Main Menu

போராடி வென்ற பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி

இலங்கை மின்சார சபையை அண்டிய பின் பகுதியில் மக்கள் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த பாதை திட்டமிட வகையில் அபகரிப்பட்டவிருந்த நிலையில், கோறளைப்பற்று வாழைச்சேனைப் பிரதேச சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பிரதேச உறுப்பினர் கே.எல்.அஸ்மியின் அயராத முயற்சி மற்றும் தலையீடு காரணமாக மக்கள் சிரமமின்றி போக்குவரத்து செய்யும் பாதையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இப்பாதையை உருவாக்கும் முயற்சியில் பிரதேச உறுப்பினர் கே.எல்.அஸ்மியின் பங்களிப்பு, முயற்சி, தலையீடு மெச்சத்தக்கதுடன், அவரின் பெரும் போராட்டத்தினால் பாதை உருவாக்காப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

குறித்த பாதை நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில், இப்பாதையினை இல்லாமலாக்கி சுற்று மதில் அமைக்கும் சதி மறைமுகமாக மேற்கொள்ளப்பட்ட வேளையில், பிரதேச உறுப்பினர் கே.எல்.அஸ்மி தலையிட்டு அதற்கான தீர்வினைப் பெற்றுக் கொடுத்துள்ளதுடன், இப்பிரதேச மக்களின் உரிமையினையும் மீட்டுக்கொடுத்துள்ளார்.

குறித்த பாதை இப்பிரதேசத்திலுள்ள பல்வேறு அரச, அரச சார்பற்ற நிறுவங்கள், வைத்தியசாலை மற்றும் வர்த்தக நிலையங்களுக்குச் செல்லும் பிரதான வழியாகக்காணப்பட்டதுடன், இதனூடாக இலகுவான பயணத்தையும் இப்பகுதி மக்கள் மேற்கொண்டு வந்தனர்.

குறிப்பாக, இப்பிரதேசத்தில் அமைந்துள்ள தாய், சேய் நிலையத்திற்குச் செல்லும் ஒரேயொரு பாதையாக இது மாத்திரமே காணப்பட்டதுடன், இப்பாதை மூட்டப்பட்டிருந்தால் மாவடிச்சேனை பள்ளிவாயல், யாஸீன் பாவா வீதி, பஷீர் வீதி, எம்.பி.சி.எஸ்.வீதி ஆகிய பிரதேசங்களை அண்டியுள்ள சுமார் 850 குடும்பங்கள் கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியூடாக அல்லது ஹபீப் கங்காணியார் வீதியூடாகவே குறித்த தாய், சேய் பராமரிப்பு நிலையத்திற்கு ச் சென்று வர வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்பட்டது.

இப்பிரதேச மக்களின் கஷ்டங்களைக் கருத்திற்கொண்ட பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி குறித்த வீதியினை பெற்றுக் கொடுப்பதில் அயராது பாடுபாட்டார்.

அதே நேரம், இப்பாதையை அண்டிய பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இலங்கை மின்சார சபை பிரதான காரியாலய சுற்றுமதில் நிர்மாணிப்பின் போது, இப்பாதையின் அகலத்தை சுருக்கி பாதையின் விஸ்தீரணத்தைக்குறைக்கும் சதியும் மேற்கொள்ளப்பட்ட வேளை, பிரதேச சபை உறுப்பினர் களத்தில் நின்று போராடி அதற்கான தீர்வினையும் பெற்றுக்கொடுத்து பாதை சிறப்பான முறையில் அமைய தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, குறித்த வீதியை கடந்தாண்டு (2019) பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்ட நிதியிலிருந்து கொங்கிரீட் வீதியாக அமைக்கப்பட வேண்டுமெனும் கோரிக்கை சபையில் முன்மொழியப்பட்டு கொங்கிரீட் வீதியாகப் புனரமைப்புச் செய்யப்பட்டதுடன், வீதியினை சிறப்பான முறையில் பராமரிக்கும் நோக்கில் பாதையின் இரு மருங்கிலும் பயன்தரும் மரங்களை நடத்திட்டமிட்டுள்ளதாகவும் பிரதேச உறுப்பினர் கே.எல்.அஸ்மி தெரிவித்தார்.

அத்தோடு, ஒரு பிரதேசத்திலுள் வாழும் மக்களுக்கு போக்குவரத்து பாதை மறுக்கப்படுவதும் அவர்களின் உரிமையில் தலையிடுவதாக அமையும் என்பதுடன், குறித்த வீதி இப்பிரதேச மக்களின் உரிமையாகவே கொள்ளப்பட வேண்டும்.

அபிவிருத்தி என்பதற்கும் அடிப்படை உரிமைகளை வென்று அபிவிருத்தி செய்வதென்பதும் வெவ்வேறானவை. அபிவிருத்தி மத்திய, மாகாண அரசுகள் மேற்கொள்ளும். அது அவ்வரசுகளின் கடமை. அதே நேரம் உரிமைகளை வென்றெடுப்பதில் தான் சமூகத்தின் முன்னேற்றம் தங்கியுள்ளது. வெறுமனே அபிவிருத்தி செய்கிறோம் என பம்மாத்து அரசியல் செய்வதை விடவும் சமூகம்சார் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதில் அரசியல்வாதிகள், அதிகாரிகளும் பின் நிற்கக்கூடாது.

அந்த அடிப்படையில் இப்பிரதேச மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான போக்குவரத்துப் பாதையினை மீட்டெடுத்து, அதனை மக்கள் சிரமமின்றி பயணிக்கும் வகையில் கொங்கிரீட் வீதியாக அமைத்துக் கொடுத்துள்ளேன். எமது சமூகத்தின் இருப்பு, உரிமைசார்ந்த கேள்விக்குறியான நிலையில், இவற்றைப் பெற்றுக்கொள்வதிலும், இன ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் விடயங்களிலும் ஒரு போதும் பின் நிற்கப்போவதில்லை.

அத்தோடு, இப்பாதை நிர்மாணிப்பின் போது மாவடிச்சேனை வர்த்தக சங்கத்தினர் கிறவல் இடுவதற்காக நிதியுதவி வழங்கியிருந்தமையை நன்றியுடன் நினைவுகூறுவதுடன், இப்பாதை மீட்டெடுப்பதில் பொது நிறுவனங்கள், விளையாட்டுக் கழங்களும் இப்பிரதேச மக்களும் வழங்கிய ஒத்தாசைகளுக்கும் நன்றி தெரிவிக்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.

குறித்த பாதையை மீட்டெடுப்பதில் கடந்த காலங்களில் பொறுப்பு வாய்ந்தவர்கள் பராமுகமாக இருந்த வேளையில், பிரதேச உறுப்பினர் கே.எல்.அஸ்மி  எடுத்துக்கொண்ட சிரத்தையும் முயற்சியும் வெற்றியளித்துள்ளதுடன், இப்பாதையை இப்பிரதேச மக்களுக்கு மீட்டுக்கொடுப்பதில் பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் மாஅதிபர், இலங்கை மின்சார சபையின் தலைமைக்காரியாலயம் வரை பிரச்சனைகளை எதிர்கொண்டமை இங்கு குறிப்பிட்டாக வேண்டியது அவசியமாகின்றது.

மேலும், கல்குடா முஸ்லிம்களின் உரிமை, இருப்பு மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் காணிப்பிரச்சினைகளின் போது  தனியாளாக முன்னணியில் நின்று தன்னால் இயன்ற பணியினை ஆற்றி வருவதுடன், இதே பிரதேசத்தில் வாழைச்சேனை ஆதர வைத்தியசாலையின் பின் பகுதியில் அமைந்துள்ள பாதை நிர்மாணிப்பின் போது ஏற்பட்ட இழுபறியை தீர்த்து வைத்து அந்த பாதையை நிர்மாணித்து மக்களுக்கு வழங்குவதில் பிரதேச உறுப்பினர் கே.எல்.அஸ்மியின் பங்களிப்பு அளப்பெரியது.Comments are Closed