Main Menu

மாவடிச்சேனை அஹமட் ஹிராஸ் வீதியும் மக்கள் படும் அவலமும்

இந்த செய்தியைப் பகிர்க >>>

MLA.Samad (BBA),(JP)
ஒரு கிராமத்தின் பல்வேறு அபிவிருத்திக் குறிகாட்டிகளில் வீதி மற்றும் வடிகான் என்பன முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில், எமது கல்குடாப்பிரதேசத்தில் பல வீதிகளும் வடிகான்களும் போடப்படுகின்ற போதிலும், அவை முறையான திட்டமிடலுடனும் மேற்பார்வையுடனும் செய்யப்படுகின்றனவா என்றால் அது கேள்விக்குறியாகவே தொக்கி நிற்கின்றது.

எமது பிரதேசத்தைப் பொறுத்த வரைக்கும் ஒரு கொந்துராத்துக்காரர் அல்லது ஒப்பந்தகாரர் (Contractor) ஆவதற்கு இருக்க வேண்டிய தகுதி அவரிடம் காசு, அரசியல் செல்வாக்கு மற்றும் ஹாஜி என்கின்ற பட்டம் இருந்தாலே அவர் பெரியதொரு கொந்தராத்துக்காரராக அரசியல்வாதிகளால் மதிக்கப்பட்டு அனைத்து நிர்மாண வேலைகளும் அவரிடமே வழங்கப்படுவது வாடிக்கையாகி விட்டது.

*உண்மையில் அவ்வொப்பந்தகாரர் முறையாக அவ்வேலைகளைச்செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரா?

* கொடுக்கப்படும் ஒப்பந்த வேலைகளில் ஏதாவது ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்றனவா?

* மக்கள் எதிர்பார்க்கும் பயன் ஒப்பந்தக்காரரால் நிறைவேற்றப்படுகின்றதா?

என்பன போன்ற விடயங்கள் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்களாலும் அரசியல்வாதிகளாலும் கவனத்திற் கொள்ளப்படுவதேயில்லை. மாறாக, எவ்வாறாயினும் அவரவர் சட்டைப்பை நிரம்பினால் போதுமென்ற பேரவல நிலையையே பரவலாகக் காணக்கூடியதாகவுள்ளது.

விடயத்திற்கு வருவோம். கடந்த மூன்று தசாப்தங்களாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எல்லைக்கிராமங்களில் மாவடிச்சேனையும் ஒன்று. அதிலும் குறிப்பாக இந்த அஹமட் ஹிராஸ் வீதியும் இவ்வீதியை அண்டிய மக்களும் பல துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்தவர்கள் என்பது சற்றுக்கூடுதலாக கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய விடயம். அது மாத்திரமன்றி, கிட்டத்தட்ட 99% மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழக்கூடிய பாமரர்கள்.

இவ்வாறான பின்னணியைக் கொண்டு காணப்படுவதால் தான் என்னவோ இப்பகுதி கடுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்ற பகுதியாக இருந்த போதிலும், மிகவும் காலம் தாழ்த்தியே இவ்வீதிக்கான வடிகான் கட்டப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அவ்வாறு கட்டப்பட்ட வடிகான் “முறையாகக் கட்டப்பட்டதா? ” என்றால், அதுவுமில்லை. ஏனெனில் ஒரு வடிகான் கட்டப்படும் போது அது ஆரம்பிக்கின்ற பகுதி சற்று உயர்வாகவும் முடிகின்ற பகுதி தாழ்வாகவும் இருக்க வேண்டுமென்பது மழைக்குக்கூட பள்ளிக்கூடத்தின் பக்கம் ஒதுங்காத ஒரு சிறு பிள்ளைக்கும் தெரிந்த விடயம்., ஏன் அதை கொந்துராத்து எடுத்தவர்களுக்கும் அதனை மேற்பார்வை செய்த அதிகாரிகளுக்கும் தெரியாமல் போனதோ தெரியவில்லை.

அது மாத்திரமல்ல, இவ்வடிகானுக்குரிய இயற்கையான நீரோட்டப்பகுதி அரசியல் செல்வாக்குள்ளவர்களால் தடை போடப்பட்டு பாரிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இப்பகுதி வடிகானுக்கென்று அரசினால் ஒதுக்கப்பட்ட பகுதியாக இருந்த போதிலும், அதை மறித்தே கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இதற்கு சாட்சியாக பழைய வடிகான் குழாயின் எச்சங்கள் இன்னும் அங்கு காணப்படுகின்றன என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம். (இதுவும் அவர்களது எதிர்கால பாதுகாப்புக்கருதி முற்றாக அகற்றப்படலாம்) இதனால் தண்ணீர் ஓடுவதற்குப் பதிலாக தேங்கி நின்று முன்பிருந்ததை விட தற்போது கூடுதலான அசெளகரியங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.

இது கிணறு வெட்டப்போய் பூதம் வெளிக்கிட்ட கதையாக மாறியுள்ளது. ஆயினும், இவையனைத்தும் தெரிந்தவர்களாக எமது அரசியல்வாதிகள் இருந்த போதிலும், அவர்களுடைய எதிர்கால அரசியல் நலன்கருதி இதனைக்கண்டும் காணாதவர்களாக இருக்கின்றனர். இவ்வடிகான் விடயங்களோடு சம்பந்தப்பட்ட அனைவரும் இறைவனைப் பயந்து கொள்ள வேண்டும்.

மேலும், இவ்வீதியைப் பொறுத்த வரைக்கும் மாவடிச்சேனை மக்கள் மாத்திரமன்றி, எமது பிரதேசத்திலுள்ள அனைத்து மக்களும் பயன்படுத்துகின்ற வீதியாக இருக்கின்றது.

ஏனெனில் நீதிமன்றம், பொலிஸ் நிலையம், புகையிரத நிலையம் மற்றும் வைத்தியசாலை என இன்னோரன்ன தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட வேண்டிய வீதியாக இவ்வீதி இருப்பதால், சிறு மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாத நிலை, அவர்களை மாத்திரமல்ல, நம்மனைவரையும் சங்கடத்துக்குள்ளாக்கும் என்பதில் ஐயமே இல்லை.

எது எவ்வாறாயினும், இராஜாங்க அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் அவர்களின் நிதியொதுக்கீட்டின் கீழ் இவ்வீதிக்கு காபட் இட இருப்பதாக பரவலான தகவல் பரப்பப்படுகின்றது. அவ்வாறு இருக்குமாயின், முதலில் இவ்வடிகான் தொடர்பான பிரச்சினையைச் சீர்செய்து விட்டு பின்பு காபட் வீதியாகப்போடுவதே எல்லோருக்கும் ஆரோக்கியமாக இருக்குமென்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

அது மாத்திரமன்றி, இது ஹிஸ்புல்லாஹ் போடும் வீதி தானே என்று முட்டுக்கட்டையாகவோ, அல்லது ஒதுங்கியோ இருக்காமல், சகல பொறுப்பு வாய்ந்த அரசியல்வாதிகளும் உத்தியோகத்தர்களும் மற்றும் பொது மக்களும் ஒத்துழைப்புடன் செயற்பட்டு அம்மக்களின் துயர் துடைக்க உதவுமாறு வினயமாக வேண்டியவனாக.

இவன்:
MLA.Samad (BBA),(JP)

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed