Main Menu

ஐக்கிய தேசியக்கட்சியில் சங்கமித்துள்ள ஹக்கீமும் றிஷாத்தும் மக்களை ஏமாற்றாது ஒதுங்கிட வேண்டும் -ஐ.எம்.ஹாரிப்

எஸ்.எம்.எம்.முர்ஷித்
முஸ்லிம்களின் திருமணம் மற்றும் விவாகரத்துச்சட்டங்களை நீக்க வேண்டுமென்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரரினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோறிக்கையானது தொடர்ந்தும் எமது முஸ்லிம் சமூகத்தினை உதாசீனம் செய்வதனையே காண்பிக்கின்றதென ஐக்கிய சமாதானக்கூட்டமைப்பின் பிரசாரச்செயலாளர் ஐ.எம்.ஹாரிப் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ரத்ன தேரர், விஜயதாச ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோர் தெரிவித்த கருத்து தொடர்பில் வெளியிட்டு ஊடக அறிக்கையிலே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தனது ஊடக அறிக்கையில் தெரிவிக்கையில்-
இவ்வாறு எமது முஸ்லீம் சமூகத்துக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து இன்னல்களுக்கும் அவமானங்களுக்கும் எமது சமூகத்தினை தொடர்ந்தேர்சையாக ஏமாற்றி வரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதுர்தீனும் இவர்களது பங்காளிகளுமே பொறுப்புக்கூற வேண்டும்.

பாதுகாப்பு தொடர்பில் முக்கிய பிரிவுக்கான பொறுப்புவாய்ந்த அதிகாரியாக முஸ்லீம் அதிகாரியின் பெயர் முன்வைக்கப்பட்ட போது, நாட்டில் முஸ்லீம் பயங்கரவாதம் காணப்படும் இச்சூழ்நிலையில், முஸ்லீம் ஒருவருக்கு இப்படியொரு பொறுப்புள்ள பதவியினை வழங்கக்கூடாதென பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்தினையும் நாம் சற்று கவனத்திற்கொள்ள வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் மூலம் மர்ஹும் அஷ்ரபினால் 12.5 வீதத்திலிருந்து 5 வீதமாக குறைத்துப்பெறப்பட்ட வெட்டுப்புள்ளியினைத்தடை செய்து மீண்டும் பழைய நிலைக்கு வெட்டுப் புள்ளியினைக் கொண்டு செல்ல வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையினையும் நாம் சற்று சிந்திக்க வேண்டும்.

இம்மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்றத்துக்குச் சென்ற ஜக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்களாவார்கள். அண்மையில் முஸ்லீம்களின் வணக்கஸ்தலத்துக்கு அருகில் புத்தரின் சிலையினை வைத்தவர் என ஜக்கிய தேசியக்கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதும் ஒரு முக்கியமான விடயமாகும்.

அரசியல் காரணங்களுக்காகவும் வேறு சில தேவைகளுக்காகவும் காலத்துக்காலம் ஏதாவதொரு பொய்யான காரணத்தைக் கூறி முஸ்லீம் நாடுகளைத் தாக்குவது அமெரிக்காவுக்கு ஒரு தொழிலாகக் காணப்படுவது போல, எமது நாட்டிலும் ஜக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரத்ன தேரர், விஜயதாச ராஜபக்ச, சரத் பொன்சேகா மற்றும் இன்னும் சிலருக்கும் முஸ்லீம்களை வைத்து தங்களது காரியங்களை அல்லது அரசியலினைச் செய்வது ஒரு தொழிலாகவே போய் விட்டது.

12.5 வீதத்திலிருந்து 5 வீதமாகக் குறைக்கப்பட்ட வெட்டுப்புள்ளியினை பழைய படி மாற்றியமைக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு தனது தகப்பனினால் கொடுக்கப்பட்ட இவ்வெட்டுப்புள்ளி விடயத்தினைப் பாதுகாக்கும் வகையில் குரல் கொடுக்காது சஜித் பிரேமதாச ஒதுங்கிக்கொண்டதையும் நாம் யோசிக்க மறந்து விடக்கூடாது.

இன்று இவர்கள் தான் முஸ்லீம்களை கடுமையா நசுக்கும் வகையில், மிகக்கொடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கின்றார்கள் அல்லது செயற்படுகின்றார்கள் என்பதனை மிகத்தெளிவாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று முழுமையாக ஜக்கிய தேசியக்கட்சியாக மாறி விட்ட ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதுர்தீனும் எமது முஸ்லீம் சமூகத்துக்கெதிராக செயற்படும் இப்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கெதிராக எடுத்த நடவடிக்கைகள் என்ன? அல்லது இவர்களை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கும் வகையில் ஜக்கிய தேசியக்கட்சியினால் எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகள் என்ன? என்பவைகளைப்பற்றி ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதுர்தீனும் எமது சமூகத்துக்கு தெளிவூட்ட வேண்டும்.

ஆனால், இவ்வாறு இவர்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்க முடியாத ஜக்கிய தேசியக்கட்சியுடன், ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதுர்தீனும் இவர்களது பங்காளிகளும் தொடர்ந்து தொங்கிக்கொண்டு எமது சமூகத்துக்கு எதுவுமே செய்யாத ஜக்கிய தேசியக்கட்சியுடன் பயணிக்க வேண்டியதன் அவசியத்தையும் மக்களுக்குத் தெளிவூட்ட வேண்டும்.

தற்போது காணப்படுகின்ற இப்பிரச்சனைகள் தொடக்கம் ஒலுவில் துறைமுகம், ஒலுவிலில் அமைப்பதாகச் சொன்ன “தாருஸ்ஸலாம்” கட்டடம், தொழிற்பேட்டை மற்றும் இரண்டு கிழமைகளில் அகற்றுவதாக சொன்ன மாயக்கல்லி மலை சிலை விவகாரம் வரைக்குமான அனைத்து விடயங்களுக்கும் ஒரு தீர்வினைக்கண்டு விட்டு அல்லது இவர்கள் தற்போது குடியிருக்கும் ஜக்கிய தேசியக்கட்சியுடன் பேசி, சாதகமானதொரு முடிவினைப்பெற்று எமது சமூகத்துக்கு வழங்கிய பின்னர் தான் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதுர்தீனும் இவர்களது பங்காளிகளும் நடைபெறப்போகின்ற அனைத்து தேர்தல்களுக்கும் வாக்குக்கேட்டு எமது மக்கள் முன்வர வேண்டும். இல்லையேல், இனியும் எமது மக்களை ஏமாற்ற முடியாதென்பதனைப் புரிந்து கொண்டு ஒதுங்கி விட வேண்டுமென்பதே இன்றைய யதார்த்தமான எமது சமூகத்தின் தேவையாகும்.



Comments are Closed