Main Menu

வாப்பா….. எஸ்.எம்.எம்.முர்ஷித்

இந்த செய்தியைப் பகிர்க >>>

கடந்த 26.12.1992ம் ஆண்டு மட்டக்களப்பு- கொழும்பு பிரதான வீதியில் மீயான்குளச்சந்தியில் புலிப்பயங்கரவாதிகளின் நிலக்கணிணி வெடியில் சிக்குண்டு மாவட்ட செயலகத்திற்கச் சொந்தமான மாருதி ஜீப்பில் பயணித்து ஷஹீதாக்கப்பட்ட எனது தந்தை எஸ்.ஏ.எஸ்.மகுமூது அவர்களின் நினைவாக வரைப்பட்ட கவிதை.

இதில் மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிர் வை.அஹமது, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.கே.உதுமான், சட்டத்தரணி ஏ.பி.எம்.முஹைதீன், விறகு வியாபாரி சாஹுல் ஹமீட் மற்றும் சாரதி மகேந்திரன் ஆகியோர்கள் கொல்லப்பட்டு சுமார் 27 வருடங்களாகின்றது.

வாப்பா…!

இன்று போலுள்ளது

அந்தக்கனப்பொழுதுகள்

கண்ணீர்ப்பொழுதுகள்.

இரத்த வெறியர்களின்

இரக்கமற்ற செயலால்

இரத்தகறை படிந்த

இருபத்தேழு வருடங்கள்.

இழந்து தவிக்கிறேன் உங்களை .

நீங்கள் மறைந்தாலும்

மறவாமல் நினைந்தழுகிறேன்.

எனை ஏற்றி விட்டா ஏணியாய் நீங்கள்

என் முன்னேற்றத்தில்

ஒவ்வொரு படிக்கற்களிலும்

என்னோடு நீங்களாகவே இருக்கிறீர்கள்.

இனவாத கோரப்பசிக்கு ஏன் இறையானீர்?

ஆயிரம் கேள்விகளுடன் கனத்த பொழுதுகளை கழிக்கிறேன்.

நிருவாகப்பசிக்கு பலியிடப்பட்ட  அப்பாவி நீங்கள்.

ஈழம் தனி நாடானால்…

தனி நாட்டில் சோனி எதுக்கு நிருவாகத்தில்?

இனவாத எண்ணத்திற்கு பலியான ஓர் உயிர் நீங்கள்.

2003ல் கிளியில்

புலிதேவனும் சாட்சியம் கூறினான்.

பட்ட மரத்திற்கு தீ வைக்கையில்

பச்ச மரமும் சாவது தான் யதார்த்தம்

தத்துவம் பேசினான்.

அதிலும் இனவாதம் பேசினான்.

எம் மண்ணின் முத்துக்களை

பறி கொடுத்த நாளது.

என் தந்தையும் பறி கொடுக்கப்பட்ட

தினமது.

கல்வி நிருவாக அதிகாரி

நிருவாக அதிகாரி

சட்டத்தரணி வரலாற்றில் முதலாவதாய்

வரலாறு படைத்தவர்கள்.

சமூகத்துக்காய் ஷஹீத் பட்டியலில் முன் வரிசையில்

நீங்கள்.

இந்த மண்ணுக்காய் விதைக்கப்பட்டவர்கள்.

என் தந்தையே நீங்களும்  விதைக்கப்பட்டீர்கள்.

இழப்புக்களும் சேதங்களும்

ஈடு செய்ய முடியாதவை.

இந்த மண்ணுக்காய் உரமாய்ப்போனீர்களே..!

மன ஆறுதல் அது மட்டும் தானே.

நட்பு வட்டத்தை உருவாக்கி

நண்பர்களுடனே இந்த மண்ணுக்காய்

விதைக்கப்பட்ட அந்நாள்.

இன்றுடன் இருபத்தேழு ஆண்டாக…

உங்கள் இறுதிப்பயணம்

எனக்குத்தெரியாமல்

போனதேனோ

பிள்ளைகளின்

எதிர்காலமே

உங்கள் இலக்கு.

இலக்குக்காக உங்கள் ஆசைகள் அர்ப்பணமாயின

மோட்டார் சைக்கிள் கனவும்

எங்களுக்கு அர்ப்பணமாயின.

அந்த தியாகத்தை இன்றும் நினைவுகூர்கிறேன்.

இன்று இரு, முச்சக்கரவண்டிகள்

என்னிடம் இருந்தும்

உங்கள் கனவும் தியாகமும்

மின்னி மறைகின்றன.

உங்கள் நட்பு வட்டம்

உங்களை நினைவுகூர்கையில்

உங்களை நினைத்து

பிரிவு துயர் என்றாலும்

சந்தோசப்படுகிறேன்.

“பாசிசப்புலிகள் ஏன் உங்களை காவு கொண்டார்கள்?”

என்ற என் மகவின் கேள்விக்கு

பதிலே இல்லாமல் தவிக்கிறேன்.

மெளனமே பதிலாகிறது.

உங்கள் நினைவுகள் போல

உங்களது உருவப்படமும்

என் பக்கத்தில் தொங்கி நிற்கிறது.

நாங்கள் வாழவே

உயிர் வாழ்ந்த நீங்கள்

எங்களை விட்டு

வேகமாய் பிரிந்ததேனோ.,,,?

என்றும் என் பிரார்த்தனைகளும்

என் கண்ணீருமே உங்களுக்கு காணிக்கையாக..

உங்கள் மகனாய் பெருமை கொள்கிறேன்.

முர்ஷித் மகுமூது

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed