Main Menu

அடுத்த மனிதனை நேசிக்கப்பழகிக் கொண்டால், இந்த உலகம் அமைதியடைந்து விடும்- ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச்செய்தியில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எல்.றபீக்

இந்த செய்தியைப் பகிர்க >>>

பாறுக் ஷிஹான்
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகவும் இறுதியாகவும் ஹஜ் கடமை காணப்படுகிறது. புனிதத்துவமிக்க ஹஜ்ஜூப்பெருநாளை நமது நாட்டு முஸ்லிம்களும் உலகெங்கும் பரந்து வாழும் முஸ்லிம் உம்மத்துக்களும் மகிழ்வுடன் இன்று கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு எனது உளம் கனிந்த ஹஜ்ஜூப்பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைகின்றேன் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எல்.றபீக் விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அச்செய்தியில் தெரிவிக்கப்படுவதாவது,

நமது நாட்டில் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் அனைவரும் ஒற்றுமையாகவும் நல்லிணக்கத்தோடும் வாழ இறைவனைப் பிரார்த்தித்தவனாகவும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

உலகில் வாழும் முஸ்லிம் சமூகத்துக்கு அடிப்படைவாதம், எந்தவொரு பயங்கரவாத செயலிலும் இல்லாமல் ஒற்றுமையுடன் நாட்டில் இன, மத பேதமற்ற முறையில் வாழ வேண்டும். சகல சமூகங்களுக்குமிடையில் கசப்புணர்வற்ற நல்லுணர்வோடும் புனித மக்காவில் ஹஜ்ஜாஜிகள் அனைவரும் தங்களது கடமைகளை நிறைவேற்றவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இறை ஆணைக்கு கட்டுப்பட்ட ஒரு குடும்பத்தின் மூன்று தியாகசீலர்களாம் அல்லாஹ்வின் தோழரான நபி இப்றாஹிம் (அலை) அவரின் துணைவியார் அன்னை ஹாஜரா, தவப்புதல்வன் நபி இஸ்மாயில் (அலை) ஆகியோரின் மாபெரும் தியாகம் நமக்கெல்லாம் படிப்பினையைத் தந்ததோடு, உலகம் அழியும் வரையும் இத்தியாகம் நம்மால் நினைவு கூறப்பட வேண்டியவொன்றாகும். அன்னாரின் தியாகத்திற்கான உயர்ந்த சன்மானமே ஹஜ்ஜூப் பெருநாளாகும். இந்நாளில் முஸ்லிம்களின் வாழ்வில் தியாகவுணர்வு மென்மேலும் அதிகரிக்கட்டும்.

நாம் ஒவ்வொருவரும் அடுத்த மனிதனை நேசிக்கப்பழகிக் கொண்டால், இந்த உலகம் அமைதியடைந்து விடும். சக மனிதனை நேசிக்க முடியாதவர்களால் இறைவனை நேசிக்க முடியாது. அடுத்தவர் மீது நாம் வைக்கும் அதீதமான நேசம் தான் நம்மிடம் தியாக குணத்தை வளப்பதற்கு வழிவகை செய்கிறது.

ஹஜ் என்கிற வரலாறு நமக்கு வெறும் மார்க்கக் கடமையினை மட்டும் கற்றுத்தரவில்லை. அந்த வரலாற்றில் நமக்குப் படிப்பினையாக ஏராளமான விடயங்கள் இருக்கின்றன. அவற்றினை நமது வாழ்வில் நடைமுறைப்படுத்துவோமேயானால், இந்த உலகிலும் மறுவுலகிலும் நமது வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமைந்து விடும்.

நமக்கு விருப்பமானவற்றை இறைவனுக்காகவும், சக மனிதனுக்காகவும் தியாகம் செய்யுமாறு இஸ்ஸாம் கூறுகிறது. இன்று நம்மிடையே ஏராளமானோர் வறுமையோடு போராடிக் கொண்டு வாழ்கையைக் கடத்திக் கொண்டிருப்பதை இந்தத்தியாகத் திருநாளில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்வதனூடாக நாம் இறைவனின் பொருத்தத்தைத் தேடிக்கொள்ள வேண்டும்.

நமது நாட்டில் இவ்வாறான தினங்களை சந்தோசமாகவும் நிம்மதியாகவும் கொண்டாட முடியாத வரலாறு இருந்தது. அவ்வாறான கரைபடிந்த அத்தியாயம் நீங்கி, இன்று நாமனைவரும் நிம்மதியுடனும் சந்தோசத்துடனும் இன்றைய தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அதற்காக எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு சுக்ர் செய்வோமாக என கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எல்.றபீக் விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed