Main Menu

மாவீரன் கேணல் அஸ்லம் பஸ்லி லாபிர் – தொடர் 3

இந்த செய்தியைப் பகிர்க >>>

மாவீரன் கேணல் அஸ்லம் பஸ்லி லாபிர் – தொடர் 1

மாவீரன் கேணல் அஸ்லம் பஸ்லி லாபிர் – தொடர் 1


மாவீரன் கேணல் அஸ்லம் பஸ்லி லாபிர் – தொடர் 2

மாவீரன் கேணல் அஸ்லம் பஸ்லி லாபிர் – தொடர் 2


மாவீரன் கேணல் அஸ்லம் பஸ்லி லாபிர் – தொடர் 3

அஷ்ரப் அலி பரீத்
புலிகளின் தாக்குதல்களிலிருந்து பொது மக்களைப் பாதுகாப்பதற்காக அச்சுறுத்தல் நிலவும் கிராமங்களில் சிவில் உடையில் இராணுவத்தின் நடமாடும் பிரிவொன்றை உருவாக்குவது அன்றைய இராணுவ முக்கியஸ்தர்களின் பரீட்சார்த்த திட்டமாக இருந்தது. 1983ம் ஆண்டின் பின்னர் புலிகளுக்கெதிரான அனைத்துப் பரீட்சார்த்த முயற்சிகளும் பஸ்லி லாபிரை மையப்படுத்தியே மேற்கொள்ளப்பட்டதைப் போன்றே இந்த முயற்சியும் அவரது தலைமையில் முன்னெடுக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டது. ஆரம்ப நாட்களில் இந்த முயற்சி எதிர்பார்த்த பலனைக் கொடுத்தது. சிங்களக் கிராமங்களுக்கு ஊடுருவி பொது மக்களைத் தாக்குதவதற்கான புலிகளின் அனைத்து முயற்சிகளும் திறமையான முறையில் முறியடிக்கப்பட்டது.

இராணுவத்தின் யாரோ ஒரு முஸ்லிம் அதிகாரி அதுவும் பாகிஸ்தானியப் படையினரால் சிறப்பாகப் பயிற்றுவிக்கப்பட்டவர் தங்களுக்கு எமனாக மாறிக்கொண்டிருக்கின்றார் என்ற புலனாய்வுத்தகவல் புலிகளுக்கு கிடைத்தது. அவர்களால் அதனை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இதிலிருந்து மீள்வதற்கான வழி என்ன? என்று தீவிரமாக ஆலோசித்த போது தான் அண்டன் பாலசிங்கத்தின் குள்ளநரிப் புத்தி கொண்ட மூளையில் ஜிகாத் ஐடியா வந்தது.

கிழக்கில் இராணுவத்தின் புலனாய்வுப்பிரிவின் சிங்கள இராணுவ அதிகாரிகள் சிலர் முனாஸ், ஹசான், தில்சாத் போன்ற முஸ்லிம் பெயர்களில் இயங்கிக்கொண்டிருந்த காலகட்டம் அது. மேஜர் மஜீத் சிவில் உடையில் ஆயுதங்களுடன் புலிகளின் பிரதேசங்களில் வலம் வந்த காலமது. மறுபுறத்தில் புலிகளிலிருந்து பிரிந்து போன தமிழ் உளவாளியொருவரும் பாறூக் என்ற புனைப்பெயரில் / முஸ்லிம் பெயரில் இயங்கிக் கொண்டிருந்தார். இதனைக்கொண்டு கிழக்கிலங்கையில் ஜிகாத் அமைப்பு ஊடுருவியுள்ளதாக இந்தியாவை பயங்காட்டி அதுவரை புலிகளை விட்டு எட்ட நின்று கொண்டிருந்த இந்தியாவையும் இந்திய உளவு அமைப்பையும் தன் காலடிக்கு வர வைத்தார்கள்.

பாகிஸ்தானிய ஆதரவு பெற்ற ஜிகாத் அமைப்பு இலங்கையைத் தளமாகக்கொண்டு இந்தியாவைத் தாக்குவதற்குத் திட்டமிடுவதாகவும், புலிகள் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பூச்சாண்டி காட்டினார்கள். ஜிகாத் அமைப்பை அழிப்பதாக இருந்தால் தங்களுக்கு மேலதிக ஆயுதம் மற்றும் நிதியுதவி வேண்டுமென்று நிபந்தனை விதித்து ஏராளம் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவிகளைப் பெற்றுக் கொண்டார்கள். இக்காலகட்டத்தில் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்.ஜீ.ஆரும் 6 கோடியே 37 இலட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியதாகக் கூறப்படுகின்றது.

(இவ்வாறாக தமக்கான ஆயுதங்கள் மற்றும் நிதியுதவிகளுக்காக கிழக்கு முஸ்லிம்களைப் பாகிஸ்தான் ஆதரவு ஜிகாதிய ஆதரவாளர்களாக இந்திய உளவுத்துறையிடம் பொய்யான கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு நம்ப வைத்த புலிகளின் துரோகம் காரணமாகவே இந்தியப்படை கிழக்கின் முஸ்லிம் கிராமங்களில் புலிகளைப்போன்றே வெறியாட்டங்கள் ஆடியிருந்தது.

ஏறாவூர், காத்தான்குடி, கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று என்று முஸ்லிம் இளைஞர்களை சுட்டுப்படுகொலை செய்ததுடன், அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்ட தமிழ் ஆயுதக்குழுக்களை ஊக்குவிக்கவும் செய்தது. உச்சபட்சமாக 1989ம் ஆண்டு புலிகளும் அவர்களது ஆதரவு பெற்ற வீரமுனைத்தமிழ் இளைஞர்களும் சம்மாந்துறையை முற்றாகக் கொள்ளையடித்து, தீ வைத்து எரித்து, படுகொலைகளை அரங்கேற்றிக் கொண்டிருந்த போது, இந்திய இராணுவம் கொலையாளிகளைத் தப்ப விடும் வகையில் செயற்பட்டு முஸ்லிம்களை அழிப்பதற்கு உதவி செய்தது)

இவ்வாறாக கிடைத்த ஆயுதங்களில் ஜிகாத் குழுவினரை மறைந்திருந்து அழிப்பதற்காக என்று சக்தி வாய்ந்த கண்ணிவெடிகள் சிலவும் புலிகளுக்கு கிடைத்திருந்தன. அவற்றில் சிலவற்றைக் கொண்டு தங்களுக்கெதிராக வளர்ந்து வரும் பஸ்லி லாபிரைக் கூண்டோடு அழிக்க புலிகள் திட்டமிட்டார்கள்.

1986ம் ஆண்டின் ஜூலை 30ம் திகதி வெலிஓயா சென்று விட்டு பஸ்லி லாபிரின் சிவில் இராணுவ அணி வவுனியா திரும்பிக் கொண்டிருந்தது. வழக்கம் போன்று கோப்ரல் உபசேன லொறியைச் செலுத்திக் கொண்டிருக்கின்றார். அவருக்குப் பக்கத்தில் முதலாளி வேடத்தில் பஸ்லி லாபிர் சீட்டுக்கு கீழே துப்பாக்கிகளும் இடுப்பில் கைத்துப்பாக்கியுமாக அமர்ந்திருக்கின்றார். மற்றவர்கள் பின்னால் அமர்ந்திருக்கின்றனர்.

வண்டி நொச்சிமோட்டையை நெருங்கிக் கொண்டிருந்தது. வழக்கம் போன்றே அன்றும் மெதுவாகவே லொறி செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. புலிகளின் தாக்குதல்களை எந்த நேரத்திலும் எதிர்பார்க்க வேண்டிய நிலை இருந்ததால், மெதுவாகவே வண்டியோட்டுமாறு லாபிர் தனது சாரதிக்கு எப்போதும் அறிவுறுத்துவார்.

