Main Menu

விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்தை வழங்கக்கோரி 31ம் திகதி போராட்டம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

முஹம்மது ஷிப்லி
அரச பாடசாலைகளில் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் 3850 பேரை நியமிப்பதற்கான பெயர்ப்பட்டியலை வெளியீடு செய்து 4 மாதங்களை கடந்தும் இன்னும் நியமனம் வழங்காது இழுத்தடிப்புச்செய்கிறது நல்லாட்சி அரசு.

கடந்த வருடம் அரச பாடசாலைகளுக்கு விளையாட்டுப் பயிற்றுவிளர்களை நியமிப்பதற்கான வேலைத்திட்டமொன்றை கல்வியமைச்சு மேற்கொண்டிருந்தது. பாடசாலை காலங்களில் தேசிய, மாகாண ரீதியில் திறமைகளை வெளிக்காட்டியவர்களை அரச பாடசாலைகளுக்கு விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களை நியமித்து பாடசாலை விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்ற நோக்கோடு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நேர்முகத் தேர்வு மற்றும் உடற்தகமை தேர்வு அடிப்படையில் 3850 பேர் தெரிவு செய்யப்பட்டு, ஜுன் மாதம் முதல் வாரத்தில் நியமனப் பெயர்ப்பட்டியலை வெளியிட்டிருந்தது. இருந்த போதிலும், குறித்த நியமனத்தை வழங்க சில மாகாணங்கள் சம்பளப் பிரச்சினையைக் காரணங்காட்டி இழுத்தடிப்புச் செய்திருந்தது.

விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்தை நம்பி தாங்கள் ஏற்கனவே செய்த வேலைகளை விட்டு 3850 இளைஞர், யுவதிகள் அன்றாட வாழ்வில் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர். குறித்த நியமனமானது, ஜுன் மாதம் இறுதி வாரத்தில் வழங்கப்படுமென வடமாகாண சபை பத்திரிகை மூலம் செய்தி வெளியிட்டிருந்ததையும் ஞாபகமூட்ட வேண்டும்.

விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்தை வழங்க நல்லாட்சி அரசு இதுவரை எவ்வித முன்னெடுப்புகளையும் செய்யாது காரணங்களை மட்டும் கூறி வருகின்றது. நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலத்தில் அரச நியமனங்களானது குறைந்தளவில் மாத்திரமே கொடுக்கப்பட்டிருக்கிறது. குறித்த நியமனத்தை நம்பி 3850 இளைஞர், யுவதிகளும் அவர்களது குடும்பங்களும் நம்பி இருக்கின்ற போதும், நல்லாட்சி அரசாங்கம் அதில் பொடுபோக்கையே கடைப்பிடித்து வருகின்றது.

குறித்த நியமனத்தை எதிர்பார்த்திருக்கும் இளைஞர், யுவதிகளின் எதிர்கால வாழ்க்கைக்கு வித்திட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்தை வழங்க நல்லாட்சி அரசாங்கமானது நடவடிக்கையெடுக்க வேண்டுமென அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மகஜர்கள் கையளிக்கப்பட்டும் எதுவிதமான பிரதிபலிப்பையும் இன்னும் நல்லாட்சி அரசு வழங்கவில்லை.

4 மாதங்களைக் கடந்து செல்லும் இந்நியமனத்திற்கான தீர்வினைப்பெற வேண்டிய இக்கட்டான நிலைக்கு தெரிவு செய்யப்பட்ட 3850 விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களும் தள்ளப்பட்டுளனர். நியமனத்திற்கான தீர்வினைப்பெற வேண்டுமென்பதற்காக எதிர்வரும் 31ம் திகதி கல்வியமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகங்களுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை தெரிவு செய்யப்பட்ட 3850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களும் முன்னெடுக்கவிருக்கின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed