Main Menu

அமைப்பாளர் இல்லாத அனாதையாக கல்குடா சமூகம் – பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.ஹாமித் மெளலவி

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வாக்காளர்களையும் முஸ்லிம் காங்கிரஸிற்கு அதிக செல்வாக்கையும் கொண்டுள்ள கல்குடாத்தொகுதிக்கு செயற்பாடுள்ள ஒரு அமைப்பாளர் இல்லாமை கவலை தருகின்றது, இது விடயம் தொடர்பில் கட்சியும் கட்சியின் தலைமையும் பொருத்தமான ஒருவரை நியமித்து கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுக்க முன்வர வேண்டுமென கடந்த 24.02.2020ம் திகதி இடம்பெற்ற கட்சியின் 29வது பேராளர் மாநாட்டில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.ஹாமித் மெளலவி கலந்து கொண்டு உரையாற்றுகையில் உருக்கமாக கேட்டுக் கொண்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,
மட்டக்களப்பில் முஸ்லிம் காங்கிரஸின் மூலமே எமக்கான பிரதிநித்துவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். கடந்த காலங்களிலும் கல்குடாவிலிருந்து கிடைக்கப்பெற்ற ஆதரவே எமது மாவட்ட பிரதிநிதியைத்தீர்மானித்தது. அதுவே முஸ்லிம் காங்கிரஸை தேசியத்தில் தனிக்கட்சியாகப் பரிணமிக்க வைத்தது.

இந்நிலையில், அமைப்பாளர் விடயம் தொடர்பில் கட்சித்தலைமையிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்தும், பராமுகமாக இருந்து வருவதுடன், எமக்கான தீர்வை வழங்குவதில் உதாசீனமாக நடந்து கொள்வதாகத் தோன்றுகிறது.

பாராளுமன்றத்தேர்தல் திகதி அறிவிப்புச்செய்யப்பட்டுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் கட்சி செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தேவை உள்ள நிலையில், கல்குடாவிலும் தேர்தல் பணிகளை முன்னெடுக்க திறம்பட செயற்படக்கூடிய அமைப்பாளர் ஒருவரின் அவசியம் உணரப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர், காத்தான்குடி ஆகிய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில், கணிசமான வாக்காளர்களையும் கட்சிக்கான பெரும்பான்மை ஆதரவையும் கொண்டுள்ள நிலையில், காத்தான்குடியில் செயற்பாடுள்ள மூன்று அமைப்பாளர்களும் ஏறாவூரில் ஐந்து அமைப்பாளர்களும் கட்சியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கல்குடாவில் நியமிக்கப்பட்ட அமைப்பாளர்களில் சகோதரர் றியாழ் சுயவிருப்பின் பேரில் உத்தியோகபூர்வமாக இராஜினாமாச் செய்துள்ள நிலையில், மற்றொரு அமைப்பாளரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இஸ்மாயீல் ஹாஜியார் கல்குடாவிலுள்ள கட்சி முக்கியஸ்தர்கள், போராளிகளை ஒன்றிணைத்துச் செயற்படக்கூடிய ஆளுமை,, செயற்றிறனற்ற அமைப்பாளாராகக் காணப்படுகின்றார்.

பிரதேசத்திலுள்ள மாற்றுக்கட்சி அரசியல்வாதியின் செல்வாக்கு சரிவை எதிர்நோக்கியுள்ள நிலையில், கல்குடாவிலிருந்து மாவட்டத்துக்கான பிரதிநிதியை இலகுவாகப் பற்றுக்கொள்ள முடியுமென்ற சாதகமான சமிக்கை தெளிவாகவுள்ள போதும், கட்சிக்கான அமைப்பாளர் விடயத்தில் கட்சியின் தலைமை பாராமுகமாக இருக்குமேயானால் படுதோல்வியையும் பின்னடைவையும் கட்சி எதிர்கொள்ளலாம்.

இவ்வாறான சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு செயற்றிறனுள்ள தகுதிவாய்ந்த, சகலரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய ஒருவரை புதிய அமைப்பாளராக நியமித்து எதிர்வருகின்ற நாடாளுமன்றத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

ஆகவே, கட்சியின் செயற்பாடுகளை ஆராயவும் தீர்வுகளை எட்டவும் நடாத்தப்படும் இப்பேராளர் மாநாட்டில், குறித்த விடயத்திற்கு தீர்வினை வழங்க தலைமை முன்வரவேண்டுமென கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.ஹாமித் மெளலவி கேட்டுக் கொண்டார்.



Comments are Closed