Main Menu

கல்குடா நண்பர்கள் வட்டம் அமீர் அலியுடன் கைகோர்க்க வேண்டும்.

இந்த செய்தியைப் பகிர்க >>>

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்.
கல்குடாவிற்கு நண்பர்கள் வட்டம் என்றால் என்ன? அதனை எவ்வாறு நடாத்துவது? அதில் எவ்வாறான வெற்றிகளை காண்பது? போன்ற விடயங்களை ஏனைய நண்பர்கள் வட்டங்களுக்கு கற்றுக்கொடுத்த அமைப்பாக 1992ம் ஆண்டைய O/L மாணவர்களை உள்ளடக்கிய நண்பர்கள் வட்டம் கல்குடாவில் இயங்கி வருகின்றது.

சமூகத்துடன் பின்னிப்பிணைந்த அமைப்பு என்ற வகையில் எதிர்கால சந்ததியினதும், எமது பிள்ளைகளினதும் சுபீட்சமான எதிர்காலத்தினைக் கருத்திற்கொண்டு கல்குடாவின் அரசியல் தலைமையான அமீர் அலியுடன் கைகோர்க்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தேவையில் வட்டத்திலுள்ள நண்பர்கள் பயணிக்கின்றார்கள் என்பதன் தெளிவு அவர்களின் கைகளில் கிடைக்கப்பெற்றுள்ளதென்ற சாதகமான செய்திகள் பரவலாக உலா வந்து கொண்டிருப்பது மகிழ்ச்சிகரமான விடயமாகவே பார்க்கப்படுகின்றது.

கல்வித்துறையில் பல்துறை சார்ந்தவர்களை உள்ளடக்கியதாகவும், எல்லோருக்கும் முன்மாதிரியான அமைப்பாகவும் கல்குடாவில் இயங்கி வரும் 1992ம் ஆண்டைய நண்பர்கள் வட்டமானது, சமூகச்செயற்பாடுகளுக்கப்பால் கல்குடாவின் அரசியலில் மிகப்பெரும் தாக்கத்தினைச் செலுத்தும் ஒர் அமைப்பாகச் செயற்படுகின்றதென்பதானது, வட்டத்தினுடைய கடந்த காலச்செயற்பாடுகளில் தெளிவாகப் பார்க்ககூடிய விடயமாகவுள்ளது.

மேலும், பெருந்தொகையான பொருளாதார பங்களிப்புக்களை அதன் உறுப்பினர்கள் மூலமாக மாதாந்த சேகரிப்பாகத்திரட்டி, அதனை வியாபார முதலீடுகளில் வைப்பிலிட்டு வருவதுடன், அதன் மூலம் கிடைக்கும் இலாபத்தின் ஒரு பகுதியினை சமூக சேவைகள், வட்டத்திலுள்ள நண்களுக்கான மாதாந்தச்சேமிப்பு எனப்பலதரப்பட்ட சேவைகளைச்செய்து வரும் குறித்த வட்டமானது, கல்குடாவின் கல்வி, கலாசாரம், அரசியல், மார்க்க விடயங்கள், இளைஞர்களுக்கான வழிகாட்டல் என பலதரப்பட்ட சமூகம் சார்ந்த விடயங்களில் எல்லோருக்கும் முன்மாதிரியான நேரடிததொடர்புகளில் பெரும் பங்கினை வகித்து வரும் அமைப்பாக வெற்றி கண்டு வருகின்றது.

அந்த வகையில், கடந்த 2011ம் ஆண்டைய பிரதேச சபைத்தேர்தலில் தாங்களும் கல்குடா அரசியலில் தாக்கம் செலுத்த வேண்டுமென்ற நோக்குடன், நண்பர்கள் வட்டம் சார்பாக ஏ.எல்.ஜுனைட் நளீமி என்பவரை கல்குடாவின் தலைமை அமீர் அலியுடனான உடன்பாடு அரசியலுக்காகக் களமிறக்கியதுடன், அத்தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளையும் நளீமிக்கு பெற்றுக்கொடுத்ததில் வெற்றி கண்டு கல்குடா அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளில் தங்கள் அமைப்பும் ஒன்று என்பதனை நிரூபித்துக் காட்டியது.

அதற்குப்பிற்பாடு நேரடியாகவே பாராளுமன்றம் என்ற நோக்ககோடு வட்டத்திலிருந்த கணக்கறிஞர் றியாலை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக களமிறக்கி அமீர் அலி எனும் ஆளுமையுடன் மோத வைத்தது. அத்தேர்தலில் அமீர் அலி வெற்றியடைந்திருந்தாலும், கல்குடாவில் பல ஆண்டு காலமாக வியாபாரமக்கப்பட்டு சிதறிக்காணப்பட்ட முஸ்லிம் காங்கிரஸிலிருந்த போராளிகளை ஒரே குடையின் கீழ் சேர்த்து 9000க்கும் அதிகமான வாக்குகளை கணக்கறிஞர் றியால் பெற்றுக்கொள்வதற்கு பாரிய பங்கினை நண்பர்கள் வட்டம் வழங்கியதென்ற உண்மையினை கல்குடா அரசியல் செயற்பாட்டாளர்களினால் மறுத்துரைக்க முடியாத விடயமாகவே நான் பார்க்கின்றேன்.

அத்தோடு நின்று விடாமல், கடந்த 2017ம் ஆண்டைய வட்டார பிரதேச சபைத்தேர்தலில் தங்கள் வட்டத்தில் பல வருடங்களாக தலைவராகச் செயற்பட்டு வந்த விஜிதா அன்வர் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கல்குடாவின் அமைப்பாளரும் உயர்பீட உறுப்பினருமான றியாலுடைய ஆசீர்வாதத்தினால் ஓட்டமாவடி பிரதேச சபைக்கான தவிசாளர் வேட்பாளராக களமிறக்கப்பட்ட பொழுது, அன்வருக்கு நேரடியாக நண்பர்கள் வட்டம் அரசியல் களத்தில் குதிக்காவிடினும், மறைமுகமாக செயற்படுகிறோம் எனும் திரைக்குப் பின்னாலிருந்தவாறு நேரடியாகக் களத்தில் குதித்து செயற்படுவதென்ற நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கமைப்பிலேயே செயற்பட்டு அன்வரின் வெற்றிக்கு வழியமைத்திருந்தது.

இவ்வாறு ஏதோவொரு வகையில் கல்குடாவின் அரசியலில் தாக்கத்தினைச்செலுத்தும் அமைப்பாகவுள்ள நண்பர்கள் வட்டத்திலுள்ள அதிகளவான நண்பர்கள் எதிர்கால கல்குடாவின் அரசியலானது குட்டையைக் கிளப்பி மீன்பிடிக்க நினைக்கும் வெளியூர் அரசியல்வாதிகளினால் பிரித்தாளப்பட்டு விடக்கூடாதென்பதிலும், கடந்த கால கல்குடாவின் அரசியல் வரலாறு கற்பித்துள்ள பாடத்திலிருந்தும் எதிரே வருகின்ற பாராளுமன்றத்தேர்தலில் தெளிவான முடிவில் உள்ளதாகவே வட்டத்துக்குள்ளும், வட்டத்துக்கு வெளியாலும் அலசப்படும் கல்குடா சமூகத்துக்கு மேலும் நன்மை சேர்க்கும் விடயமாக மாற்றமடைந்துள்ளது.

இந்நிலையில், பல வருட அரசியல் ஆளுமையுடன் மீண்டும் பாராளுமன்றத்தேர்தலில் களமிறங்க இருக்கும் கல்குடாவின் அரசியல் தலைமையான அமீர் அலியின் தேவைப்பாடு எதிர்காலச்சமூகத்த்துக்கு எந்த வகையில் அமையப்போகின்றதென்பதில் தெளிவான முடிவோடு நண்பர்கள் வட்டத்திலிருக்கும் அதிகளவான உறுப்பினர்கள் அமீர் அலியுடன் கைகோர்த்து செயற்பட எடுத்திருக்கும் முடிவுகள் கல்குடா சமூகத்துக்குத் தேவையானதும், மிகச்சரியானதுமான முடிவென்பதற்கப்பால் நண்பர்கள் வட்ட நிருவாகமானது, சில கருத்து வேறுபாடுகளை புறந்தள்ளி வைத்து விட்டு அதற்கான பூரண ஒத்துளைப்பினை பகிரங்கமாக உடன்பாட்டு அரசியல் மூலமாக அறிவிக்குமாயின், அவ்வாறான அறிவிப்பும் அவர்களுடைய முடிவும் நண்பர்கள் வட்டம் கல்குடா அரசியலில் எழுதிய அழிக்க முடியாத வரலாறாகப் பதியப்படுமென்பதே உண்மை.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed