Main Menu

கல்குடாவிற்கு பெருமை சேர்த்த சர்வதேச இராஜதந்திரி இஸ்ஸத்தீன் மாஸ்டர்

ஓட்டமாவடி அஹ்மட் இர்ஷாட்
மட்டக்களப்பு மாவட்டம்,கல்குடாத் தொகுதி ஓட்டமாவடியை பிறப்பிடமாக,வளர்ப்பிடமாகக் கொண்ட இஸ்ஸத்தீன் மாஸ்டர். சின்ன வாப்பா விதானையார் என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் பாரம்பரியக்குடும்பத்தின் வாரிசான மர்ஹூம் ஷஹாப்தீன் விதானையார் அவர்களின் சிரேஸ்ட புதல்வர் தான் முஹம்மட் இஸ்ஸத்தீன் மாஸ்டர்.

இவர் கடந்த காலங்களில் சிறந்த, ஆளுமைமிக்க மாணவத்தலைவராக, விளையாட்டு வீரராக, பல்வேறு சமூக, சமய நிறுவனங்கள், விளையாட்டுக்கழகங்கள் போன்றவற்றின் தலைவராக, சிறந்த ஆங்கில ஆசிரியராகச் செயற்பட்டவர் என்பதும் கல்குடாத்தொகுதி முஸ்லிம் பிரதேசங்கள் தோறும் பெயர் கூறும் ஆளுமையுமாவார்.

அதன் தொடரில் 87ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வருகையோடு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியின்றி, தெரிவாகிய மர்ஹூம் புஹாரி விதானையார் தலைமையிலான ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதேச சபை உறுப்பினராக முகம்மட் இஸ்ஸத்தீன் மாஸ்டர் தெரிவு செய்யப்பட்டார் என்பதும் வரலாறாகும்.

இப்படி பல்துறைகளில் வீறு நடைபோட்ட முகம்மட் இஸ்ஸத்தீன் மாஸ்டர் தனது திருமணத்தை காத்தான்குடி மண்ணில் தேர்வு செய்து நமது கல்குடா மண்ணிலிருந்து விடைபெற்றாலும், இந்த மண்ணுக்கு தனது அபாரத்திறமைகளால் பெருமை சேர்த்தார்.சேர்த்துக் கொண்டுமிருக்கிறார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு அரசுக்கும்-புலிகளுக்குமிடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது, அதன் தேசிய, சர்வதேச போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினராக முகம்மட் இஸ்ஸத்தீன் மாஸ்டர் நியமனம் செய்யப்பட்டார் என்பது இந்த மண்ணுக்கு பெருமை சேர்த்த ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

தொடர்ந்தேர்ச்சியாக பல்வேறு தேசிய, சர்வதேச அரசு, அரச சார்பற்ற நிறுவனங்களின் களப்பகுப்பாய்வாளராக, கொள்கை வகுப்பாளராக, நகர்த்துனராக என்றெல்லாம் செயற்பட்டார். செயற்படுகின்றார் என்பது முஸ்லிம் சமூகம் சார்பான வகிபாகத்தை வகிக்கிறார் என்பதும் நமது மண்ணுக்கான பெருமையாகும்.

களத்திலும், தளத்திலும் இலைமறைகாயாகவிருந்து பாரிய பணியாற்றும் இம்மண்ணின் சொந்தக்காரன் ஒரு தேசிய, சர்வதேச இராஜதந்திரியாவார் என்பது நமது கல்குடா முஸ்லிம் சமூகம் திரும்பிப்பார்ப்பதற்கு மறந்த அல்லது தெரியாத விடயமாகும்.

எனவே, கல்குடா முஸ்லிம் சமூகம் தங்களது ஆளுமைமிக்க பல்துறை சார்ந்த சமூக இயங்கியல்களைத் திரும்பிப் பார்ப்பதும், பதிவதும் காலத்தின் கட்டாயமும் அடுத்தடுத்த தலைமுறைகள் தெரிந்து படிக்க வேண்டிய வரலாறுமாகும்.

தொடரும்……..வை.எல்.மன்சூர்



Comments are Closed