ஓட்டமாவடி பிரதேச சபையின் பதிலீட்டு ஊழியர்களின் சம்பளப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டுமா?
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையில் கடந்த 2015 முதல் நியமனம் பெற்று சுமார் மூன்று வருடங்களாக பதிலீட்டு ஊழியர்களாக பல பிரிவுகளிலும் கடமையாற்றி வரும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுவதுடன், சரியானதொரு தீர்வின்றி காலம் கடத்தப்பட்டு வருவதகாவும் தங்களுக்கான தீர்வுகள் வழங்கப்பட வேண்டுமெனவும் குறித்த ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நியமன காலம் முதல் ரூபா 21000 – முதல் 30000 வரை சம்பளமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், சில மாதங்களில் பின் 7.500 ரூபா மாதச்சம்பளமாக குறைக்கப்பட்டு வழங்கப்பட்டது. இருப்பினும், நிரந்தர நியமனம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தொடர்ந்தும் பல்வேறு கஸ்டங்கள், வாழ்க்கைச்சுமைகளைத் தாங்கிக்கொண்டு கடமை புரிந்து வருகின்றனர்.
குறிப்பிட்ட காலப்பகுதியில் பிரதேச சபையில் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் ஊழல் மோசடி தான் பதிலீட்டு ஊழியர்களுக்கான சம்பளக் குறைப்புக்கு காரணமாக அமைந்ததா? என்ற சந்தேகமும் இல்லாமலில்லை.
அத்தோடு, புதிய சபை அமைந்தால் தங்களது சம்பளப்பிரச்சினை தீர்ந்து, தமது வாழ்வில் ஒளி வீசும் என்ற நம்பிக்கையில் இருந்த குறித்த ஊழியர்களுக்கு புதிய சபை அமையப்பெற்று பல மாதங்கள் கடந்துள்ள நிலையில், இன்றுவரை எவ்வித நியாயமும் கிடைக்கவில்லை என்பதுடன், இது தொடர்பில் பிரேரணைகளைக் கொண்டு வந்து எமக்கான தீர்வுகளைப் பெற்றுத்தர புதிய தவிசாளரோ சபை உறுப்பினர்களோ எந்த நடவடிக்கைகளையும் எடுத்ததாக நாம் அறியவில்லை.
தற்போது வழங்கப்படும் சம்பலத்தினைக் கொண்டு அதிகரித்து வரும் விலையேற்றம் மற்றும் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு போன்றவற்றை ஈடுகொடுத்து வாழ்க்கையை ஓட்டிச் செல்லவோ பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையிலேயே நாம் காணப்படுகின்றோம்.
அதே நேரம், பாரிய சம்பள முரண்பாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் காணப்படுவதும் பதிலீட்டு ஊழியர்கள் விடயத்தில் சபை பாரபட்சமாக நடக்கின்றதா? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றது. ஒரு சிலர் 15000 ரூபாவும், 18000, 20000, 33000 ரூபா வரையும் சம்பளம் வழங்கப்படும் அதே வேளை, ஒரு சில ஊழியர்கள் தொடர்ந்தும் அதே 7500 ரூபாவினைப் பெற்று வருவது ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவுள்ளது.
சபையின் பணிகளில் பெரும்பங்கினை பதிலீட்டு ஊழியர்களே மேற்கொண்டு வரும் நிலையில், அவர்களுக்கான சம்பளமாக 7500 ரூபாவினையே வழங்குவது அநீதிக்கு மேல் அநீதியாகும். அதே நேரம் அரசியல் செல்வாக்குள்ள ஊழியர்கள் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி தமது சம்பளப்பிரச்சினையை தீர்த்துக் கொண்டு அதியுச்ச சம்பளத்தினை பெற்றுக் கொள்ளும் நிலையும் இந்த சபையில் இல்லாமாலில்லை.
அரசியல் செல்வாக்குள்ளவர்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு என்ற அடிப்படையில் தாம் புறந்தள்ளப்பட்டு வரும் நிலை காணப்படுகின்றது. அத்தோடு, சபையின் அதிகாரத்திலுள்ளவர்களின் ஆதரவாளர்கள் சிலர் பதிலீட்டு ஊழியர்கள் மேல் சகல பணிகளையும் சுமத்தி விட்டு, வெறுமனே சம்பளம் பெறுனர்களாக இருப்பதையும் எவரும் கண்டு கொள்வதகாவும் இல்லை.
அதே நேரம் இன்று இடம்பெறும் சபை அமர்விலாவது எமது சம்பளப்பிரச்சினைக தொடர்பில் சபையின் தவிசாளரும் அனைத்து உறுப்பினர்களும் கரிசனை செலுத்தி தீர்வினைப் பெற்றுத்தருவார்களா?
வாக்களித்து புதிய சபையை உருவாக்க உழைத்து நம்பிக்கையோடு காத்திருக்கும் பதிலீட்டு ஊழியர்களுக்கு தவிசாளரும் உறுப்பினர்களும் நிர்வாகிகளும் கூறும் பதிலென்ன?
ஊழியர்களின் ஜீவனோபாயப் பிரச்சினையை மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் பார்ப்பாரா தவிசாளர்? எங்களுக்காகவும் சிந்திப்பார்களா உறுப்பினர்கள்?
இவ்வாறு தமது ஆதங்கங்களையும் பரிதாப நிலைமையினையும் கண் கலங்கக்கூறி கேள்வியெழுப்புகின்றர் ஓட்டமாவடி பிரதேச சபையில் கடமை புரியும் பதிலீட்டு ஊழியர்கள்.
தவிசாளரே , பிரதேச சபைஉறுப்பினர்களே இது தங்களின் மேலான கவனத்திற்கு…
Comments are Closed