Main Menu

பின்தங்கியுள்ள வர்த்தகப்பிரிவு முன்னேற்றத்துக்கு பாக்கீர் ஆசிரியர் பயன்படுத்தப்பட வேண்டும்

ஓட்டமாவடி அஹ்மட் இர்ஷாட்
கல்குடாவில் பிறந்து மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமல்லாது, தேசிய ரீதியாக உயர்தர வர்த்தகப்பிரிவு மாணவர்களுக்கு பொருளியல் கற்பிக்கும் ஆசிரியர்களில் பாக்கீர் ஆசிரியர் விரல் விட்டு எண்ணக்கூடிய திறமையானவர்களில் ஒருவராகும்.

மிகத்திறமையாகக் கற்பிக்கும் பாக்கீர் ஆசிரியரை கல்குடாவிலுள்ள உயர்தர வர்த்தகப்பிரிவு மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளத் தவறுவதனால் காத்தான்குடி, மட்டக்களப்பு, ஏறாவூர் மட்டுமல்லாமல், நாடு தழுவிய ரீதியில் தமிழ் மொழியில் பரீட்சைக்குத்தோற்றுகின்ற வர்த்தகப்பிரிவு மாணவர்களின் அடைவுகளைப்பார்க்கும் பொழுது கல்குடாவிலுள்ள மாணவர்களின் அடைவுகள் பின் தங்கிய நிலையிலே காணப்படுவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருகின்றதென்பதனை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

இம்முறை உயர்தர வர்த்தகப் பிரிவின் பரீட்சை முடிவுகளைப் பார்க்கின்ற பொழுது, மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏறாவூர்ப் பிரதேசங்களில் பரீட்சைக்குத்தோற்றிய மாணவர்களில் பொருளியல் பாடத்தில் ஏ அடைவினைப்பெற்ற மாணவர்கள் பாக்கீர் ஆசிரியரிடம் பொருளியல் கற்ற மாணவர்களாகவும், குறித்த பாடத்தில் அதிகப்படியான அடைவுகளைப் பெற்ற மாணவர்களாகவுமே காணப்படுகின்றனர்.

கல்குடாவில் விஞ்ஞான, கணிதப் பிரிவுகளில் அண்மைக்கால அடைவுகளுடன் ஒப்பிடும் பொழுது, வர்த்தகப்பிரிவானது, மிகவும் பிந்தங்கிய நிலையிலே இருந்து வருகின்றது. இதற்கு பாக்கீர் ஆசிரியரைப் போன்றவர்கள் கல்குடா மாணவர்களுக்கு பொருளியல் கற்பிக்காமையும், குறித்த வர்த்தகப்பிரிவில் கற்கின்ற மாணவர்களுக்கு பாக்கீர் ஆசிரியரைப் போன்ற அனுபவம் வாய்ந்த திறமையாக கற்பிக்கும் ஆசிரியர்களின் மேலதிக ஆலோசனைகளும் வழி நடாத்தல்களும் கிடைக்காமையும், அதற்கு பல கோணங்களிலிருந்து தடைகள் போடப்படுகின்றமையும் ஒரு காரணமென்பதில் மாணவ சமூகத்திடம் மாற்றுக்கருத்திருக்க வாய்ப்பில்லை.

மாணவர்களுக்குகாகன மேலதிக வகுப்புக்கள், ஆலோசனைகள், வழிநடாத்தல்கள் என வருகின்ற பொழுது வியாபார நோக்கத்தினை மட்டும் கருத்திற்கொண்டு செயற்படுகின்றவர்கள் தங்களுக்கிடையில் இருக்கின்ற போட்டி, பொறாமைகளைத் தூக்கி வீசி விட்டு கல்குடா மாணவ சமூகம் எமது பிள்ளைகள் என்ற உயரிய நோக்கத்துடன் செயற்பட தங்களை மாற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

மேலும், மேற்கூறியவர்களைப் போன்றவர்கள் மாணவர்களுடைய எதிர்காலம் தொடர்பாகவும், அவர்களுடைய அடைவுகளில் கிடைக்கக்கூடிய அதியுச்ச எதிர்ப்பார்ப்பினையும் கருத்திற்கொண்டு நடுநிலையாகவும், சமூக உணர்வுடனும் செயற்பட வேண்டுமென்ற தார்மீகப்பொறுப்பிலிருந்து தவறி விடக்கூடாதென்பதில் ஆசிரியர் சமூகமும், பாடசாலை நிருவாகங்களும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

ஆகவே, கல்குடாவில் பின்தங்கிய நிலையிலுள்ள வர்த்தகப்பிரிவு மாணவர்களின் அடைவுகளை அதிகரித்துள்ள வேண்டுமாயின், பாடசாலை நிருவாகம், அதிபர்கள், பெற்றோர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், பள்ளிவாயல் சம்மேளனங்கள் ஒருமித்து எமது பிரதேசத்தில் பிறந்த பாக்கீர் ஆசிரியரைப் போன்ற திறமையான அனுபவம் வாய்ந்த ஆசியர்களின் அனுபவங்களையும், அவர்களுடைய வழிகாட்டுதல்களையும் மாணவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதில் முன்னின்று செயற்பட முன்வர வேண்டுமென்பது எனது கருத்தாகவுள்ளது.



Comments are Closed