இவ்வாறான பயணங்களின் போது பஸ்லி லாபிர் உரத்த குரலில் இந்திப்பாடல்களைப் பாடி தனது அணியினரை மகிழ்விப்பது வழக்கம். அவர் பாட மறந்தாலும், அவரது சிப்பாய்கள் விடமாட்டார்கள். அந்தளவுக்கு இனிமையாக இந்திப்பாடல்களைப் பாடுவார். இந்திப் பாடல்கள் பாடி முடித்தால் இஸ்லாமிய கீதங்கள் மற்றும் தமிழ்ப்பாடல்களும் அவ்வப்போது பாடுவதுண்டு.

அவரது சிப்பாய்கள் மெய்ம்மறந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள்.அப்படித்தான் அன்றும் அவர்களின் பயணம் இனிமையாக நகர்ந்து கொண்டிருந்தது. இந்திப்பாடல்கள் லொறிக்கு வௌியேயும் எதிரொலித்தன. பாதையின் இருமருங்கிலும் இருந்த வயல்வௌிகளில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் யாரது என்று தலை நிமிர்ந்து பார்த்து தங்களுக்குப் பழக்கமான முதலாளி என்றவுடன் சிநேகமாகப் புன்னகைத்தார்கள். பாதையோரங்களின் காவலரண்களிலிருந்த சிப்பாய்கள் இரகசியமாக கைகளை உயர்த்தி சல்யூட் செய்தார்கள். இப்படியாக வண்டி நொச்சிமோட்டையை நெருங்கிக் கொண்டிருந்தது.

என்ன தான் பாட்டும் கும்மாளமுமாக பயணத்தைத் தொடர்ந்தாலும் பஸ்லி லாபிரின் கழுகுக்கண்கள் பாதையின் நீண்ட தூரத்தில் பதிந்திருக்கும். அத்துடன், பாதையின் இரு மருங்கிலும் கூர்மையான பார்வை துழாவிக் கொண்டிருக்கும். இப்படியிருக்கையில் தான் நொச்சிமோட்டையூடாக வண்டி நகர்ந்து கொண்டிருந்த போது, பாதையின் ஒரு புறத்தில் தான் அமர்ந்திருக்கும் திசையில் வித்தியாசமான அசைவுகள் அவரது கண்களில் தென்படுகின்றது.

“உபசேன, வண்டியை நிற்பாட்டு” என்ற உத்தரவு அவர் வாயிலிருந்து வெளிப்படுவதற்கிடையில் வண்டி அந்த இடத்தைக் கடக்கத் தொடங்கியிருந்தது. மறுகணம் கண்ணிவெடிகள் பாரிய சப்தத்துடன் வெடித்து பின்புற பக்கவாட்டுப் பகுதியை சல்லடையாக்கியதில் உள்ளே இருந்த சார்ஜண்ட் தர்மசிறி பெரேரா, கோப்ரல் மயூர ராஜா மற்றும் லான்ஸ் கோப்ரல் பரணவிதாரண ஆகியோரின் உயிரைப் பறித்திருந்தது. வண்டி குலுங்கி நின்ற போது பக்கவாட்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் உபசேனவின் உயிருக்கு உலை வைத்திருந்தது.

வண்டியின் பின்னாலிருந்த கோப்ரல் சேனநாயக்க மற்றும் பியதிஸ்ஸ ஆகியோருக்கு உடலில் குறிப்பாக கண்ணில் பட்ட காயங்கள் காரணமாக அவர்களால் எதையும் பார்க்க முடியாத நிலை. (பின்னர் நிரந்தரப்பார்வை இழந்தவர்களாக மாறிப் போயினர்). பின்னால் இருந்தவர்களில் ஒரு சிப்பாய் மட்டும் காயங்களுடன் உயிர் தப்பியிருந்த போதும், அவனும் உயிரிழந்தவன் போன்றே அசைவற்றுக் கிடந்தான்.

எதிரிகளின் அசைவைக் கண்டதும் சட்டென்று லொறிக்குள் சுதாகரித்த லாபிர் துப்பாக்கியை எடுக்க கீழே குனிந்து விட்டதால், கண்ணிவெடியின் தாக்குதல் பாரியளவில் அவரைத் தாக்கவில்லை. ஆயினும் காயம் பட்டிருந்தார்.

கண்ணிவெடித் தாக்குதலையடுத்து புலிகள் லொறியை நோக்கி நிதானமாக நகரத்தொடங்கினார்கள். லொறி பாதியளவு உருக்குலைந்து போயிருந்தது. பக்கவாட்டில் டயர் ஒன்று முற்றாக சேதம். இந்நிலையில், தலையை உயர்த்தமாலேயே நிலைமையை அவதானித்த அவர் தான் மட்டுமே உயிருடன் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தார். புலிகள் பக்கவாட்டில் நெருங்கி வந்ததும் திடீரென்று அவரின் துப்பாக்கி சீறத்தொடங்கியது.

தனது உயரதிகாரி உயிருடன் இருப்பது தெரிந்தவுடன் பின்னால் காயத்துடன் இருந்த சிப்பாயும் தலை தூக்கி சகட்டு மேனிக்கு சுடத்தொடங்கினான். எதிர்பாராத தாக்குதலில் கவர் எடுக்கவும் முடியாமல் நிலத்தில் விழுந்து உருண்டு தப்பியோடுவதைத்தவிர புலிகளுக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை.

அடுத்த கணம் சட்டென்று ட்ரைவர் இருக்கைக்கு தாவிய லாபிர் வண்டியை உயிர்ப்பிக்க முயன்ற போது அதிர்ஷ்டம் அவருக்கு கைகொடுத்தது. வண்டியை நகர்த்திக் கொண்டே ஒரு கையால் அவரது துப்பாக்கி சன்னங்களை சீறவிட பின்னாலிருந்த சிப்பாயும் ஆவேசமாக சுட்டுக் கொண்டிருக்க அரைக்கிலோ மீற்றர் தூரம் வரை அவர்கள் நகர்ந்து கொள்ள முடிந்தது. அதற்குள்ளாக குண்டுவெடிப்பு சப்தம் கேட்டு விரைந்து வந்த இராணுவ அணியொன்று அவர்களுடன் இணைந்து கொள்ள லாபிரும் மற்றைய சிப்பாயும் உயிர் தப்பிக் கொள்ள முடிந்தது. உயிரிழந்த சிப்பாய்களின் சடலங்களையும் காயப்பட்டவர்களையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து பாதுகாப்பாக வவனியா வந்து சேர்ந்தார்கள்.

சிவில் உடையில் இராணுவ அணி நடமாட்டம் என்பது இனியும் கைகொடுக்காதென்பது இராணுவ உயரதிகாரிகளுக்கு தௌிவாக விளங்கியது. அவ்வாறு நடமாடும் அணிகளுக்கு உயிர் நிலைப்பது நிச்சயமில்லை என்பதை கண்ணிவெடித் தாக்குதல் உணர்த்தி இருந்தது. அதன் காரணமாக அந்த பரீட்சார்த்த முயற்சிக்கு அத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அக்காலப் பகுதியில் தான் யாழ்ப்பாணத்தில் பாரிய இராணுவ நகர்வொன்றின் மூலம் புலிகளுக்கு சமாதி கட்ட அன்றைய பிரிகேடியர் டென்சில் கொப்பேகடுவ தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார். ஒபரேசன் லிபரேசன் படை நடவடிக்கை கட்டங்கட்டமாக திட்டமிடப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது அவரது தலைமையின் கீழ் யாழ்ப்பாணத்தில் பதினையாயிரம் வரையான இராணுவத்தினர் நிலை கொண்டிருந்தனர்.

மறுபுறத்தில் புலிகள் அமைப்புடன் ஈரோஸ் அமைப்பு கைகோர்த்து நின்றது. இருதரப்பு ஆயுததாரிகளும் பொது மக்களை கேடயங்களாகக் கொண்டே தங்கள் நகர்வுகளை மேற்கொண்டு வந்தார்கள். அவ்வாறான நிலையில், மரபுப்போரை விட கெரில்லாப்போர் முறையில் ஒபரேசன் லிபரேசனை நடத்தி முடிப்பது டென்சில் கொப்பேகடுவையின் நோக்கமாக இருந்தது. கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் ஸ்பெயினுக்கெதிராக பெரு நாட்டின் இளைவரசன் டுபாக் அமரு II என்பவர் கையாண்ட அதே போராட்ட முறை இது. (டுபாக் அமாரு பற்றிய மேலதிக விபரங்கள் பின்குறிப்பில் வாசிக்கவும்)

டுபாக் அமாரு போர்முறைக்கு இலங்கை இராணுவத்திலிருந்த மிகச்சிறந்த போர் வீரன் பஸ்லி லாபிர் தான். டென்சில் கொப்பேகடுவ அதனை நன்கறிவார். எனவே, ஒபரேசன் லிபரேசனின் முக்கிய படை நகர்வுகள் லாபிர் மற்றும் அவரது படைப்பிரிவை மையப்படுத்தியே வகுக்கப்பட்டது. சிவிலியன்களுக்குள் ஊடுருவி நிற்கும் புலிகளைத்தேடி அழிப்பது, வல்வெட்டித்துறைக்குள் ஊடுருவி அங்கு பதுங்கி இருக்கும் பிரபாகரன் தப்பிச்செல்லாதவாறு பாதுகாப்பு வளையம் அமைப்பது போன்ற முக்கிய நகர்வுகள் பஸ்லி லாபிரின் சிறு படைப்பிரிவை மையமாக கொண்டு திட்டமிடப்பட்டது.

அதற்காக அவரும் அவரது துரிதப்பரம்பல் படையணியும் வன்னி பெருநிலப்பரப்பிலிருந்து யாழ்.குடாநாடு நோக்கி இடமாற்றப்பட்டார்கள். அங்கு சென்ற பின்னரும் அவர்களின் ஆட்டமும் பாட்டமும் அடங்கவில்லை. மாலை வேளைகளில் எங்காவது சுற்றித்திரிவது. கடற்கரையோரங்களில் காற்று வாங்கிக் கொண்டு இந்திப்பாடல் கச்சேரி என்று அவர் தன் பாட்டுக்கு யாழ். நகரம் முழுவதும் சுற்றித்திரிந்தார். வழமையான முதலாளி வேடமும் அவரது பணியாளர்களாக நடித்த இராணுவச் சிப்பாய்களும் அதற்கு பக்காவாக கைகொடுத்தார்கள். புலிகளின் முகாம்கள் வரை அவர்களின் நடமாட்டங்கள் நீடிக்கப்பட்டது.

என்ன தான் உல்லாசமாக சுற்றித்திரிவதாக மற்றவர் கண்களை அவர் ஏமாற்றினாலும், அவரது கழுகுக்கண்ணும் ஆண்டெனா செவிகளுமாக அவர் கிடைக்கும் ஒவ்வொரு தகவலையும் மிகக்கவனமாகச் சேகரித்து புலிகள் பற்றிய புலனாய்வு நடவடிக்கையை கச்சிதமாக மேற்கொண்டிருந்தார். யாருக்கும் எந்தவொரு சந்தேகமும் வரவில்லை. புலிகளின் தீவிர ஆதரவாளர்களின் கடைகளுக்குள் போய் டீ குடித்து விட்டு சாவகாசமாகப் பேசி விட்டு அவர் திரும்பிச்சென்ற பின்னரும் அவர் ஒரு இராணுவ அதிகாரியாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் கடுகளவும் யாருக்கும் ஏற்பட்டதில்லை.

இப்படியான புலனாய்வு சேகரிப்பு மூலம் வல்வெட்டித்துறையில் பிரபாகரன் பதுங்கி இருப்பதும் அவரது முக்கிய தலைவர்களின் பதுங்குமிடங்களும் அச்சொட்டான விபரங்களுடன் லாபிரின் படையணி சேகரித்திருந்தது. தேவையான விபரங்கள் கிடைத்தவுடன் ஒபரேசன் லிபரேசனுக்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் ஏற்பாடுகளை டென்சில் கொப்பேகடுவ தீவிரப்படுத்திக் கொண்டிருந்தார்.

பிரபாகரனும் புலிகளும் இவை எதையும் அறியாமல் கிழக்கு முஸ்லிம்களை ஜிகாதிகளாகக் காட்டிக் கொடுத்து இந்திய உளவுத்துறையின் அனுசரணையுடன் பெற்றுக்கொண்ட நவீன ஆயுதங்களைக் கொண்டு யாழ்ப்பாணத்தை தங்கள் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது பற்றிய கனவுகளுக்குள் புதைந்து போயிருந்தனர்.

தொடரும்….

பின்குறிப்பு
12 ஆம் நூற்றாண்டின் புகழ் வாய்ந்த இங்க்கா பேரரசின் கீழ் பெரு நாடு ஆளப்பட்டது. அதன் தலைநகராக பெரு நாட்டிலுள்ள குஸ்கா நகரம் விளங்கியது. இங்க்கா ஆட்சி தன்னிறைவு பெற்று தனிச்சிறப்புடன் செழிப்பாக இருந்த காலத்தில், 1539 ஆம் ஆண்டில் ஸ்பெயின் நாடு பெருவைக் கைப்பற்றியது. அக்கால கட்டத்தில் பெருவில் உள்நாட்டுப் போர்களும் நடந்த நேரம். அசைக்க முடியாத பலமிக்க பேரரசாக வெற்றிக்கொடி நாட்டியிருந்த இங்க்கா பேரரசு வீழ்ந்தது. அதன் இராஜ்ஜியங்கள் பெரு வைஸ்ரோயின் ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டது. முன்னைய தலைநகர் கைவிடப்பட்டு, இன்னொரு நகரமான லிமாவைத் தலைநகராக மாற்றப்பட்டது. இன்றளவும் லிமா தான் பெருவின் தலைநகர்.

1780 இல் டுபாக் அமாரு என்பவர் ஸ்பெயினுக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டார். அவரது முழுப்பெயர் ஜோஸ் காப்ரியேல் டுபாக் அமாரு பின்னாளில் டுபாக் அமாரு II என்றழைக்கப்பட்டார். (பிறப்பு மார்ச் 10.1738-இறப்பு- மே 18,1781) பெருவை ஆக்கிரமித்திருந்த ஸ்பானியாவுக்கெதிரான மாபெரும் விடுதலைப்போர் வீரனான இவர், இங்க்கா அரச வமிசத்தைச் சேர்ந்தவர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொ்ணடார்.

ஸ்பெயின் படைகள் இருக்கும் இடங்களில் சந்தடியின்றி ஊடுருவி முக்கியஸ்தர்களை தீர்த்துக்கட்டுவது, இரகசிய நகர்வுகள் மூலம் எதிர்பாராத திடீர்த்தாக்குதல்கள் என்று அவர் போரியல் முறையில் புதிய உத்திகளை அறிமுகப்படுத்தியிருந்தார். அவரது தலைமையிலான கலவரத்தை ஸ்பெயின் அரசு அடக்கி விட்டது. டுபாக் அமாரு தூக்கிலிடப்பட்டார். 1821 இல் ஸ்பெயின் அரசு பெருவுக்கு விடுதலையளித்தது. இன்றளவும் கெரில்லாப் பாணியிலான இராணுவ நகர்வுகள் பெரும்பாலும் டுபாக் அமாரு வழியொட்டியதாகவே கணிக்கப்படுகின்றது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed