Main Menu

நான்கு மாதங்களுக்கே மீராவோடை வாராந்த சந்தை நடைபெறும் : ஒப்பந்தம் கைச்சாத்து

இந்த செய்தியைப் பகிர்க >>>

மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் மீராவோடை பொதுச்சந்தையில் இடம்பெற்று வரும் புதன் வாராந்த சந்தையை நான்கு மாதங்களுக்கு மாத்திரமே நடாத்துவதெனவும் நான்கு மாதங்களுக்குள் சந்தையைப் புனர்நிர்மானம் செய்து நிரந்தரமான கடைகளை உருவாக்கி, சந்தையைத்தொடர்ந்து நடாத்துதல் எனவும் உடன்பாடு காணப்பட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மீராவோடை சந்தையில் ஆரம்பிக்கப்பட்ட வாராந்த சந்தையால் ஓட்டமாவடி சந்தையில் நிரந்தர வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வர்த்தகர்கள் பாதிக்கப்படுவதாகவும், உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும் பலமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், இச்சந்தை வாராந்தம் தொடர்ந்தும் நடாத்தப்பட வேண்டுமெனவும் தினச்சந்தையாக மாற்றப்பட வேண்டுமென்ற கோசங்களும் பலமாக மீராவோடை பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்டிருந்தன.

அதே நேரம், இதனை இடைநிறுத்த ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை. தொடர்ந்தும் இடம்பெறுமென்ற வாக்குறுதியும் மீராவோடை பள்ளிவாயல் நிருவாகத்தினால் வழங்கப்பட்டிருந்தது.

இவ்விடயம் பல்வேறு வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்திருந்ததுடன் பிரதேசவாதத்தை உருவாக்கி முரண்பாட்டைத் தோற்றுவிக்குமளவிற்கு சென்றிருந்ததுடன், அரசியல் ரீதியாக சில இதனைப்பயன்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே இது தொடர்பில் சுமூகமான தீர்வொன்றைக்காணும் நோக்கில் கோறளைப்பற்று ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் நேற்று 09.10.2018ம் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச சபை மண்டபத்தில் விஷேட கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இக்கலந்துரையாடலுக்கு ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயல், மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயல், ஓட்டமாவடி வர்த்தக சங்கம், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள், கல்குடா உலமா சபை ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் எம்.எஸ்.எம்.அஷ்ரப் மெளலவி, எம்.ஏ.எம்.தாஹிர் மெளலவி ஆகியோர் மத்தியஸ்தம் வகிக்க மீராவோடை பள்ளிவாயல் நிருவாக சபை சார்பில் அதன் தலைவர் கே.பி.எஸ்.ஹமீட், செயலாளர் எம்.எஸ்.ஜெமீல், உறுப்பினர் எம்.எல்.சித்தீக் ஆகியோரும் ஓட்டமாவடி பள்ளிவாயல் சார்பாக Dr. எம்.எச்.எம்.முஸ்தபா, Dr. எம்.நஜீப் கான், எம்.ஐ.இல்யாஸ் ஆகியோரும் வர்த்தக சங்கம் சார்பாக பழக்கடை முபாறக் உட்பட மூவரும் பிரதேச சபை உறுப்பினர்களில் ஏ.எம்.நெளபர், உதவித்தவிசாளர் யூ.எல்.அஹமத், எம்.பி.எம்.ஜெஸீமா ஆகியோரைத்தவிர அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மூடிய அறைக்குள் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் தத்தமது தரப்பு நியாயங்களை முன்வைத்து வாதிட்டதுடன், உடனடியாக வாராந்த சந்தை மூடப்பட வேண்டுமென்ற வலுவான கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

மீராவோடை வாராந்த சந்தை விடயத்தில் தலைவர் ஹமீட் உட்பட பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.ஏ.அன்வர் ஆசிரியர், ஐ.எல்.பதுர்தீன். எஸ்.எல்.பாயிஷா நெளபல் ஆகியோரும் தமது பிரதேச மக்களின் எதிர்பார்ப்பு, கோரிக்கைகள் தொடர்பில் தமது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்திருந்தனர்.

இறுதியில் நான்கு மாதங்கள் வரை புதன் வாராந்த சந்தையை நடாத்திச்செல்வதெனவும், நான்கு மாதங்களுக்குள் மீராவோடை சந்தையை இயங்க வைக்கத்தேவையான சகல ஏற்பாடுகளையும் பிரதேச சபை, வர்த்தக சங்கம், ஓட்டமாவடி ஜும் ஆப்பள்ளிவாயல் ஆகியன இணைந்து மேற்கொள்வதெனவும் மீராவோடை ஜும்ஆப் பள்ளிவாயல் பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமெனவும் எழுத்து மூலமான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சகலரது ஒத்துழைப்பு ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட நான்கு மாத கால ஒப்பந்தத்தை மத்தியஸ்தராகச் செயற்பட்ட எம்.எஸ்.எம்.அஷ்ரப் மெளலவியால் வாசிக்கப்பட்டு சபையின் ஏகமான அங்கீரத்தைப் பெற்றது.

அதே நேரம், இப்பிரச்சினை சுமூகமாகத் தீர்க்கப்பட வேண்டும். இதனால் எந்தத்தரப்பினரும் பாதிக்கப்படக்கூடாதென்பதில் பிரதேச உறுப்பினர்களான எஸ்.ஏ.அன்வர் ஆசிரியர், ஐ.எல்.பதுர்தீன். எஸ்.எல்.பாயிஷா நெளபல் ஆகியோரின் பங்களிப்பும் மீராவோடை பிரதேச மக்களின் பிரதிநிதிகளாக கட்சி வேறுபாடுகளுக்கப்பால் அவர்களின் நடுநிலைப்போக்கும் பாராட்டுக்குரியது.

நான்கு மாத கால ஒப்பந்தம் நிறைவேற்றப்படாவிட்டால் வாராந்த சந்தை தொடர்வதற்கான வாய்ப்புக்களே உள்ளன. இதுவொரு தற்காலிகத்தீர்வாக இல்லாது நிரந்தரத்தீர்வாக அமுல் செய்யப்பட்டு எல்லோரும் ஒற்றுமையாக பிரதேச, அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் வாழும் சூழல் ஏற்படுத்தப்பட அனைத்து தரப்பினரும் இதய சுத்தியுடன் செயற்பட வெண்டியது அவசியமாகின்றது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed