Main Menu

மட்டக்களப்பில் பொலிஸாரின் துப்பாக்கி பறிப்பு : பதற்ற நிலை : 9 பேர் கைது : இரு பொலிஸார் உட்பட நால்வர் வைத்தியசாலையில்

பாறுக் ஷிஹான்
மட்டக்களப்பு புதூர் திமிலைதீவு பிரதேசத்தில் போக்குவரத்துப் பொலிசாரின் கைத்துப்பாக்கியை ஒருவர் பறித்துச் சென்றதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை (04.07.2019) பகல் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸாருக்கும் அப்பகுதியில் மோட்டர் சைக்கிளை செலுத்திச்சென்ற இருவருக்குமிடையில் முறுகல் நிலையேற்பட்ட நிலையில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
மட்டு.தலைமையக பொலிஸ் பிரிவின் கீழுள்ள புதூர் திமிலைதீவு ஆலயத்துக்கருகில் சம்பவ தினமான இன்று வியாழக்கிழமை பகல் 11 மணியளவில் வீதிப்போக்குவரத்து பொலிசார் இருவர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இருவர் தலைகவசமின்றி வவுணதீவு பிரதேசத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது, பொலிசார் அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்டனர். மோட்டர் சைக்கிளைச் செலுத்தி வந்தவர்கள் மோட்டர் சைக்கிளைத் திருப்ப முயன்ற போது, வீதியின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படி ரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவரும் காயமடைந்தனர்.

இதனையடுத்து அங்கு ஒன்று திரண்ட பொது மக்களுக்கும் பொலிசாருக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையையடுத்து, பொலிசார் மீது தாக்க முற்பட்டனர். இந்நிலையில், பொலிஸ் உத்தியோகத்தரின் இடுப்பிலிருந்த கைத்துப்பாக்கியை இனந்தெரியாத ஒருவர் அபகரித்து தப்பிச்சென்றார்.

இதனையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டதுடன், சம்பவத்தில் காயமடைந்த 2 பொலிசார் உட்பட 4 பேர் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்தில் பொலிசார் மற்றும் இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக பெண்கள் உட்பட 9 பேரை சந்தேகத்தில் கைது செய்துள்ளதுடன், புதூர் மற்றும் வவுணதீவுப் பகுதிகளில் மேலதிகமாக இராணுவத்தினர், பொலிசார் வரவழைக்கப்பட்டு அப்பகுதிகளில் பாரிய சுற்றி வளைப்பு தேடுதல், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.



Comments are Closed