Main Menu

தலைப்பிறையும், தவற முடியாத தக்வாவும்

இந்த செய்தியைப் பகிர்க >>>

சப்ராஸ் அபூபக்கர்
இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது நிறுவப்பட்டுள்ளது. கலிமா, தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ். இதில் தொழுகை இரண்டாவதும், நோன்பு நான்காவதாகவும் கடமையாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கடமையாக்கப்பட்ட தொழுகையை சவூதியில் இத்தனை மணிக்கு லுஹர் தொழுகிறார்கள் என்று அந்த நேரத்துக்கு இங்கே லுஹர் தொழுகையையும், கத்தார் நாட்டிலே இத்தனை மணிக்கு சுபஹ் தொழுகிறார்கள் என்று அந்த நேரத்துக்கு இங்கே சுபஹ் தொழுவதையும் இதுவரையில் இலங்கையிலுள்ள எவரும் கடைபிடித்தில்லையென்பதே யதார்த்தமான உண்மை. பொதுவாக, எமது தொழுகை நேரங்கள் சூரிய, சந்திர நேரங்களின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகிறது. எனவே, இங்கு சூரிய, சந்திர அடிப்படையிலேயே உள்ளூர் தொழுகை நேரங்களும் குறிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றது.

இனி, இஸ்லாத்தின் இரண்டாவது கடமையான தொழுகையையே நாம் உள்ளூர் கால நேரப்படிச்செய்யும் போது, நான்காவது கடமையான நோன்பை சர்வதேச அல்லது சவூதி அரேபிய பிறைப்பிரகாரம் தான் செய்வோமென பிடிவாதம் பிடிப்பது எந்த வகையில் நியாயமென எனக்குள்ளே நான் கேட்டுக்கொள்கிறேன்.

“உங்களுடைய தலைவருக்கு நீங்கள் கட்டுப்படுங்கள்” என்று இஸ்லாம் சொல்லும் போது, நமக்கு ஆதரவான சிலரை சேர்த்துக்கொண்டு நாமே அதற்குத்தலைவராகி நான் சொல்வது தான் சரி என விடாப்பிடியாக நிற்கின்ற போதே இவ்வாறான பிரச்சினைகள் எழுகிறதென்பது எனதான வியூகம்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எமக்கான சிறந்த வழிகாட்டல்களை தலைமைத்துவம் ஏற்று வழங்கி வருகிறது. கட்டாயமாக தலைமைத்துவத்துக்கு கட்டுப்பட வேண்டிய பொறுப்பு எமக்கிறது. சில நேரங்களில் தலைமைத்துவத்தை நீங்கள் பிழை, குறை காணலாம். ஆனால், அந்த தலைமைத்துவம் அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானம், முடிவுகளுக்கும் இறைவனிடம் பதில் சொல்லியே ஆக வேண்டுமென்பதை எமது சிறுவர்கள் கூட அறிந்து வைத்திருக்கின்றார்கள். சில சந்தர்ப்பங்களில் தலைமைத்துவம் எடுக்கும் தீர்மானம் தவறாக, பிழையாக இருந்து நாம் அதற்கு கட்டுப்பட்டால் தவறு தலைமைத்துவத்தின் மீதானதென்பதையும், தலைமைத்துவம் தான் இறைவனின் பிடியில் சிக்கிக்கொள்ளும் என்பதையும் நாம் ஒரு போதும் மறுக்க முடியாது. இதுவரையில் அ.இ.ஜ.உ. எமக்கான நல்ல முடிவுகளையும், நல்ல வழிகாட்டல்களையுமே வழங்கியிருக்கிறதென்பது தான் யதார்த்தமான உண்மை.

எனவே, புனித ரமழானை இன்னும் ஓரிரு நாட்களில் எதிர்நோக்கவுள்ள நாம் தலைப்பிறை விவகாரத்தில் வீணாய் விதண்டாவாதம் செய்தால், எம்மைப்போல கோழைகளும், பிடிவாதக்காரர்களும் உலகில் யாரும் இருக்க முடியாது.. வழமையாக இலங்கை நாட்டைப்பொறுத்த வரை தலைப்பிறை மாநாடு ஒவ்வொரு மாதமும் நடைபெறுவதோடு, முறையாகவும், நேர்த்தியாகவும் பிறைக்குழு அதைச்செய்து கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் சில தவறுகள் இடம்பெற்றிருந்தாலும், இன்ஷா அல்லாஹ். இந்த ரமழான் தலைப்பிறை விவகாரத்தில் அவர்கள் நீதமாய் நடந்து கொள்வார்கள் .

எனவே, இந்த ரமழானிலும் இரண்டு தலைப்பிறை, இரண்டு பெரு நாட்கள் என நம்மை நாம் கூறுபோட்டு இன்னும் அந்நிய மக்களிடத்திலிருந்து எம்மை நாம் தூரப்படுத்திக்கொள்ள நான் ஒரு போதும் விரும்பவில்லை. உங்களுக்குள்ளும் அப்படியானதொரு உணர்விருக்கும் என நான் நம்புகிறேன்.

எனவே, இன்ஷா அல்லாஹ் குரோதம், பிடிவாதக்கொள்கை என்பவற்றிலிருந்து விடுபட்டு, ஒற்றுமையாய் இந்த புனித ரமழானில் செயற்பட ஏக இறைவன் நம்மனைவருக்கும் அருள் புரியட்டும்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed