Main Menu

தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களிப்பதால் எந்தப்பயனும் இல்லை -எஸ்.ஜெயானந்தமூர்த்தி

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்
தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு மீண்டும் வாக்களிப்பதன் மூலம் அவர்களை கோடீஸ்வரனாக மாற்றுவீர்களே தவிர, உங்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாதென தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார்.

வாழைச்சேனை கல்மடு பிரதேசத்திலுள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களுக்கான அரசியல் விழிப்புணர்வுக்கூட்டம் கல்மடு பிள்ளையார் ஆலய முன்றலில் சனிக்கிழமை நடைபெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திறமையான, நேர்மையான நிருவாகத்தினைக் கொண்டு செல்கின்றார். நாட்டை திறம்பட வளர்க்க வேண்டுமென்பதில் கவனமாகவுள்ளார். இதில் நீங்கள் சற்றுச்சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

நான் 2004ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தான் பாராளுமன்றம் சென்றவன். இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள், தலைவர்களின் தன்னிச்சையான முடிவுகள் போன்ற காரணமாக இவர்களுடனிருந்து பிரிந்து சென்றேன். சம்பந்தன் தானே தலைவன், தானே தீர்மானமெடுக்க வேண்டுமென்ற நிலைப்பாடிருந்தது.

இவ்வாறான செயற்பாடுகளால் ஏற்பட்ட முரண்பாட்டின் மூலம் விலகி தற்போது கருணா அம்மானின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியில் இணைந்து செயற்படுகின்றேன். மீண்டும் மீண்டும் பிழையை விடாதீர்கள். மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன் மூலம் அவர்களை கோடீஸ்வரனாக மாற்றுவீர்களே தவிர, உங்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை.

எதிர்வரும் காலத்தில் வரவுள்ள பராளுமன்றத்தேர்தலில் நீங்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். தற்போது எமது தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சிற்கு பெரும்பாலான ஆதரவு பெருகி வருகின்றது. நாங்கள் எந்த ஊழலுமில்லாமல் சிறந்த முறையில் மக்களுக்குச்சேவையாற்றத் திட்டமிட்டுள்ளோம்.

எதிர்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்கே போய் நிற்குமென்பதை நீங்கள் நிச்சயமாகப் புரிவீர்கள். நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டிய நிலைமையுள்ளது. நல்ல சிறந்தவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

நாங்கள் இம்முறை பாராளுமன்றம் சென்று அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுக்களைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் சேவை செய்வோம். அத்தோடு, யோகேஸ்வரன் போன்றவர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு இந்த இடத்திற்கும் வருவோம் என்றார்.

கட்சி உறுப்பினர் ஆர்.கமலதாசன் தலைமையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), வாகரைப்பிரதேச சபை உறுப்பினர் எஸ்.துரைராஜசிங்கம், கட்சிப்பிரதிநிதிகள், உறுப்பினர்கள், பொது மக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed