Main Menu

எட்டாயிரம் ஏக்கர் வேளாண்மைச்செய்கை கைவிடப்பட்டுள்ளது – வாழைச்சேனை கமநல சேவை பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.ரசீட்

இந்த செய்தியைப் பகிர்க >>>

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு காரணமாக வாழைச்சேனை கமநல சேவைப் பிரிவில் எட்டாயிரம் ஏக்கர் வேளாண்மைச்செய்கை கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக வாழைச்சேனை கமநல சேவை பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.ரசீட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வாழைச்சேனை, கிரான், வாகரை, ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுகளைச்சேர்ந்த விசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு மனமுடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.

மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்து, வாழைச்சேனை கமநல சேவைப்பிரிவில் அணைக்கட்டுக்கள் சில உடைப்பெடுத்த நிலையில், விவசாய நிலங்கள் முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்தமையினால் பொத்தானை அணைக்கட்டு இருபத்தைந்து அடியில் உடைப்பெடுத்தமையினால் பொத்தானைப் பிரதேசத்தில் ஐயாயிரம் விவசாய நிலங்கள் முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்தமையினால், எழுநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மையை முற்றுமுழுதாக இழந்த நிலையிலும், இதன் காரணமாக பெற்றுக்கொண்ட கடன் தொகையை எவ்வாறு செலுத்துவதென்ற கவலையிலும் காணப்படுகின்றது.

வாழைச்சேனை கமநல சேவைப்பிரிவில் பெரிய, சிறிய நீர்பாசனக்குளங்கள், மாதுறு ஓயா வடிச்சல் என்பவற்றை நம்பி விவசாயச்செய்கையில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் தங்களது ஜீவனோபாய தொழில் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தின் காரணமாக வாழைச்சேனை கமநல சேவைப் பிரிவில் எட்டாயிரம் ஏக்கர் விவசாயச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதில் ஆற்றோரமாகவுள்ள விவசாயச் செய்கையில் ஆறாயிரம் ஏக்கரும், மண் வார்ப்புக் காரணமாக இரண்டாயிரம் ஏக்கரும் பாதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை கமநல சேவை பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.ரசீட் தெரிவித்தார்.

அத்தோடு, மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்தமையினால் அணைக்கட்டுக்கள் உடைபெடுத்தமையின் காரணமாகவே பல விவசாய நிலங்கள் மண் வார்க்கப்பட்டு விவசாயச் செய்கை முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாக வாழைச்சேனை கமநல சேவை பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.ரசீட் மேலும் தெரிவித்தார்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக கதிர் வரும் நிலையில் காணப்பட்ட வேளாண்மைகளின் நெல் வீரியம் குறைந்த நிலையும், பதர் தன்மையுமாகக் காணப்படுகின்றது. அத்தோடு, சில வேளாண்மைகளில் நோய்த்தாக்கம் காணப்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலான விவசாயிகள் தனவந்தர்களல்ல. விவசாயத்தினை நம்பி பல இடங்களில் கடன் பெற்று விவசாயத்தில் கிடைக்கும் பணத்தில் கடனை மீளச்செலுத்தி தங்களது குடும்பச்செலவுகளுக்கு எடுத்து தங்களது வாழ்க்கையை நடாத்தி வருகின்றனர்.

ஆனால், நாங்கள் பல இடங்களில் கடன் பெற்று விவசாயத்தினை மேற்கொண்டு வந்த நிலையில், அண்மையில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தின் காரணமாக எங்களது விவசாயச்செய்கை முற்றாகப் பாதிக்கப்பட்டதால் நாங்கள் பெற்ற கடனைத்திரும்ப செலுத்துவதில் பாரிய கஷ்டத்தினை எதிர்நோக்கி வருகின்றோம்.

விவசாயத்தினை மாத்திரம் நம்பி வாழும் எங்களது நிலைமை இவ்வாறுள்ளதால் எங்களது குடும்ப உறவுகள் வாழ்வதற்கு பெரும் கஷ்டமாக நிலையிலுள்ளது. விவசாயத்திற்குட்பட்ட கடனை அடைப்பதா? அல்லது எங்களது குடும்ப வாழ்க்கைச் செலவுக்கு மீண்டும் கடன் பெறுவதா? என்ற கவலையில் விவசாயிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.

அது மட்டுமல்லாது, தங்களது விவசாய நிலம் தற்போது விளையாட்டு மைதானம் போன்று மணலால் சூழ்ந்து வெட்டையாகவுள்ளதாகவும், மீண்டும் விவசாயச் செய்கை மேற்கொள்வதாயின், வயல் நிலத்தினுள் காணப்படும் மண்ணை அகழ்வு செய்த பின்னர் தான் விவசாயம் செய்ய முடியும்.

வயலினுள் காணப்படும் மண்ணை அகழ்வதற்குக்கூட தங்களிடம் தற்போது பணமில்லை. இதனை நிவர்த்தி செய்வதற்கு தங்களால் முடியுமா? என்ற கேள்விக்குறியில் உள்ளோம். இதனை எவ்வாறு நிவர்த்தி செய்ய முடியுமெனக் கேள்வி கேட்கின்றனர்.

எனவே, மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தற்போதைய ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞானபத்தில் விவசாயிகளுக்கும் முன்னுரிமை வழங்கியிருந்ததற்கிணங்க பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குரிய நஷ்டயீட்டினை வழங்க முன்வர வேண்டும்.

ஆகவே, இந்த விடயத்தில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர், சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள், அரச அதிகாரிகள் அனைவரும் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளுக்கு நஷ்டயீட்டினை உரிய முறையில் நியாயமாக வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்ட விவசாயிகள் கேட்டுக் கொள்கின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed