Main Menu

VPN – ஒரு பார்வை

இந்த செய்தியைப் பகிர்க >>>

Shaifur Rahman M. Sadhaka -University of Sri Jayewardenepura
இன்றைய நாட்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளில் அடுத்து முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த VPN. காலத்தின் தேவைகருதி இத்தலைப்பில் சிறிது அலசுவோம்.

VPN என்றால் என்ன? VPN என்பது Virtual Private Network (மெய்நிகர் தனியார் வலையமைப்பு) என்பதன் சுருக்கமாகும். இது பொதுவான இணைய வலையமைப்புகளுக்குப் பாதுகாப்பினை வழங்கும் ஒரு இணைப்பு முறையாகும். பெரும் பெரும் நிறுவனங்கள் தமது தரவுகளையும் தகவல்களையும் இம்முறையிலேயே பாதுகாக்கின்றன.

VPN பற்றி அறிந்து கொள்ள முதலில் IP முகவரி பற்றிய அறிவு எமக்கு அவசியமானதாகும். IP முகவரியென்பது ஒரு வலையமைப்பினூடாக இணையத்தோடு இணைக்கப்படும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் தனிப்பட்ட ரீதியில் (unique) வழங்கப்படும் எண் குறியீட்டு முறையாகும்.

இது ஒவ்வொரு சாதனங்களுக்கும் (கணினி, கைப்பேசி) தனித்துவமானதாகும். இந்த முகவரியைக் கொண்டே பாவனையாளரை அடையாளம் காண முடியும். ஆனால், VPN சாதனங்கள் இணைக்கப்படும் போது, அவற்றின் தனித்துவ ஐபி முகவரியை VPN சேவை வழங்குனர்களால் வழங்கப்படும் புதிய ஐபி முகவரி பதிலீடு (replace) செய்கிறது.

உதாரணமாக, கொழும்பிலிருந்து ஒருவர் VPN ஊடாக வலையமைப்பில் இணையும் போது, அவர் நியூயோர்க்கில் அல்லது சிட்னியிலிருப்பது போன்று மாயைத் தோற்றத்தை உருவாக்கும். அத்துடன், ஒரு நாட்டின் அரசினால் முடக்கப்பட்ட இணையத்தளங்களிலும் தடையின்றிப் பிரவேசிக்கவும் VPN இணைப்பு துணை புரிகிறது.

அந்த வகையில், VPN கள் பின்வரும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
1. இணையத்தோடு இணையும் போது எமது ஐபி முகவரியை மறைப்பதற்கு
2. வேறுபட்ட ஐபி முகவரிகளைக் காட்சிப்படுத்துவதற்கு
3. பயனரின் இட அமைவை மறைத்து வேறொரு இடத்திலிருந்து இணையத்தில் இணைவது போல் மாயையை உருவாக்குவதற்கு
4. அரசினால் தடை செய்யப்பட்ட அல்லது முடக்கப்பட்ட இணையத்தளங்களிலும் பிரவேசிப்பதற்கு

VPN பாதுகாப்பானதா?
உண்மையில் VPN வலையமைப்புகளின் பாதுகாப்பு நோக்கிலேயே பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில், சாதாரண இணைய இணைப்பை விட VPN ஊடான இணைப்பு நிச்சயம் பாதுகாப்பானதே.

VPN சட்டவிரோதமானதா?
இவ்வினா சற்று சிக்கலானது. இலகுவாக ஆம் அல்லது இல்லையென பதிலளித்து விட முடியாது. பொதுவாக VPN சட்டபூர்வமானவையே. VPN பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்ட ஈராக், வட கொரியா போன்ற நாடுகளைத்தவிர உலகில் எங்குமே VPN ஐப்பயன்படுத்த முடியும்.

ஆனால், இந்த VPN ஐப்பயன்படுத்தி இணையத்தள தரவுகளைத் திருடுதல், இருள் வலையினுள் (dark web) பிரவேசித்தல் போன்றவை சட்டவிரோத செயல்களாகப் பார்க்கப்படுகின்றன. இலங்கை போன்ற நாடுகளில் VPN பயன்படுத்துவது முற்றிலும் சட்டபூர்வமானதே.

ஆனால், இவ்விணைப்பினைப்பயன்படுத்தி அரசினால் முடக்கப்படும் அல்லது தடை செய்யப்படும் இணையத்தளங்களில் பிரவேசிப்பது சட்டவிரோதமானதென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed