Main Menu

அமெரிக்க விமானங்களுக்கு ஈரான் வைத்துள்ள பொறி என்ன?

முகம்மத் இக்பால் -சாய்ந்தமருது
ஒரு இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடாத்தி விட்டு எவ்வாறு தப்பித்துச்செல்லலாமென்றே கொரில்லாப்போராளிகள் முதலில் திட்டமிடுவார்கள். அவ்வாறு தப்பிச்செல்ல வாய்பில்லாத தளங்களைத் தாக்குவதன் மூலம் போராளிகளை இழக்க முற்படமாட்டார்கள். இது யுத்த தந்திரங்களிலொன்று.

அமெரிக்கா தாக்குதல் நடாத்தினால், தாக்கப்படுகின்ற நாடுகள் தற்காப்புத்தாக்குதலில் மாத்திரமே ஈடுபடுவது வழமை. ஆனால், ஈரானானது அமெரிக்காவின் இலக்குகளைத்தேடிச்சென்று தாக்குதல் நடாத்தியுள்ளது. இது அமெரிக்கா என்ற வல்லரசுக்கு தலைகுணிவை ஏற்படுத்தியுள்ளது.

அப்படியிருந்தும், தனது அதி நவீன F35 விமானங்கள், சக்திவாய்ந்த குண்டுகள் மூலமும் உலகை அச்சுறுத்தி வருகின்ற அமெரிக்காவானது, ஈரானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தாமல் வழமைக்கு மாறாக சமாதானம் பேசிக்கொண்டு பின்வாங்கியதேன்?

ஈரான், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் நீண்ட காலமாக முறுகல் நிலையிருந்தாலும் முதலில் ஈரான் மீது வலிந்து கை வைத்தது அமெரிக்கா தான். அவ்வாறாயின், ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு வழங்கியிருந்தால், அமெரிக்காவின் இமேஜ் காப்பாற்றப்பட்டிருக்கும். ஈரான் மிகவும் பெரிய நிலப்பரப்பைக்கொண்ட நாடு. அது ஈராக், ஆப்கானிஸ்தான் போன்றதல்ல. இலங்கையின் நிலப்பரப்பைப் போன்று 25 மடங்கு அதிகமானது ஈரானின் நிலப்பரப்பாகும்.

ஈரானின் எல்லை நாடுகளாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அசார்பைஜான், துர்க்மேனிஸ்தான், ஆர்மேனியா, துருக்கி, ஈராக் ஆகிய எட்டு நாடுகளுள்ளது. குறித்த அயல்நாடுகள் அனைத்தும் ஈரானுடன் நல்ல உறவிலுள்ளது. அதாவது, ஈரானைத் தாக்குவதற்கு அமெரிக்காவுக்கு தளம் வழங்குவதற்கோ, தனது யுத்த விமானங்களுக்கு பெற்றோல் நிரப்புவதற்கோ எந்தவொரு நாடும் முன்வராது.

அத்துடன், ஈரானின் இராணுவ கேந்திர நிலைகள், பிரதான ஏவுகணைத்தளங்கள், கட்டளை மையங்கள் அனைத்தும் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய விமான எதிர்ப்பு நிலைகள், சிறியளவிலான விமானப்படைத் தளங்கள், குறுந்தூர ஏவுகணைத்தளங்கள் என இராணுவ முப்படை நிலைகளும் ஈரானின் எல்லையைச் சுற்றி வர நூற்றுக்கணக்கில் அமைக்கப்பட்டுள்ளது. .

ஈரானின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளங்களை F35 விமானத்தின் மூலம் தாக்கியழிப்பதென்றால், ஈரான் நாட்டுக்குள் ஆகக்குறைந்தது ஒரு மணித்தியாலத்திற்கு மேல் பறந்து சென்று தாக்குதல் நடாத்தி விட்டு திரும்பி வர வேண்டும். தாக்குதல் நடாத்த விமானத்தில் பயணிப்பதற்கு ஆகக்குறைந்தது ஒரு மணி நேரம் தேவைப்பட்டால், தாக்கி விட்டு திரும்பி வருவதற்கும் அதே நேரம் தேவைப்படும். மொத்தமாக இரண்டு மணி நேரம் ஈரானின் வான் பரப்பில் அமெரிக்க விமானம் பயணிக்க வேண்டியிருக்கும்.

அவ்வாறு இரண்டு மணி நேரம் பயணிக்கும் வரைக்கும் ஈரானின் விமான எதிர்ப்பு ஏவுகணைகளும்,  விமானப் படையினர்களும் சும்மா பார்த்துக்கொண்டிருக்கமாட்டார்கள். நாட்டுக்குள் எதிரி விமானம் உள்நுழைந்தால், அதனை விரட்டிச்சென்று சுற்றி வளைத்து விமானத்தைக் கைப்பற்றும் திறன் ஈரானிடமுள்ளது.

உலகிலேயே அதி நவீன ரக விமானமாகக் கருதப்படுகின்ற தனது F35 விமான தொழில்நுட்பம் சீனா, ரஷ்யா உட்பட எந்தவொரு எதிரி நாட்டுக்கும் கிடைத்து விடக்கூடாதென்பதில் அமெரிக்கா விழிப்பாக இருக்கின்றது.

எனவே தான், ஈரான் வைத்திருக்கின்ற பொறிக்குள் தான் சிக்கி விடக்கூடாதென்றும் அவ்வாறு சிக்கினால், அது உலகளவில் அமெரிக்காவுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்துமென்றும் கருதியதனாலேயே F35 விமானம் மூலம் ஈரானின் கேந்திர நிலைகள் மீது தாக்குதல் நடத்தாமல் அமெரிக்கா பின்வாங்கியது.



Comments are Closed