Main Menu

மாகாண அதிகாரம் ஆளுநர் கையிலிருப்பதை அனுமதிக்க முடியாது -எஸ்.யோகேஸ்வரன் எம்பி

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.ரி.அக்ஷயா
பல மாகாண சபைகள் கலைக்கப்பட்டு சபைகளின் அதிகாரம் ஆளுநர்களின் கைகளில் வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. முதலிலே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெற்று மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடம் ஆட்சி வழங்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – செங்கலடி மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வின் இறுதி நாள் நிகழ்வு புதன்கிழமை (30) மாலை நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் குமாரசாமி அருணாசலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்குடா வலயக் கல்விப்பணிப்பாளர் தினகரன் ரவி, திட்டமிடல் உதவிக்கல்விப் பணிப்பளார் சி.துஸ்யந்தன், உடற்பயிற்சி உதவிக்கல்விப்பணிப்பாளர் க.சுபாஸ்சந்திரன், ஏறாவூர்ப்பற்று 2 கோட்டக்கல்விப் பணிப்பாளர் ச.தட்சணாமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயங்களில் அதிகப்படியான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. கடந்த மாகாண சபையில் கல்வியமைச்சு தமிழ் தேசிய கூட்டமைப்பிடமிருந்த போதும் போதியளவான சேவைகளை எங்களால் செய்ய முடியவில்லை.

மாகாண சபைகளுக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் அதனை முழுமையான பயன்படுத்தும் அதிகாரத்தினை மத்திய அரசு மாகாணங்களுக்கு வழங்கவில்லை. இதன் காரணமாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதிலே மாகாணங்களுக்கு கூடிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமெனக் கேட்கின்றோம்.

புதிய அரசியலமைப்பில் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மத்திய அரசு மீண்டும் மீளப்பெறாத வகையில் அரசியலமைப்பு உருவாக்க வேண்டுமென்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு ஆளுநரின் கட்டுப்பாட்டில் தற்போதுள்ளது. மாகாண சபை தனியொருவரின் கட்டுப்பாட்டிலிருப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. விரைவாக மாகாண சபைத்தேர்தலினை நடாத்தி மாகாண சபையினை மக்கள் பிரதிநிதிகளின் நிருவாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.

ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கதை உருவாக்குவதற்காக ஒத்துழைப்பு வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு எதற்காக அமைச்சுப்பதவிகளை ஏற்கவில்லை எனப்பலரும் கேள்வியெழுப்புகின்றனர். ஐக்கிய தேசியக்கட்சி அரசு தற்போது அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு எங்களை அழைக்கிறார்கள்.

எமது மக்கள் அமைச்சுப்பதவிகளை பெற்று சுகபோக வாழ்கையை அனுபவிப்பதற்காக ஆணையை வழங்கவில்லை. எமது இனம் இழந்த உரிமையை மீண்டும் பெறுவதற்காக பல உயிர்த்தியாகங்களைச் செய்துள்ளது. அமைச்சுப்பதவிகளைப் பெற்று அற்ப சொற்ப சலுகைகளுக்காக அவர்களின் தியாகங்களை தூக்கியெறிவதற்கு நாங்கள் தயாராக இல்லை.

தமிழ் மக்களினைப் பொறுத்தமட்டில் காலங்காலமாக இழந்த உரிமையப் பெற்றுத்தருவோம் என நம்பியே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்கிறார்கள். ஒரு சில கசப்பான விடங்களுக்காக தமிழ் மக்களில் ஒரு சிலர் அமைச்சுப் பதவிகளைப்பெற்று அபிவிருத்தி செய்யுங்கள் எனக்கூறினாலும் பெரும்பாலான மக்கள் எமது அபிலாசைகளை நிறைவேற்றும் வரை எந்தப்பதவிகளைப் பெறக்கூடாதென்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

தமிழ் மக்களுக்கு அமைச்சுப்பதவிகளை பெற்று அபிவிருத்தி தான் தேவையென்றால் தேசிய கட்சிகளில் போட்டியிட்ட தமிழ் பிரதிநிதிகளுக்கு வாக்களித்திருக்காலாம். கடந்த காலத்தில் முதலமைச்சராக, பிரதியமைச்சராக இருந்து தேசியக்கட்சிகளில் போட்டியிட்டவர்களை கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மக்கள் நிராகரித்த வரலாறுள்ளது.

நாங்கள் இந்த நாட்டின் தேசிய இனம் என்ற வகையில் இழந்த உரிமைகளைப்பெற்று சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சகல அதிகாரங்களுடன் வாழ வேண்டும். அந்த அபிலாசைகளை தமிழ் தேசியக்கூட்டமைப்புப் பெற்றுத்தரும் என்ற நமபிக்கையிலே தான் தமிழ் மக்கள் எங்களுக்கு வாக்களிக்கிறார்கள். அவர்களை நாங்கள் ஒரு போதும் ஏமாற்றமாட்டோம் என்றார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed