Main Menu

நீர்ப்பாசன விவசாய அபிவிருத்திற்கான கலந்துரையாடல்

எஸ்.எம்.எம்.முர்ஷித் & எம்.ரீ.எம்.பாரிஸ்
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உலக வங்கியினால் முன்னெடுக்கப்பட்டு, காலநிலைக்குச்சீரமைவான நீர்ப்பாசன விவசாய அபிவிருத்திற்கான கலந்துரையாடல் இன்று 09.10.2019ம் திகதி புதன்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான மாணிக்கம் உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலாளரின் கலந்துரையாடல் மண்டபத்தில் நடைபெற்றது.

காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய அபிவிருத்தித் திட்டமானது இலங்கையில் 11 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவு தெரிவு செய்யப்பட்டு, இவ்வேலைத்திட்டத்தின் கீழ் முந்தானை ஆறு அணைக்கட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு, ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்.

இத்திட்டத்திற்காக மொத்தமாக 140 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு விவசாயிகளின் பங்களிப்புக்காக 125 மில்லியன் அமெரிக்கன் டொலர்களும் இலங்கை அரசினுடைய நிதியாக 10 மில்லியன் அமெரிக்கன் டொலர்களுமாக 11 மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான விசேட வேலைத்திட்டமானது, தொடர்ந்து வெள்ளம், வரட்சி, இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படுகின்ற மாவட்டங்களுக்காகவே இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய திட்டத்திற்கு மாவட்டத்தின் பங்குதார்கள் அனைவரையும் இணைந்த வகையில் இவ்வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

உலக வங்கியின் மூலம் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத்திட்டத்தின் மூலமாக நாட்டு மக்களின் விவசாய உற்பத்தித்திறனை மேன்படுத்தி நீர்ப்பாசனம் மற்று விவசாயம் மூலமான தன்னிறைவைக் காண்பது தான் இத்திட்டத்தின் முக்கிய கருப்பொருளாகக் கொண்டு நாட்டினைச் செழிப்புறக்கட்டியெழுப்புவதாகவே இத்திட்டம் அமைகின்றது.

இக்கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் புண்னியமூர்த்தி சசிகலா, உலக வங்கி திட்டத்தின் நிபுணர் சி.மனோகரன், திட்டப்பணிப்பாளர் பொறியலாளர் என்.சிவலிங்கம் மற்றும் பிரதிப்பணிப்பாளர் ஆரியதாச, மொகமட் அமின் (நிதி முகாமைத்துவ நிபுணர், உலக வங்கி), சரத் விக்கிரமசிங்க (சிரேஸ்ட ஆலோசகர், உலக வங்கி) ஆகியோர் கலந்து கொண்டனர்.



Comments are Closed