Main Menu

முஸ்லிம் விவாகம், விவாகரத்துச்சட்டம் முற்றாக ஒழிப்பது : அரசியலமைப்புக்கு முரணானது!

எம்.எம்.எம்.நூறுல் ஹக் -சாய்ந்தமருது
எதிர்வரும் 2020 ஜனவரி 03ஆம் திகதி கூடும் நமது நாடாளுமன்றத்தில் நமது நாட்டின் இன்றைய புதிய ஜனாதிபதி கோட்டாபயவின் உரையுடன் கூடிய நிகழ்வுகளையடுத்து, அன்றைய தினமே நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியிடும் தினம் வரை பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்படலாமென்றும், அதே தினமே உடன் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலுக்குச் செல்லும் வகையில் ஆதரவினை ஏகமானதாக அறிவிக்கும் நிலை தோன்றலாமென்கின்ற இரு கருத்துக்கள் தான் தற்போதைய அரசியல் எதிர்வு கூறல் கதையாடலாக இருக்கின்றது.

இவையொரு புறமிருக்க, முஸ்லிம் அரசியல் களத்தில் வேறொரு தலையிடி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இறுதிக்கால கட்டத்தில் உரத்துப்பேசப்பட்டு வந்த முஸ்லிம் தனியார் சட்டத்திருத்தம் இப்போது முற்றாக நீக்கப்படுவதென்ற கதையாடலுக்குள் சிக்க வைக்கப்படும் ஒரு பொறிமுறை மேற்கிளப்பப்பட்டிருக்கிறது. இது திருத்தத்தின் மூலம் விளையும் ஆபத்துக்களையும் விட பேராபத்தாக முஸ்லிம் சமூகத்திற்கு அமைந்து விடக்கூடிய அச்சுறுத்தல் என்பதில் துளியளவும் ஐயமில்லை.

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தனி நபர் பிரேரணைகளாக இதனைத்தயாரித்து, அவை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் மசோதாவின் உள்ளடக்கம் பின்வறுமாறு காணப்படுகின்றது.

1. ‘1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்ஸிம் விவாகம் மற்றும் விவாகரத்துச்சட்டம் பற்றியதாகும். இந்த சட்டம் மீளப்பெறப்பட வேண்டும்’ என்றும், 2. ‘1907ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க திருமணங்கள் (பொது) கட்டளைச்சட்டம்’ பற்றியதாகும்.

இதில் ‘முஸ்லிம்களினதும் தவிர்ந்த வேறு திருமணங்கள்’ என்ற சொற்கள் நீக்கப்பட வேண்டுமென்றும் முன்வைக்கின்றது. இதனூடாக இலங்கையில் நடைபெறும் அனைத்து திருமணங்களுக்கும் உள்ளதைப் போன்று தான் முஸ்லிம்களுடைய விவாகம், விவாரத்துச்சட்டமும் அமைய வேண்டுமென்ற நோக்கத்தின் வெளிப்பாடாகவே நாம் இதனைப் பார்க்கலாம்.

அதே நேரம், ஐக்கிய தேசியக்கட்சியின் மற்றொரு நாடாளுமன்றப் பிரதிநிதி துஷித விஜேமான்ன இன்னொரு தனி நபர் மசோதாவில் ‘இலங்கையில் நடைபெறும் அனைத்து திருமணங்களுக்கும் குறைந்தபட்ச வயது 18ஆக இருக்க வேண்டும்’ என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்விரு நாடாளுமன்றப் பிரதிநிதிகளினதும் மசோதாக்கள் 16.12.2019ஆம், 18.12.2019ஆம் திகதிகளில் வெளிவந்த வர்த்தமானிகளில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இவ்விரு மசோதாக்களின் பின்னணியில் முஸ்லிம் விவாக, விவகாரத்துச்சட்டம் குறி வைக்கப்பட்டிருக்கின்றது. அதிலும் அதுரலியே ரத்ன தேரரின் முன்வைப்பு முஸ்லிம்களுக்கு என தனித்து திருமணச் சட்டமென்று ஒன்று அடியோடு இருக்கக்கூடாதென்ற அடிப்படையில் அமைந்திருக்கிறது. இவரது கூற்றோடு வைத்து துஷித விஜேமான்னாவின் கோரிக்கையை நோக்கினால் இது ஒரளவு பாதகத்தன்மையைக் கொண்டதென அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.

இன்றைய நமது நாட்டின் அரசியல் கள நிலவரத்தில் இவ்விரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த முன்னெடுப்பு அவர்களுக்கு நேரெதிரான அரசியல் கட்சியாகக் காணப்படும் பொதுஜன பெரமுனவிற்கு ஏற்படுத்தும் பாதகத்தை விட தமது அரசியலிருப்பைத் தாங்கிக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குத்தான் மிகுந்த பாதகத்தை ஏற்படுத்துமென்பதை எண்ணிப்பார்க்க மறந்திருக்கிறார்கள்.

பொதுவாக ஐக்கிய தேசிய கட்சி என்றாலும் சரி, பொதுஜன பெரமுன என்றாலும் சரி அனைத்தும் பெருந்தேசியவாதத்தில் இயங்குவதிலிருந்து வேறுபட்டதல்ல என்ற பொதுமையான கணிப்பீட்டுக்கு புற நடையாகி விடாதென்பதை பல கட்டங்களிலும் ஆதாரப்பூர்வமாக அவை நிரூபித்து வந்திருக்கின்றன. இந்த இனவாதக்கூர்மைப்படுத்தலுக்கு ரணிலோ, சஜித்தோ விதிவிலக்காகி விட முடியாது.

என்றாலும், மஹிந்த – கோட்டாபய அணியினர் தான் முஸ்லிம்களின் மொத்த எதிரிகள் என பறை சாற்றி, பகிரங்க பிரசாரத்தில் ஈடுபட்ட நமது முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாளக்கட்சிகளாக முஸ்லிம் சமூகத்திடம் வெகுவாகவும் ஆழமாகவும் பதிவாகியும், அதிகரித்த முஸ்லிம் வாக்குப்பலத்தையும் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு நிற்பதை நமது முஸ்லிம் அரசியல் களம் நன்கறிந்தவொன்று என்பதற்கப்பால் நமது நாட்டு மக்கள் யாபேரும் அறிந்தவொன்றுமாகும்.

இப்போது ஐக்கிய தேசிய கட்சியுடன் இரண்டறக்கலந்த கட்சிகளாகவும் அதன் ஊதுகுழலாகவும் அடிவருடிகளாகவும் செயற்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் அதன் தலைவர்களும் தான் அதுரலியே ரத்ன தேரர் மற்றும் துஷித விஜேமான்னவினர் விரித்த ஆப்பில் மாட்டிக்கொண்டு பலியாகி விடப்போகும் அபாயத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் நெருக்கடிக்கு இதன் மூலம் தள்ளப்படுகின்றனர்.

உண்மையில், இந்த சட்டங்கள் இயற்றுவது தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அவை விவாதத்துக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, வாக்கெடுப்புக்கு விடப்படும் நிலை தோன்றினால், இன்றைய அரசியல் சூழலில் எவ்வாறான நிலையைத் தோற்றுவிக்குமென்பது குறித்து முஸ்லிம் சமூகம் அக்கறையற்றிருக்க முடியுமா?

நமது முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாள கட்சிகளின் தலைவர்களான றஊப் ஹக்கீம், றிஷாட் கூறியது போன்று மஹிந்த – கோட்டாபய அணியினர் முஸ்லிம்களின் விரோதிகளென்றால், இந்த மசோதா அவர்களுக்கு பழம் நழுவி பாலில் விழுந்த தித்திப்பான விடயமாகத்தானே அமையும்.

அப்படியானால், அவர்கள் இந்தச்சந்தர்ப்பத்தை தவற விடுவார்களா? அல்லது நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ நிறைவேற்றிக் கொள்வதற்கான வியூகங்களை வகுப்பதிலிருந்து விலகிச் செல்வார்களா?

முஸ்ஸிம் விவாகம், விவாகரத்துச்சட்டத்தை முழுமையாக அகற்றி விடக்கூடிய வாய்ப்பு வலிந்து வரும் போதும், அதே நேரம், பொதுஜன பெரமுனவினால் முதலில் தொடங்கி வைக்கப்பட்டதென்கின்ற பெயரில்லாது வரும் இந்த வாய்ப்பு எவ்வளவு விலை கொடுத்தாலும் அவர்களுக்கு கிடைக்குமா? ஆயின், நேரடியாக முஸ்லிம் விரோதப்போக்குக்கு ஐக்கிய தேசியக்கட்சியை முன்னிறுத்தி விட்டு, ஒரு மறைமுக ஆதரவுக்கரத்தை நீட்டினாலே நிறைவேறுவதற்குப் போதுமானதாக இராதா?

இன்று நடைமுறையிலிருக்கின்ற அரசாங்கம் மஹிந்த – கோட்டாபய அணியினருடைய சார்பானதாக இருந்தாலும், அது தனிப் பெரும்பான்மையைக் கொண்டதல்ல. மாறாக, ஐக்கிய தேசியக்கட்சிக்கு சார்ந்த அணியினர் இன்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தாலும், அவர்கள் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் ஆளும் அணியினரை விட அதிகமாகவும் இருப்புக்கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வாக்கெடுப்புடன் தொடர்புபட்ட சட்டங்களை இயற்றும் முஸ்தீபுக்கு இன்றைய ஆளுந்தரப்பினர்கள் பெரும்பாலும் முதலில் ஆர்வங்காட்டாத ஒரு போக்கைத்தான் எதிர்வரும் மார்ச் 01ஆம் திகதி வரை இருக்கப்பார்ப்பனர் என்கின்ற ஒரு ஆறுதல் முஸ்லிம் சமூகத்திற்கு இப்போதைக்கு இதனைத்தவிர வேறில்லை.

ஐக்கிய தேசியக்கட்சியின் மேற்சொன்ன இரு நாடாளுமன்றப் பிரதிநிதிகளும் தனி நபர் பிரேரணையாக நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு, விவாதித்து, வாக்கெடுப்புக்கு விடப்படுமானால், அது வெற்றி பெறுவதற்குத் தேவையான நாடாளுமன்றப் பிரதிதிதிகளின் எண்ணிக்கை மூன்றிலிரண்டல்ல என்பது நமது கவனத்திற்குரியது. இவ்வாறானதொரு சட்டமூலம் சட்டமாக அங்கீகரிக்கப்படுவதற்கு தேவைப்படும் நாடாளுமன்ற பிரதிநிதிகளின் தொகை என்பது பின்வருமாறு அமைந்திருந்தால் போதுமானது.

அதாவது, ஒரு நாடாளுமன்றம் கூடுவதற்குப் போதுமான கோரத்திற்குரிய நாடாளுமன்ற பிரதிநிதிகளான இருபது பேர் பிரசன்னமாகி இருக்கும் ஒரு கூட்டத்தொடரில் (அதுவும் கோரம் பற்றி யாரும் அன்றைய அமர்வில் கேள்வியெழுப்பாவிட்டால், கோரம் பற்றி கவனம் கொள்ளப்படமாட்டாது) நடாத்தப்படும் வாக்கெடுப்பில் குறித்த சட்டமூலத்திற்கெதிராக அளிக்கப்படும் வாக்குகளை விட, ஒரு வாக்கு அதிகமாக ஆதரித்து கிடைத்தால் அந்தச்சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கான அனுமதியளிக்கப்பட்டதாக கொள்ளப்படும். அதன் பின்னர் சட்டமாவதற்கு சபாநாயகர் கையெழுத்திட்டவுடன், சட்டம் அமுலாகும் தினம் எனக்குறிப்பிடப்படும் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும்.

ஆகவே,  இன்றைய நாடாளுமன்றத்தில் இச்சட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்மதத்துடன் வருமாயின், மஹிந்த – கோட்டாபய அணியினரின் கடைக்கண்பார்வை ஒன்றே நிறைவேற்றப் போதுமானது. இது முஸ்லிம் சமூகம் ஊன்றிக் கவனிக்க வேண்டியவொரு நிலையாகும்.

இன்று நடைமுறைமையிலிருக்கும் முஸ்லிம் விவாகம், விவாகரத்துச்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டுமா? அல்லது திருத்தம் தேவையே இல்லையா? என்று விவாதிப்பது, கலந்துரையாடுவதென்பது ஒரு பாரிய அச்சுறுத்தலுக்குரிய விடயமல்ல. ஏனெனில், அது முஸ்லிம் குடிமைச்சமூகத்தின் ஆலோசனைகள், உலமாக்களின் அபிப்பிராயங்கள் திரட்டப்பட்டு நமது நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு தீர்வாக வரக்கூடிய சாத்தியம் கொண்டது.

ஆனால், முற்றாக இல்லாமற்செய்வதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சியென்பது முஸ்லிம் சமூகத்தின் கைகளுக்கப்பாலான அதிகாரத்தின் வலிமையுடன் கூர்மைப்படுத்தப்படும் ஒன்று என்பதினால் அது மிகவும் பேரபாத்தானது.

அந்த வகையில், அகப்பட்ட ஒன்றாகவே ஐக்கிய தேசியக்கட்சி சார்பான நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரரின் அண்மைய முஸ்லிம் விவாகம், விவாகரத்துச்சட்டம் குறித்தான வர்த்தமானி அறிவித்தல் வெளிப்பட்டிருக்கின்றது. ஆதலால், இதனையொரு சதாரண விடயமாகக் கருதியோ, இன்றைய நடைமுறை நாடாளுமன்றத்தில் சட்ட மூலங்களை நிறைவேற்றும் முயற்சிகள் எதுவும் எதிர்வரும் மார்ச் 01ஆம் திகதி வரை நடைபெறாதென உறுதியாக நம்பியிருப்பதை விடவும், முளையிலேயே கிள்ளியெறிவது குறித்து சிந்திப்பது தான் முஸ்லிம் சமூகத்திற்கு மிகுந்த ஆரோக்கியங்களைத் தரக்கூடியதென்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.

முஸ்லிம் விவாகம், விவாகரத்துச்சட்டம் முற்றாக நமது நாட்டிலிருந்து அகற்றப்படல் வேண்டுமென்று யாரும் பேசக்கூடாது மட்டுமன்றி, அவ்வாறான நிலை தோற்றுவிக்கப்பட்டால் அதற்கெதிராக முஸ்லிம் சமூகம் உரத்து குரல் கொடுத்து எதிர்க்க வேண்டிய கடமைப்பாடும் பொறுப்பும் நமக்கிருக்கிறதென்பதை நமது நாட்டின் மிக உயர்ந்த சட்ட அந்தஸ்துக்குரிய அரசியலமைப்பு எடுத்துக்காட்டுகின்றது. இதனை பின்வரும் அரசியலமைப்பின் வாசகங்களிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

உறுப்புரை 9. ‘இலங்கைக் குடியரசில் பௌத்த மதத்துக்கு முதன்மைத்தானம் வழங்கப்படுதல் வேண்டும் என்பதோடு, அதற்கிணங்க 10ஆம், 14(1)(உ)ஆம் உறுப்புரைகளால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை எல்லா மதங்களுக்கும் காப்புறுதி செய்யும் அதே வேளையில், பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தலும் வேண்டும்’ (ஆதாரம்: இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு. அத்தியாயம் 2.)

உறுப்புரை 10. ‘ஆளொவ்வொருவரும் தான் விரும்பும் மதத்தை அல்லது நம்பிக்கையை உடையவராயிருத்தற்கான அல்லது மேற்கொள்ளுதற்கான சுதந்திரமுட்பட, சிந்தனை செய்யும் சுதந்திரம், மனச்சாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம், மத சுதந்திரம் என்பவற்றுக்கு உரித்துடையவராதல் வேண்டும்’. (ஆதாரம்: இலங்கை சனநாயக சோசலிசக்குடியரசின் அரசியலமைப்பு அத்தியாயம் 03)

உறுப்புரிமை14(1)(உ). ‘தனியாக அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து, பகிரங்கமாகவேனும் அந்தரங்கமாகவேனும் தனது மதத்தையோ அல்லது நம்பிக்கையையோ வழிபாட்டிலும், அனுசரிப்பிலும், சாதனையிலும், போதனையிலும் வெளிக்காட்டுவதற்கான சுதந்திரம்’. (ஆதாரம்: இலங்கை சனநாயக சோஷலிசக்குடியரசின் அரசியலமைப்பு அத்தியாயம் 03).

இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில், முஸ்லிம் விவாவகம், விவாக ரத்துச்சட்டம் என்பது ஒரு முஸ்லிமுக்கு அவன் பின்பற்றும் இஸ்லாமிய மதத்தின் வழியிலுள்ள ஒரு வாழிபாடுடன் தொடர்புபடுகின்றது. திருமணம் புரிவது, அதிலிருந்து விடுபடுவதென்பது இஸ்லாத்தின் வணக்க வழிபாட்டுடன் நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகையால், அதனை உரிய முறைப்படி செய்தால் தான் மத வழிபாட்டை சரியாக அனுஷ்டித்ததாக அமையும்.

அப்படியாயின், முஸ்லிம் விவாகம், விவாகரத்துச்சட்டம் மதத்துடன் சம்பந்தப்பட்டது என்பதினால், அது மதக்கடமையை சாருவதினால் மதச்சுதந்திர பாதுகாப்புக்குட்பட்டு விடுகின்றது. அதனை முற்றாக அகற்றுவதற்கு எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணான கோரிக்கை என்றாகி விடுகின்றது. ஆகையால், அகற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையை அரசாங்கம் அனுமதிக்கக்கூடாத பொறுப்பும் கடப்பாட்டிற்கும் உரித்துப் பெறுகிறது.

இதனால் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர் தனி நபராக கொண்டு வரும் முஸ்லிம் விவாகம், விவாகரத்து சட்டத்தை முற்றாக அகற்றுவதற்கு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் எதிர்த்து சட்டத்தின் துணையோடு போராடியேனும் நிலைநாட்டத் துணிவது நமது உரிமைத்துவத்திற்கு உட்பட்ட ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.

ஆகையால், முஸ்லிம் அரசியல் களத்தில் இதற்கான எதிர்ப்புக்களை முறையாகப்பதிவு செய்வதுடன், அதனை நடைமுறைக்கு வராது உடனடியாக தடுப்பதும் நம்மீது கடமையான ஒன்றென்பதையும் புரிந்து செயற்படுவோமாக.



Comments are Closed