்துள்ள ஆயுதங்களைக் கண்டறிவதும் இவர்களின் பணியாக இருந்தது.

இன்னொரு குழுவினருக்கு மருத்துவப்பயிற்சி வழங்கப்பட்டது. காயப்பட்டவர்களுக்கான முதலுதவி, அவசர சத்திரசிகிச்சை என்பவற்றில் அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டார்கள். காயங்களுக்கான சிகிச்சைகளில் இவர்கள் கைதேர்ந்த மருத்துவ உதவியாளர்களாக மாற்றப்பட்டனர். இதன் காரணமாக, மருத்துவப்படையணி உதவியின்றியே விசேட படைப்பிரிவு தமது தாக்குதல் நடவடிக்கைகளில் காயமடைவோரைப் பராமரிக்கவும் உயிரிழப்புகளைத் தவிர்த்துக் கொள்ளவும் வசதியேற்பட்டது.

மற்றொரு பிரிவினர் சிக்னல் படையணியாகப் பயிற்றுவிக்கப்பட்டனர். தொலைத் தொடர்புக்கருவிகளை கையாளுதல், சங்கேத பாசையில் தொடர்பாடல்கள், விசேட படைப்பிரிவுக்கான தொடர்பாடல் முறைகள் என்பவற்றில் இவர்கள் நிபுணத்துவம் பெற்றனர். இலங்கை இராணுவத்தின் படையணிகளில் இன்றளவும் விசேட படைப்பிரிவு தமக்கிடையிலான தனியான சங்கேத பாசையைக்கொண்ட தொடர்பாடல் முறையொன்றைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இராணுவத்தின் பொதுவான சங்கேத பாசையிலும் அவர்கள் பரிச்சயம் பெற்றிருந்தார்கள்.

பயிற்சியின் பின்னர் இந்தத்தாக்குதல் படைப்பிரிவு வவுனியாவில் ஜோசப் முகாம் என்றழைக்கப்படும் வன்னி இராணுவக் கட்டளைத் தலைமையகத்தில் நிலைப்படுத்தப்பட்டார்கள். அக்காலத்தில் முகாமின் கட்டளை அதிகாரியாக லெப்டிணன்ட் கேணல் விஜய விமலரத்தின செயற்பட்டுக் கொண்டிருந்தார். அவரது கட்டளையின் கீழ் செயற்பட்ட முதலாம் கஜபா படையணியின் இரண்டு முக்கிய படைப்பிரிவுகள் விசேட படைப்பிரிவுக்கான ஒத்தாசைகளுக்கு வழங்கப்பட்டனர்.

வவுனியா தொடக்கம் வெலிஓயா வரையிலான பிரதேசம் இவர்களின் செயற்பாட்டுப்பிரதேசமாக வரையறுக்கப்பட்டது. அப்பிரதேசங்களில் நடைபெற்ற இராணுவத் தாக்குதல் நடவடிக்கைகளில் விசேட படைப்பிரிவின் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக புலிகளின் நடவடிக்கைகளை வேவு பார்த்து சிறு அணிகளாகப் பிரிந்து சென்று தாக்குதல்களை தொடுப்பதிலும் விசேட படையணி வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருந்தது.

இவர்களின் திறமையான தாக்குதல் கண்டு மகிழ்ச்சியடைந்த வடக்குப் பிராந்திய கட்டளைத்தளபதி பிரிகேடியர் டென்சில் கொப்பேகடுவ விசேட படைப்பிரிவின் அங்கத்தவர் எண்ணிக்கையை 38 லிருந்து 68 ஆக அதிகரிக்க வழி செய்தார்.

68 பேர் கொண்ட அணி தாக்குதல் நடவடிக்கைகளை இலகுபடுத்தும் நோக்கில் மேலும் பல சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டது. அல்பா, பிராவோ, சாலி என்று மூன்று பிரிவுகளாக இவர்கள் பிரிக்கப்பட்டனர். அவற்றுக்கான கட்டளைத் தளபதிகளாக லெப்டிணன்ட் பஸ்லி லாபிர், லெப்டிணன்ட் அஜித் பெரேரா, லெப்டிணன்ட் ரொஹான் விஜேசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அடுத்த கட்டமாக விசேட படைப்பிரிவின் நான்காவது அணியாக டெல்டா தாக்குதல் அணியும் இவர்களுடன் இணைந்து கொண்டது. அதன் கட்டளைத் தளபதியாக மேஜர் ஹெட்டியாரச்சி நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் விடுதலை இயக்கங்களைத் தேடிச்சென்று தாக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. எட்டுப்பேர் கொண்ட அணியாகப் பிரிக்கப்பட்டு அவ்வாறான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.

கண்ணிவெடி, மருத்துவ, சிக்னல் மற்றும் ரொக்கட்ஃமோட்டார் எறிகணைத் தாக்குதல் திறன் கொண்டவர்கள் இரண்டு இரண்டு பேர் வீதம் ஒவ்வொரு எட்டுப்பேர் குழுவிலும் இணைக்கப்பட்டனர். ஒவ்வொரு அணிக்கும் ஒரு கட்டளைத்தளபதி உப தளபதி நியமிக்கப்பட்டார்கள்.

இவ்வாறான எட்டுப்பேர் கொண்ட படைப்பிரிவுகள் விடுதலை இயக்கங்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் சென்று நிலை எடுத்து அவர்களைத் தாக்கும் வரை மிகவும் இரகசியமான முறையில் தங்கள் நடமாட்டங்களை முன்னெடுத்தார்கள். அதன் காரணமாக, அவர்களைக் கண்டறிவது கடினமாக இருந்தது. சிறு குழுவினர் என்பதன் காரணமாக தாக்குதலின் பின்னர் இரண்டிரண்டு பேராகப் பிரிந்து இலகுவாக எதிரிகளின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு தங்கள் முகாம்களுக்குத் திரும்பி வரவும் வசதியாக இருந்தது.

இப்படையணியின் தாக்குதல் தீவிரம் பெறத்தொடங்கியதும் புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள் பாரியளவிலான தாக்குதல் நடவடிக்கைகளை மட்டுமன்றி, தங்கள் நடமாட்டங்களையும் குறைத்துக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதன் காரணமாக, கடும் சினம் கொண்ட புலிகள் அமைப்பு இராணுவத்தினர் மீதான தாக்குதல்களைக் கைவிட்டு பொது மக்களை தங்கள் தாக்குதல்களை மேற்கொள்ளத் தொடங்கினர்.

அவ்வாறான நிலையில், இராணுவத் தாக்குதல்களை விட புலிகளின் இலக்காக இருக்கக்கூடிய பிரதேசங்களின் எல்லைப் பகுதிகளில் சிற்சிறு குழுக்களாகப் பிரிந்து சிவில் உடையில் பாதுகாப்பு வழங்குவதற்கான இராணுவ அணிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த அணிகள் லாபிரின் தலைமையில் இயங்கத் தொடங்கின.

அநுராதபுரம் புனித நகரப்பகுதி தாக்குதல், திருகோணமலை மற்றும் வவுனியாவிலிருந்த சிங்களக்கிராமங்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக வவுனியா மற்றும் வெலிஓயாப் பகுதியில் சிவில் உடையிலான இராணுவப் பாதுகாப்பு அணி களமிறக்கப்பட்டது.

அப்போதைய கேப்டனாக இருந்த லாபிர் சாரம் உடுத்தி சேர்ட் அணிந்து கொண்டு தன்னை ஒரு முஸ்லிம் வர்த்தகர் போன்று வேடமிட்டுக் கொள்வார். அவருக்கு உதவியாக வாரண்ட் ஒபிசர் ரஞ்சித் மானவடு மற்றும் சார்ஜண்ட் மேஜர் குமார பெரேரா போன்றோர் சிவில் உடையில் லாபிருடன் அணி சேர்ந்து கொண்டனர். லொறியொன்றை வாடகைக்குப் பெற்றுக்கொண்ட இக்குழுவினர் முதலாளியும் பணியாளர்களுமாக வேடமிட்டு வெலிஓயா தொடக்கம் வவுனியா வரை அடிக்கடி இடம் விட்டு இடம் நகர்ந்து புலிகளின் தாக்குதல்களிலிருந்து பொது மக்களுக்குப் பாதுகாப்பளித்தனர்.

அக்காலப்பகுதியில் இவர்கள் பயணிக்கும் லொறியின் உள்ளே மறைவாக ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்க லாபிர் கைத்துப்பாக்கியொன்றையும் இடையில் மறைத்து வைத்தபடி லொறியின் முன்னால் அமர்ந்து பயணிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். அவ்வாறான பயணங்களின் போது ஏராளம் புலி உறுப்பினர்கள் ஒன்றிரண்டு பேராக இவர்களிடம் மாட்டிக் கொண்டு பரலோகப் பயணத்துக்கான வீசா பெற்றுக் கொண்டிருந்தனர்.

இவ்வாறிருக்கையில், புலிகளின் புலனாய்வுப்பிரிவினரும் கேப்டன் லாபிர் தலைமையிலான குழு தொடர்பான தகவல்களை பொது மக்கள் மத்தியிலிருந்து பெற்றுக் கொண்டிருந்தனர். இதனையடுத்து, அவர்களைத் தாக்குவதற்காக புலிகளின் பெருமளவான உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றும் தயார் செய்யப்பட்டது. வெலிஓயாவுக்கு சென்று விட்டு வவுனியா திரும்பிக் கொண்டிருந்த நிலையில், புலிகளின் குழு இவர்களை திடீரெனத் தாக்கியது. கண்ணிவெடிகளும் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டது.

இந்தத்தாக்குதலின் போது சார்ஜண்ட் தர்மசிறி பெரேரா, கோப்ரல் மயூர ராஜா, கோப்ரல் உபசேன மற்றும் லான்ஸ் கோப்ரல் பரணவிதாரண ஆகியோர் கொல்லப்பட்டிருந்தார்கள். கோப்ரல் சேனநாயக்க மற்றும் பியதிஸ்ஸ ஆகியோருக்கு உடலில் குறிப்பாக கண்ணில் பட்ட காயங்கள் காரணமாக அவர்கள் நிரந்தரப் பார்வை இழந்தவர்களாக மாறிப்போயினர். எனினும், லாபிரும் இன்னொருவரும் மட்டும் கடைசி வரை தீரத்துடன் போரிட்டு பதில் தாக்குதல் மூலம் புலிகளை அடித்து விரட்டி விட்டு, உயிரிழந்த சிப்பாய்களின் சடலங்களையும் காயம்பட்டவர்களையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து பாதுகாப்பாக நகர்வதில் கேப்டன் லாபிர் வெற்றி கண்டிருந்தார்.1986ம் ஆண்டின் ஜூலை 30ம் திகதி இத்தாக்குதல் சம்பவம் வவுனியா நொச்சிமோட்டையில் நடைபெற்றிருந்தது.

தொடரும்….

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed