Main Menu

தனியார் நிறுவனங்களினூடாக வேலைவாய்ப்பை வழங்க அரசு நடவடிக்கை -உதவிப்பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர்

எஸ்.எம்.எம்.முர்ஷித்
தனியார் நிறுவனங்களினூடாக வேலைவாய்ப்பற்றவர்களுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படுகின்றதென ஓட்டமாவடி பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் தெரிவித்தார்.

மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் ஓட்டமாவடி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பிரதேச தொழில் சந்தை வழிகாட்டல் நிகழ்வு செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் வேலையில்லாப் பிரச்சனையைத் தீர்த்துக்கொள்வதில் தற்போதுள்ள அரசாங்கத்திற்கும் இனி வரும் அரசாங்கத்திற்கும் இதுவொரு பாரிய சவாலாகக் காணப்படுகின்றது. அரச திணைக்களங்களில் கூட பட்டதாரிகளை இணைத்துக்கொண்டாலும் இவர்களுக்கான சரியான வேலை விபரங்களை வழங்க முடியாத சூழ்நிலையில் திணைக்களங்கள் காணப்படுகின்றது.

அரச திணைக்களங்கள், அரச தொழில்வாய்ப்புக்களை வழங்குவதில் இருக்கின்ற சிக்கல் நிலை உணரப்பட்டுள்ளது. அரசாங்கம் வேலையின்மையை இல்லாமல் செய்வதற்காக தனியார் நிறுவனங்களினூடாக வேலைவாய்ப்பினை வேலைவாய்ப்பற்றவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் இணைப்புச்செயற்பாட்டை அரசாங்கம் என்ற ரீதியில் பிரதேச செயலகங்கள் ரீதியாக ஒருங்கிணைப்புச் செய்து நடாத்திக் கொண்டிருக்கின்றது என்றார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத் வழிகாட்டலில் உதவிப்பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தொழில் நிலைய மட்டக்களப்பு மாவட்ட இணைப்பதிகாரி பி.சுரேந்திரன், செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.பைசல், பாசிக்குடா மாலு மாலு ஹோட்டல், ஈஸ்ட் லங்கா பொலிசக் கம்பனி, பாசிக்குடா ஹோட்டல் கற்கை பாடசாலை, ஜோன் கீல்ஸ் குரூப் கம்பனி, தேசிய வழிகாட்டல் தொழில் கற்கை பயிற்சி நிலையம் ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர், யுவதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது தொழில்வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர், யுவதிகள் பொருத்தமான தொழிலைப் பெற்றுக் கொள்வதற்கும், தங்களுக்குப் பொருத்தமான கற்கைநெறிகளைத் தெரிவு செய்து கொள்வதற்குமான களமாக பிரதேச தொழில் சந்தை வழிகாட்டல் நிகழ்வு இடம்பெற்றது.

அத்தோடு, இங்கு கலந்து கொண்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் தங்களுக்கான தொழிலாளர்களையும் கற்கைநெறிக்கான பயிலுனர்களையும் தெரிவு செய்யும் வகையில் இவர்களுக்கான வழிகாட்டல் பயிற்சிக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இங்கு இடம்பெற்ற பிரதேச தொழில் சந்தை வழிகாட்டல் கலந்துரையாடல் மூலம் வேலையில்லாமல் காணப்படும் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் குறித்த வேலைத்திட்டம் இடம்பெற்றதாக தொழில் நிலைய இணைப்பதிகாரி எஸ்.சுரேந்திரன் தெரிவித்தார்.



Comments are Closed