Main Menu

56வது அகவையில் காற்பதிக்கும் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் : ஓர் பார்வை

இந்த செய்தியைப் பகிர்க >>>

(கட்டாரிலிருந்து ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்)…
1963ம் ஆண்டு பெப்ரவரி இரண்டாம் திகதி முகம்மது ஆலிம் என்பவருக்கு மகனாய்ப் பிறந்து தொடர்ந்தேர்ச்சியாக 27 வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியலில் சரித்திரம் படைக்கும் அரசியல்வாதியாக பரிணமித்து தனது அரசியல் சாணக்கியத்தினால் அரசியலில் வீறு நடையுடன் அரசியலில் முதிர்ச்சி பெற்று அதில் பல விடயங்களை நிலைமைக்கேற்றவாறு சாதுரியமான முறையில் குறித்த நேரத்தில் முடிவுகளை எடுக்கக்கூடிய காத்தான்குடி மண்ணின் அரசியல் நாயகனாகவே நான் தற்போதைய கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வைப் பார்க்கின்றேன்.

கலைப்பிரிவில் கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பினை முடித்த ஹிஸ்புல்லாஹ், அதற்குப்பிற்பாடு சென்னைப் பல்கலைக்கழகத்தில் தனது எம்.ஏ. பட்டத்தினை நிறைவு செய்து, இன்று கலாநிதி கல்வியின் ஏறு படியினையும் அடைந்துள்ளார்.

இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் முகவரி கொடுத்த சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட இடமாகக் கருதப்படுகின்ற காத்தான்குடி நகரில் பெரும் தலைவர் அஸ்ரப்பினால் இனங்காணப்பட்ட இளைஞனாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்குள் உள்வாங்கப்பட்டு, 1987ம் ஆண்டு காத்தான்குடி பிரதேச சபை உறுப்பினராகவும், அதற்குப்பிற்பாடு இணைந்த வடகிழக்கு மாகாண சபையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டு, மாகாண சபை உறுப்பினராக அரசியலில் தனது அடுத்த கட்ட நகர்வினை நோக்கி காலெடுத்து வைக்கின்றார்.

அக்கால கட்டத்திலே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் எதிர்காலத்தலைவன் என மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், அம்பாறை மாவட்டத்து முஸ்லிம்களும் ஹிஸ்புல்லாஹ்வை துடிப்பான அரசியல் தலைவன் என பேசிய வரலாற்றினை எவராலும் இலகுவில் மறக்க முடியாது.

இந்நிலையிலே 1989ம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அதிகாரத்தின் கீழிருந்த பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் ஒரு பாராளுமன்றத்தேர்தலை எமது நாடு எதிர்நோக்கி நிற்கின்றது. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அஸ்ரப் அவர்களன் நேரடி வழிகாட்டலோடு பரவலான முறையில் பல வேட்டாளர்கள் வடகிழக்கு மாகாணத்தில் களத்தில் நிறுத்தப்படுகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்திலே காத்தான்குடி, ஏறாவூர், கல்குடா என்ற மூன்று பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி முக்கிய மூன்று வேட்பாளர்களை பெருந்தலைவர் அஸ்ரப் களமிறக்குகின்றார்.

அத்தோடு, மூவரும் தமக்கென விருப்பு வாக்குகளைக்கேட்பதினை புறந்தள்ளி விட்டு கட்சிக்கு வாக்குகளைப் பெற்றுக்கொள்வதில் தான் கவனஞ்செலுத்த வேண்டுமென்ற நிபந்தனையோடு, ஆசனம் கைப்பற்றப்பட்டதற்குப்பிற்பாடு சுழற்சி முறையில் இரண்டு வருடங்களாக மூன்று ஊர்களுக்கும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் பகிர்ந்தளிக்கப்படுமென்ற எழுத்து மூல ஒப்பந்தமற்ற வாக்குறுதியும் வேட்பாளர்களிடமிருந்து பெருந்தலைவரினால் பெற்றுக்கொள்ளப்படுகின்றது. இறுதியில், 15832 அதிகூடிய விருப்பு வாக்குகளைப்பெற்று ஹிஸ்புல்லாஹ் மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதலாவது முறையாக பாராளுமன்றக் கதிரையில் உட்காருகின்றார்.

இரண்டு வருடங்கள் உருண்டோடுகின்றது. அடுத்த கட்டமாக ஏறாவூருக்கு அல்லது கல்குடாவிற்கு பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தினை ஹிஸ்புல்லா விட்டுகொடுப்புச் செய்ய வேண்டுமென்ற பெருந்தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க ஹிஸ்புல்லாஹ்விடம் தெளிவுபடுத்திய பொழுது, ஹிஸ்புல்லாஹ் அதனை மறுதலிக்கின்றார். அன்று ஹிஸ்புல்லாஹ் மறுதலித்தமையானதை இன்றும் அரசியல் மேடைகளில் ஹிஸ்புல்லாஹ்வினை எதிர்த்து வேறு கட்சிகளில் போட்டியிடுகின்றவர்கள் அரசியல் ஆயுதமாகத் தூக்கிப்பிடிக்கின்றனர். அதில் உண்மையும் இல்லாமலில்லை.

மறு பக்கத்திலே அன்று தான் மறுதலித்தமையானது, அன்றைய யுத்த கால சூழ்நிலையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய பிரச்சனைகளும், காத்தான்குடி, ஏறாவூர், கல்குடா பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளினால் முஸ்லிம்கள் பள்ளிவாயல்களிலும், வீடுகளில் தூங்குகின்ற நிலைமைகளில் துடிதுடிக்க கொலை செய்யப்பட்ட காரணத்தினால் தான் மூன்று ஊர்களையும் சேர்ந்த முஸ்லிம் மக்களைக் காப்பாற்றுவதற்கு அரசியல் ரீதியாக துடிப்பான இளைஞன் ஒருவன் தேவையென்பதனைக் கருத்திற்கொண்டே நான் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தினை இராஜினாமாச் செய்வதிலிருந்தும் தவிர்ந்து கொண்டேன் என ஹிஸ்புல்லாஹ் இராஜனாமாச் செய்யாமைக்கான தனது பக்க நியாயத்தினைக் கூறுகின்றார்.

அதற்கு நியாயம் கற்பிப்பது போலவே, 1990ம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாயலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த நேரம் விடுதலைப் புலிகளினால் நூற்றுக்கணக்கானோர் கொலை செய்யப்பட்ட பொழுது, அக்காலகட்ட பயங்கரவாதச் சூழ்நிலைமையினைக் கருத்திற்கொள்லாமல் தனியொரு அரசியல்வாதியாக களத்தில் நின்று செயற்பட்டமையினை மறுக்க முடியாது.

அது மட்டுமல்லாமல், கல்குடா, ஏறாவூர் போன்ற பிரதேசங்களிலுள்ள முஸ்லிம் மக்களை விடுதலைப்புலிகளிடமிருந்து 1990ம் ஆண்டு காலப்பகுதில் பாதுகாக்குமுகமாக ஊர்காவற்படைகளை அமைத்தும் வீதிக்கு வீதி காவலரங்குகள், பங்கர்கள் அமைத்து துடிப்பாகச் செயற்பட்டமையினை எவராலும் மறுத்துரைக்கவும் முடியாது. இவற்றுக்கெல்லாம் ஒரு படி மேலாக அன்று பெருந்தலைவருக்கு கொடுத்த வாக்குறுதியினை ஹிஸ்புல்லாஹ் மீறியிருந்தார் என்றால், பெருந்தலைவரினால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை விட்டும் ஹிஸ்புல்லாஹ் தூக்கி வீசியெறியப்பட்டிருப்பார்.

ஆனால், பெருந்தலைவர் அஸ்ரப்பின் தூரநோக்குப் பார்வையாலேயே ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் பார்க்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், ஹிஸ்புல்லாஹ் பெருந்தலைவர் அஸ்ரப் அவர்கள் வபாத்தாகும் வரைக்கும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசிலேயே ஒட்டிக்கொண்டிருந்தார்.

இவ்வாறு ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் முன்னெடுப்புக்கள் சென்று கொண்டிருக்க, கல்குடாவினை பிரதிநிதித்துவப்படுத்தி 1989ம் ஆண்டு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட்ட மர்ஹூம் மொஹைதீன் அப்துர் காதார் ஹிஸ்புலாஹ்விற்கெதிராக பெருந்தலைவர் ஒழுகாற்று நடவடிக்கை எடுக்கத்தவறிவிட்டார் என்பதனைக் காரணங்காட்டி 1994ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிட அதே தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே காத்தான்குடி நகரினைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட ஹிஸ்புல்லாஹ் மீண்டும் 12583 விருப்பு வாக்குகளைப் பெற்று இரண்டாவது முறையாக பாராளுமன்றக் கதிரையில் உட்காருகின்றார்.

இக்கால கட்டமானது இலங்கையில் பாரிய யுத்த சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட காலமாக இருந்தாலும், தன்னிடம் காணப்பட்ட அரசியல் சாணக்கியத்தினால் காத்தான்குடி நகருக்கு பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்கின்றார். அதுமட்டுமல்லாமல், கல்குடாவிலும் அபிவிருத்திகள், அரச வேலைவாய்ப்புக்கள் என மாவட்டம் தழுவிய பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்கின்றார். இக்காலகட்டதில் அவர் தபால் தொலைத்தொடர்புகள் பிரதியமைச்சராகவும் பதவி வகிக்கின்றார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைமையோடு முரண்பட்ட நிலையில், 94ம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிட்ட மர்ஹும் மொஹைதீன் அப்துர் காதர் மீண்டும் சிறீலங்கா சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்குள் உள்வாங்கப்பட்டு, 2000ம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் கல்குடாவில் வேலி கட்டிய அரசியலோடு போட்டியிட ஹிஸ்புல்லாஹ் தனது பாராளுமன்றக் கதிரையினை இழக்கின்றார்.

இருந்தாலும், ஹிஸ்புல்லாஹ் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபையின் தலைவராக நியமிக்கப்படுகின்றார். ஆனால், பாராளுமன்றம் ஒரு வருடம் கூட நிலைத்திருக்கவில்லை. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது இஸ்தாபகத் தலைமையான பெரும் தலைவர் அஸ்ரப் அவர்களை இழந்து தவிக்கின்ற நிலையில், கட்சியின் தலைமைப் பொறுப்பானது தற்போதைய அமைச்சர் அப்துர் றவூப் கிபத்துல் ஹக்கிமிடம் கைமாறுகின்றது.

இந்நிலையில், கட்சியினை விட்டு வெளியேறிய ஹிஸ்புல்லாஹ் தொடர்ந்து 2001ம் ஆண்டைய பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு சார்பாக மட்டக்களப்பில் போட்டியிட்டு 19785 விருப்பு வாக்குகளோடு மூன்றாவது முறையாகவும் பாராளுமன்றக் கதிரையில் உட்காருகின்றார்.

இக்காலப்பகுதியிலும் காத்தான்குடி நகரம் ஹிஸ்புல்லாவின் பாரிய அபிவிருத்திக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமையானது, காத்தான்குடி மக்களின் உள்ளங்களில் இருக்குமென்பதில் மாற்றுக்கருதிருக்காது. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கே தொடர்ந்தேர்சியாக 12 வருடங்கள் வாக்களித்த காத்தான்குடி மக்கள் ஹிஸ்புல்லாஹ் எனும் அரசியல் தலைமையின் மேல் வைத்திருந்த நம்பிக்கை, மரியாதையின் பிரதிபலிப்பாக அவர் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினை விட்டு வெளியேறி பெரும்பான்மைக் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிட்ட போதும், காத்தான்குடி மக்கள் ஹிஸ்புல்லாஹ்வைக் கெளரவப்படுத்தி மூன்றாவது முறையாகவும் பாராளுமன்றக் கதிரையில் உட்கார வைத்தனர். இது ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு திருப்பு முனையாகவும் பாரிய வெற்றியாகவுமே பார்க்கப்படுகின்றது.

இந்நிலையிலே சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியிலே 2004ம் ஆண்டு பல அரசியல் தளம்பல்களால் பாராளுமன்றம் கலைக்கப்பட கல்குடா பிரதேசத்தில் புதுமுக வேட்பாளராக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் தற்போதைய இராஜாங்க அமைச்சர் அமீர் அலியும், ஏறாவூரைப் பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத்தும் போட்டியிட மீண்டும் ஹிஸ்புல்லாஹ் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிடுகின்றார்.

மும்முனைப் போட்டியாக அமைந்த அத்தேர்தலில் மீண்டும் கலகுடாவில் வேலி கட்டிய அரசியலோடு களமிறங்கிய அமீர் அலி முதலாவது முறையாக பாராளுமன்றக் கதிரையில் உட்கார பசீர் சேகுதாவூத் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசிலே போட்டியிட்டாலும், சொற்ப வாக்குவித்தியாசத்தினால் தோல்வியினை தழுவுகின்றார். மறுபக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் விசுவாசத்தினை வென்ற வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் போட்டியிட்ட காத்தன்குடியின் அரசியல் வரலாற்று நாயகன் ஹிஸ்புல்லாஹ் தான் என்றுமில்லாதவாறு 23813 விருப்பு வாக்குகளை பெற்றும், தூரதிஸ்டவசமாக தோல்வினைத்தழுவும் நிலையே ஏற்படுகின்றது. ஆனாலும், ஒட்டு மொத்த காத்தான்குடி மக்களும் இரவோடிரவாக முடிவெடுத்து ஹிஸ்புல்லாஹ்விற்கே வாக்களித்திருந்தமை காத்தான்குடி மக்களின் செல்லப்பிள்ள ஹிஸ்புல்லாஹ் என்பதனை அத்தேர்தல் எடுத்துக்காட்டியது.

ஹிஸ்புல்லாஹ்விற்கு இத்தோல்வியானது சுமார் ஆறு வருடங்கள் பாராளுமன்றக் கதிரையில் உட்காருகின்ற வாய்ப்பினை கொடுக்காமல் அரசியல் ரீதியாக பல சோதனைகளைக் கொடுத்தாலும், இவ்வாறு வருட காலப்பகுதியில் தான் ஹிஸ்புல்லாஹ்வினால் தான் எதிர்காலத்தில் எவ்வாறு தனது அரசியல் இருப்பினைத் தக்க வைத்துகொள்ள வேண்டுமென்பது சம்பந்தமான பல அரசியல் யுக்திகளில் தெளிவு கண்டிருந்தார்..

மீண்டும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசோடு இணைந்து அதன் தலைமை அமைச்சர் றவூப் ஹக்கீமின் கையினை பலப்படுத்திய ஹிஸ்புல்லாஹ் 2006ம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் காத்தான்குடி நகர சபையினை முஸ்லிம் காங்கிரசின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து காத்தன்குடி மக்கள் எப்பொழுதும் தன்னுடனே இருக்கின்றனர் என்பதனை முஸ்லிம் காங்கிரசிற்கும் தேசியத்திற்கும் எடுத்துக்காட்டினார். இது ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் ஆளுமையினையும் காத்தன்குடி மக்கள் மத்தியில் ஹிஸ்புல்லாஹ்விற்கு இருந்த நற்பெயரினையும் எடுத்துகாட்டுவதாக அமைந்தது.

இவ்வாறு முஸ்லிம் காங்கிரசில் இருக்கையில், 2008ம் ஆண்டு முதலாவது கிழக்கு மாகாண சபைத்தேர்தலை கிழக்கு மாகாணம் எதிர்நோக்கி நிற்கின்றது. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தனது வேட்பாளர்களை இறக்கப்போகின்றது என மக்கள் உள்ளங்களில் பல எதிர்பார்ப்புக்கள் இருக்கதக்க, ஹிஸ்புல்லாஹ் திடீரென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து மகிந்த ராஜபக்ஸ் அரசாங்கத்திற்கு தனது ஆதரவினைத் தெரிவிக்கின்றார்.

இது கிழக்கு மாகாண சபைத்தேர்தலிலே பாரிய அரசியல் திருப்பு முனையாகவும் அமைந்திருந்தது. அது மட்டுமல்லாமல், எதிரும் புதிருமாய் மாவட்டத்தில் அரசியல் செய்து கொண்டிருந்த ஹிஸ்புல்லாவும் தற்போதைய அமைச்சர் அமீர் அலியும் ஒன்றிணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலமாக கல்குடா, ஏறாவூர், காத்தான்குடிப் பிரதேசங்களை மையப்படுத்தி மூன்று வேட்பாளர்களை களமிறக்குகின்றனர்.

முதலமைச்சினை நோக்கிய பயணம் என்ற தொனிப்பொருளில் ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடியில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக களமிறங்க மறுமுனையிலே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பாக அதன் தலைமை, செயலாளர் நாயகம், தவிசாளர் போன்றவர்கள் தங்களது பாராளுமன்ற பதவியினை இராஜானாமாச் செய்து விட்டு, கிழக்கு மாகாண சபையினை ஐக்கிய தேசியக்கட்சி கைப்பற்ற வேண்டுமென்ற முனைப்போடு தங்களது அரசியல் போராட்டத்திலே குதிக்கின்றனர்.

அது மட்டுமல்லாமல், முக்கியமான தனியார் தொலைக்காட்சியொன்று பகிரங்கமாகவே ஹிஸ்புல்லாஹ்விற்கெதிரான தேர்தல் விளம்பரங்களை மேற்கொள்கின்றது. எதற்கும் சளைக்காதவராக ஹிஸ்புல்லாஹ் தனது அரசியல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார். ஏறாவூர், காத்தான்குடி, கல்குடா என்ற வேறுபாட்டிற்கப்பால் மூன்று ஆசனங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி கொள்ள வேண்டுமென்ற அடிப்படை விடயத்தினை வைத்து தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இறுதியில் அந்தக்கனவும் நனவாகின்றது.

முதலமைச்சினை நோக்கிய பயணம் என்ற கருப்பொருளில் தேர்தல் பிரசாரத்தினை முடுக்கி விட்டிருந்த ஹிஸ்புல்லாஹ் இறுதில் கிழக்கு மாகாண சபையினை ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு கைப்பற்றிய நிலையிலும் கூட, கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் கூட்டிணைந்து தேர்தலில் களமிறங்கிய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைச் சேர்ந்த சிவனேசதுரை சந்திரகாந்தன் நியமிக்கப்பட்டார்.

இது அன்றைய அரசாங்கத்தின் கட்டாயத்தேவையாகவும் காணப்பட்டது. இதனால் முஸ்லிம் சமூகத்தினை காட்டிக்கொடுத்து விட்டார் என பலவாறு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களாலும் கட்சியின் உறுப்பினர்களாலும் தலைமையினாலும் விமர்சிக்கப்பட்டு வந்த ஹிஸ்புல்லாஹ்விற்கு கிழக்கு மகாணா சபையில் மிக முக்கிய பொறுப்புடனான சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய, சமூக நலனோம்பல், சிறுவர் நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு சேவைகள், மகளிர் விவகார, இளைஞர் விவகார, விளையாட்டு, தகவல் தொழில்நுட்பக்கல்வி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல் மற்றும் விநியோகம் என்ற அமைச்சு வழங்கப்பட்டது. இது ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் சாணக்கியத்திற்கும் அரசியல் முதிர்சிக்கும் கிடைத்த வெற்றியாகவே நான் பார்க்கின்றேன்.

அது மட்டுமல்லாமல், தனக்கு மாகாண சபையில் கிடைத்த அமைச்சினை வைத்துக்கொண்டு மாவட்டத்திலே பல அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்ட ஹிஸ்புல்லாஹ் மகிந்த ராஜபக்ஸ்ச அரசாங்கத்துடனும் அந்த அரசாங்கத்தில் பொருளாதார அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஸ்வுடனும் நெருக்கிய நட்பினை உருவாக்கிக்கொண்டார். இதனால் காத்தான்குடி நகரம் மேலும் பல அபிவிருத்திகளைக்கண்டது.

இந்நிலையிலே இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஸ்ச தெரிவு செய்யப்பட, மீண்டும் 2010ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை நாடு எதிர்நோக்குகின்றது. ஹிஸ்புல்லாஹ் மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரசில் போட்டியிடுகின்றார்.

எறாவூரில் அலிசாஹிர் மெளலானா, கல்குடாவில் அமீர் அலி, காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக்கட்சியுடன் கூட்டிணைந்து தங்களது வேட்பாளர்களை மட்டக்களப்பு மாவட்டத்திலே களமிறக்குகின்றது. வழமை போல ஒட்டுமொத்த காத்தான்குடி மக்களும் ஹிஸ்புல்லாஹ்வினை மதித்து வாக்களிக்க 22256 விருப்பு வாக்குகளைப் பெற்று நான்காவது முறையாகவும் பாராளுமன்றக் கதிரையில் உட்காருகின்றார். இது ஹிஸ்புல்லாவின் அரசியல் வாழ்க்கையில் அவருக்கு கிடைத்த இன்னுமொரு பாரிய வெற்றியாக நான் கருதுகின்றேன். அது மட்டுமல்லாமல், காத்தான்குடி மக்கள் எப்பொழுதும் அவருடன் இருக்கின்றார்கள் என்பதற்கு கிடைத்த பாரிய சான்றாகவும் இத்தேர்தல் ஹிஸ்புல்லாஹ்விற்கு எடுத்துக்காட்டியது.

2010 ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிற்பாடு ஹிஸ்புல்லாஹ் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சராக நியமிக்கப்படுகின்றார். அதனைத்தொடர்ந்து தொடர்ந்து ஜனவரி 2013 இல் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டார். இக்காலப்பகுதியிலேயே காத்தான்குடி நகரத்தினை தேசியத்திலே அதிகம் பேசப்படும் நகரமாக மாற்றியமைக்கின்றார். மத்திய கிழக்கு செல்வந்த நாடுகளிலுள்ள நகரங்களைப் போன்று காத்தான்குடி நகரம் ஹிஸ்புல்லாஹ்வினால் அபிவிருத்தியடைகின்றது.

அத்தோடு, அனைத்து சமூகத்தினராலும் காத்தான்குடி நகரமானது குட்டி சவூதி அரேபியா என்று வர்ணிக்கப்படுமளவிற்கு ஹிஸ்புல்லாஹ்வின் அபிவிருத்திகளும் அரசியல் முன்னெடுப்புகளும் பின்னூட்டியாக அமையப்பெறுகின்றது. அதனையும் தாண்டி தனது வாக்கு வங்குயினை கல்குடா, ஏறாவூர் என பரந்து பட்ட நிலையில் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஹிஸ்புல்லாஹ் எறாவூர், கல்குடா, மட்டக்களப்பு பிரதேசங்களிலும் தனது அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளார் என்பதை மாவட்டத்தில் வாழுகின்ற எவராலும் மறுதலிக்க முடியாது.

இந்நிலையிலே 2012ம் ஆண்டு கிழக்கு மாகாண சபையானது, தனது இரண்டாவது ஆட்சிக்காலத்திற்கான தேர்தலினை எதிர்நோக்குகின்றது. ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் வாழ்க்கையில் அவருடைய சொந்த ஊரான காத்தான்குடியில் எதிர்க்கட்சிகளின் அரசியல் எதிர்ப்புக்கள் காணப்பட்டாலும், இரண்டாவது மாகாண சபைத்தேர்தலில் நலாட்சிக்கான தேசிய முன்னணி எனும் கட்சியினால் பாரிய சவாலை ஹிஸ்புல்லாஹ் எதிர்நோக்க நேரிடுகின்றது. அதன் தலைவர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மானை எதிர்த்து இன்னுமொரு பொறியியலாளரையே களமிறக்க வேண்டுமென்பதற்காக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளருமான ஷிப்லி பாரூக்கிற்கு அரசியல் முகவரி கொடுக்கப்பட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வைக்கின்றார்.

மறுபக்கத்திலே முதலமைச்சினை நோக்கிய பயணம் என்ற வாசகங்களோடு இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கல்குடாவை பிரதிநிதித்துவப்படுத்தியும் ஏறாவூரினை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் மாகாண சுகாதார அமைச்சர் சுபைரும் கூட்டிணைந்து போட்டியிடுகின்றனர். மீண்டும் களமிறக்கப்பட்ட மூன்று வேட்பாளர்களும் வெற்றியடைகின்றனர். இதுவும் ஹிஸ்புல்லாஹ்வின் சாதுரியமான அரசியல் நடவடிக்கைக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும்.

இதற்குப்பிறகு தான் தேசியத்திலும் மாவட்டத்திலும் ஹிஸ்புல்லஹ்  தனது அரசியல் வாழ்க்கையினை வைத்து பேசப்படும் முக்கிய நபராக பரிணாமமெடுக்கின்றார். அதாவது, கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலையொட்டிய காலப்பகுதியில் பேருவளை சம்பவம், ஹலால் பிரச்சனை, தம்புள்ள பள்ளிவாயல் உடைப்பு என பல பிரச்சனைகளுக்கு இலங்கை முஸ்லிம்கள் முகங்கொடுத்த நிலையில், ஆட்சி மாற்றமொன்றின் தேவைப்பாட்டின் காரணமாக ஒட்டு மொத்த முஸ்லிம்களும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தயாராகின்றனர்.

இந்நிலையிலேயே தான் மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியின் கீழ் அமைச்சர் பதவிகள் எனப்பல சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருந்த அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்தின் மத்தியில் தங்களது அரசியலிருப்பினை தக்க வைத்துக்கொள்வதற்காக மைத்திரிபால சிறீசேனவின் கூட்டணியுடன் கைகோர்க்கின்றனர்.

ஆனால், ஹிஸ்புல்லாஹ் அரசியல் எனும் வட்டத்திற்குள் நன்றியுடைய ஓர் முஸ்லிமாக மஹிந்தவுடனே இருக்கின்றார். இதனால் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலும் அவரின் சொந்த ஊரான காத்தான்குடியிலும் பாரிய அரசியல் எதிர்ப்பினையும் சம்பாதித்துக் கொள்கின்றார்.

ஹிஸ்புல்லாஹ்வின் அந்த முடிவானது, முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பிழையாகக் கருதப்பட்டாலும் தேசிய அரசியலிலே ஹிஸ்புல்லாஹ் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலிருந்த நன்றி மறவா அரசியல்வாதி என்ற பெயரினை ஹிஸ்புல்லாஹ்விற்கு கிடைப்பதற்கு வழியமைத்தது. அது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் சமூகமும் மைத்திரிபால சிறீசேனவிற்கு ஆதரவளித்த நிலையில், தப்பித்தவறி மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால், இலங்கை முஸ்லிம் சமூகத்தினை மஹிந்த அரசாங்கத்திடமிருந்து காப்பாற்றுவதற்கு ஹிஸ்புல்லாஹ்வினால் மட்டுமே முடிந்திருக்கும் என்பது ஓர் எதிர்வு கூறப்படக்கூடிய உண்மையாகவும் இருந்தது.

ஜனாதிபதித்தேர்தலும் முடிவடைந்து மைத்திரிபால சிறீசேனவும் வெற்றி பெற்றிருந்தார். அத்தோடு, ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் பயணமும் நிறைவு பெற்றுவிட்டது என ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் எதிரிகள் கங்கணம் கட்டிகொண்டு ஜனாபதிபதி தேர்தலுக்கு பிற்பாடு வந்த பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்குகின்றனர்.

எந்தத்தேர்தலிலும் இல்லாதவாறு மாவட்டத்திலும் தனது சொந்த ஊரான காத்தான்குடியிலும் ஹிஸ்புல்லாஹ் கடந்த 2015ம் ஆண்டைய பாராளுமன்றத் தேர்தலில் பல சவால்களை சந்திக்கின்றார். தான் அறிமுகப்படுத்திய ஷிப்லி பாரூக் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து சொந்த ஊரிலே போட்டியிட, அதற்கும் ஒரு படி மேலாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் அப்துர் ரஹ்மான் முஸ்லிம் காங்கிரசுடன் கூட்டிணைந்து காத்தான்குடியிலே வேட்பாளராக களமிறங்குகின்றார்.

கல்குடாவிலே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யானைச்சின்னத்திலே அமீர் அலியினை களமிறக்க, முஸ்லிம் காங்கிரஸ் புதுமுக வேட்பாளர் றியாழை கல்குடாவில் களமிறக்கி ஏறாவூரிலே முக்கிய புள்ளியாக இருக்கின்ற அலிசாஹிர் மெளலானவைனை களமிறக்குகின்றது. இவைகள் அனைத்தும் ஹிஸ்புல்லாஹ் தனது அரசியல் வாழ்க்கையில் என்றும் கண்டிராத பாரிய சாவால்கள் என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது.

அத்தனை சவால்களையும் தன்னால் சமாளிக்க முடியும் என்ற தைரியத்துடனும், எப்பொழுதும் காத்தான்குடி சமூகம் தன்னுடனையே இருந்து வந்திருக்கின்றது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் சவாலினை சமாளித்து ஐந்தாவது முறையாகவும் தன்னால் பாராளுமன்றக் கதிரையில் உட்கார முடியும் என்ற நம்பிக்கையுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமையின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளராக பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குகின்றார் ஹிஸ்புல்லாஹ்.

இறுதியில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஏறாவூரில் போட்டியிட்ட அலிசாஹிர் மெளலான வெற்றி பெற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டிணைந்து போட்டியிட்ட அமீர் அலி நூற்றுக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே ஹிஸ்புல்லாஹ்வை வெற்றிகொண்டு பாராளுமன்றம் செல்கின்றார்.

ஹிஸ்புல்லாஹ் தோற்கடிக்கபட்டு விட்டார் என ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் எதிரிகள் வெற்றிவாகை சூடிக்கொண்டிருந்த நேரத்தில், அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்ற எதார்த்தத்தின் வடிவமாய் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவினால் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றக் கதிரையில் உட்காருகின்ற வாய்ப்புடன் சில நாட்களுக்கு பிற்பாடு இறைவனின் நாட்டப்படியினால் இராஜாங்க அமைச்சுப் பதவியுடன் குறுகிய கால அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு, அதனைத் தொடர்ந்து  மேலும் அவரை கெளரவப்படுத்துமுகமாக கடந்த மாதம் அதிகாரம் பொருந்திய கிழக்கு மாகாண ஆளுனர் பதவி தற்பொழுது ஹிஸ்புல்லாஹ்வினை தேடிவந்தமையானது ஹிஸ்புல்லாவிற்கு தேசிய அரசியலிலே இருக்கின்ற சிறந்த அரசியல்வாதி என்ற பெயருக்கு கிடைத்த சன்மானகவே நான் பார்க்கின்றேன்.

1989ம் ஆண்டு முதன் முதாலக ஓர் துடிப்பான இளைஞனாக பாராளுமன்றக் கதிரையில் உட்கார்ந்த ஹிஸ்புல்லாஹ் முஸ்லிம் சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று தசாப்த காலமாக சிரேஸ்ட உறுப்பினராக பாராளுமன்றத்தில் இருந்து வருகின்றார். சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இஸ்தாபக உறுப்பினர்களின் ஒருவரான ஹிஸ்புல்லாஹ் தற்போதைய முஸ்லிம் காங்கிரசின் தலைமையான அமைச்சர் ஹக்கீமுக்கு வயதில் குறைந்தவராக இருந்தாலும் முஸ்லிம் காங்கிரசின் இஸ்தாபக உறுப்பினர் என்ற வகையிலும் ஹக்கீமிற்கு முதல் தான் பாராளுமன்ற கதிரையில் உட்கார்ந்தவன் என்ற வகையிலும் முஸ்லிம் காங்கிரசினை வழி நடாத்திச் செல்லக்கூடிய எமதூர் அரசியல் தலைவன் என்ற வகையில் முஸ்லிம் காங்கிரசினை உருவாக்கிய மண்ணான காத்தான்குடி மண் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய விடயமாகும் என்பதனை எந்த போராளியாலும் மறுத்துறைக்க முடியாத உண்மையாகும்.

இவற்றுக்கெல்லாம் ஒரு படி மேலே சென்றுள்ள ஹிஸ்புல்லாஹ் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத்தேர்தல் தொகுதியில் கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் நிருவாக எல்லைகளுக்கு உட்பட்ட ரிதிதென்ன கிராம சேவகர் பிரிவில் ஜயந்தியாய கிராமத்தில் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச பல்கலைக்கழகமானது (மட்டக்களப்பு பல்கலைக்கழகம்) எதிர்கால வரலாற்றில் சரித்திரம் படைக்கப்போகும் விடயம் என்பதில் எவரிடமும் மாற்றுக்கருத்திருக்க வாய்ப்பிலை.

ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வின் தனிப்பட்ட முயற்சியினால் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் குறித்த இஸ்லாமிய சர்வதேச பல்கலைக்கழகமானது, இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளை பேசும் சகல மதத்தினையும் சார்ந்த மாணவர்கள் அனைவரும் சர்வதேச நாடுகளில் இலகுவாக தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தாங்கள் விரும்பிய பட்டப்படிப்புக்களை சர்வதேச தரத்திற்கு அமைவாக நிறைவு செய்து கொள்ள முடியும் என்பது இங்கு முக்கியமான விடயமாகும்.

ஆகையால், ஹிஸ்புல்லாஹ்வினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் குறித்த பல்கலைக் கழகமானது இந்த நாட்டுக்கும் சமூகத்திற்கும் பாரிய வரப்பிரசாரமாக இருப்பதோடு, அவருடைய அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதொரு விடயமாக படித்த தூரநோக்கு சிந்தனைகள் கொண்ட புத்திஜீவிகளினால் பார்க்கப்படுகின்றது.

அது மட்டுமல்லாமல், இந்த நாட்டினுடைய முஸ்லிம்களின் வரலாற்றில் பேருவளை நளீம் ஹாஜியார் ஜாமியா நளீமியா எனும் பல்கலைக் கழகத்தினை நிறுவி இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில்  நளீமீ பட்டதாரிகளை உருவாக்கியது மட்டுமல்லாமல், சட்டதரணிகள், நீதிபதிகள், அரச உயர் அதிகாரிகள் என சர்வதேச போற்றுமளவிற்கு தனது பங்களிப்பினை இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்திற்காய் வழங்கியிருந்தார்கள்.

அதே போன்று, பெரும் தலைவர் அஸ்ரஃப் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினை கிழக்கு மாகணத்திலே நிறுவி அரசியல் அநாதைகளாக கல்வித்துறையில் மடமைகளாக்கப்பட்டிருந்த இந்த நாட்டு சிறுபான்மை முஸ்லிம்களுக்கு ஜனநாயக அரசியலின் ஊடாக உரிமைகளை எவ்வாறு வென்றெடுப்பது என்பதனை செயல் வடிவில் காட்டிச்சென்றிருந்தார்.

அதே பாணியில் பெரும் தலைவரின் அரசியல் பாசறையில் வளர்க்கப்பட்ட ஹிஸ்புல்லாஹ் இன்று மட்டக்களப்பு கல்குடாவில் நிர்மாணித்து வரும் சர்வதேச பல்கலைக்கழகமானது ஹிஸ்புல்லாவின் மரணத்திற்குப் பின்னால் இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த சமூகமும் ஹிஸ்புல்லாஹ்வை வாழ்த்தி அவருடைய பெயர் நாமம் உச்சரிக்கும் என்பது அழிக்க முடியாத ஒரு வரலாறாக எழுதப்படும் என்பதில் எவரிடமும் எந்த மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை என்பது என்னுடைய ஆணித்தரமான கருத்தாகும்.

ஆகவே, ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் சாணக்கியத்தினை வைத்து இலங்கை முஸ்லிம்களும் குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்களும் இன்னும் பல அபிவிருத்திகளை எதிர்பார்த்து நிற்கின்றனர்.

அத்தோடு, அரசியலில் நீண்ட கால நன்பனுமில்லை. எதிரியுமில்லை என்பதற்கு ஹிஸ்புல்லாஹ் சிறந்த உதாரணமாகும்.

அதனாலேயேதான் தேர்தல் காலத்தில் அரசியல் ரீதியாக பல முரண்பாடுகளைச் சந்திக்கின்ற ஹிஸ்புல்லாஹ்வினால் தேர்தலுக்கு பிற்பாடு சகல  அரசியல்வாதிகளிடமும் நட்பினை ஏற்படுத்தி தனதூரினையும் மாவட்டத்தினையும் அபிவிருத்தியின்பால் கொண்டு செல்ல முடிகின்றது.

ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் வாழ்க்கை வரலாறும் அவருடைய அரசியல் அபிவிருத்திகளும் அவர் உயிருடன் இருக்கும்பொழுதே காலத்தினால் அழிக்க முடியாத காத்தான்குடியின் அரசியல் சரித்திரம் என எழுதப்பட்டு விட்டது.

இருந்தும் காத்தான்குடி மண்ணும் மட்டக்களப்பு மாவட்ட மக்களும் ஹிஸ்புல்லாஹ்வின் அபிவிருத்திகளை எதிர்பார்த்தே நிற்கின்றனர்.

அதற்கு இறைவன் நீண்ட ஆயுளினை ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்விற்கு கொடுத்தருள வேண்டும் என பிரார்திக்கின்ற அதே நேரம், இளம் அரசியல்வாதிகள் அதிகளவில் ஹிஸ்புல்லாஹ்விடம் அரசியல் கற்றுகொள்ள வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

 ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து அரசியலில்  பல உயர் பதவிகளைப் பெற்று மாவட்டத்திற்கும் மக்களுக்கும் இந்த நாட்டிற்கும் பணியாற்ற வேண்டும் என வாழ்த்துகின்றேன்.

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed