Main Menu

கல்குடாத்தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் றியாழுக்கு பகிரங்க மடல் -ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

சகோதரர் அவர்களே ..!
நீங்கள் தற்பொழுது கல்குடாவில் கடந்து வந்த ஐந்து வருட கால அரசியல் செயற்பாடுகளில் கல்குடா அரசியல் என்றால் என்ன? மக்களின் நிலைப்பாடு எவ்வாறுள்ளது? என்பது பற்றியும் இன்னபிற செயற்பாடுகள் பற்றியும் நன்கறிந்திருப்பீர்கள் என நினைக்கின்றேன். உங்களுடைய நோக்கமெல்லாம் அமீர் அலியை எப்படியாவது தோற்கடித்து ரவூப் ஹக்கீமின் மனதில் இடம்பிடிப்பதுவாகவே இருந்தது. அதனையொருமுறை தேர்தல் நேரத்தில் என்னிடம் நான் வெற்றியடையாவிட்டாலும் பரவாயில்லை. அமீர் அலியை இப்பிரதேசத்திலிருந்து தோற்கடிக்க வேண்டுமெனக்கூறி அதற்காக உங்களுடைய நியாயங்களை எடுத்துரைத்தீர்கள்.

அதற்குப்பிறகு உங்கள் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் தலைமையினால் தேசியப்பட்டியல் வழங்கப்பட்டதும், கல்குடா மக்களின் மனங்களில் இடத்தினைப்பிடித்து 2020ல் வரும் பாராளுமன்றத்தேர்தலில் வெற்றியடைந்து விடலாமென உறுதிப்படக்கூறினீர்கள். அப்பொழுது நான் இதைத்தான் ரவூப் ஹக்கீம் 2010 இலும் சகோதரர் ஹுசைனிடமும், லெப்பை ஹாஜியிடமும் கூறி அமீர் அலியைத் தோற்கடித்து கல்குடாவின் அரசியலதிகாரத்தினை கேள்விக்குறியாக்கியதுடன், கல்குடா மக்களை அரசியல் அநாதைகளாக்கினார் என உங்களிடம் பதிலளித்து மிகவும் கவனமாகச் செயற்படுங்கள் என்றேன்.

அதற்கு நீங்கள் நான் ஹுசைனை போலவோ அல்லது லெப்பை ஹாஜியை போலவோ ஏமாறவோ, அல்லது ஏமாற்றப்படவோமாட்டேன் என்றும், ஹக்கீம் அவ்வாறு எனக்கு செய்யவுமாட்டார் எனக்கூறினீர்கள். எனது நோக்கமெல்லாம் அமீர் அலியிடமிருந்து கல்குடா மக்களைக்காப்பாற்றி, அமீர் அலியைத் தோற்கடித்து, படித்த இளைஞனின் கையில் அரசியல் அதிகாரத்தினைப் பெற்றுகொடுப்பதாகுமென்று ஆணித்தரமாகக்கூறி உங்கள் பாராளுமன்றத்தேர்தல் கள வியூகங்களுக்கு தயாராகிக் கொண்டிருந்தீர்கள். நானும் இலத்திரனியல் ஊடகங்கள், பத்திரிகைகள், சமூக வலைத்தளங்கள் வாயிலாக கல்குடா சமூகத்திற்கு அறிமுகமில்லாமலிருந்த உங்களையும், உங்களுடைய கருத்துக்களையும் வெளிக்காடியவர்களில் முக்கிய ஒருவராகச் செயற்பட்டேன்.

நடந்தது என்னவென்பதும், அமீர் அலியை நீங்கள் நினைத்தாற்போல் தோற்கடித்தீர்களா? நீங்கள் உங்களுடைய கட்சிக்கு பெற்றுக்கொடுத்த கல்குடாவின் ஆயிரக்கணக்கான வாக்குகள் மூலம் யார் பாராளுமன்ற உறுப்பினரானார்? அதனால் நீங்களும், கல்குடா சமூகமும் அடைந்த நன்மைகள் என்ன? என்பதனை இதுவரைக்கும் நீங்கள் தனிமையில் சிந்தித்ததுண்டா? படித்த இளைஞர் சமூகமொன்று உங்களுக்குப்பின்னால் செயற்பட்டு, உங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற நம்பிக்கை அன்று உங்களுக்கிருந்தது.

ஆனால், அவர்ளுடைய கருத்துக்களை நீங்கள் உள்வாங்குவதில்லை என்ற கருத்து முரண்பாடுகள் அவர்கள் மத்தியிலிருந்தது. உங்களுக்கு தெரியுமோ, தெரியாதோ, வெளிப்படையாக கல்குடாவில் அலசப்படும் ஒன்றாகவுள்ளது. அதில் முக்கியமாக உங்களுடன் ஒரே வகுப்பில் கல்வி கற்ற கல்குடா பிரதேச நண்பர்கள் வட்டத்தினை உள்ளடக்கிய பெரும்பான்மையான நண்பர்களாகும்.

கடந்த பாராளுமன்றத்தேர்தல் மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபைத்தேர்தல் முடிந்த கையோடு உங்களுக்கு நடந்தது என்ன? தவிசாளரை நியமிப்பதில் நீங்கள் நடந்து கொண்ட விதம் எவ்வாறு அமைந்தது? உங்களுக்குப் பின்னாலிருந்த படித்த சமூகம் உங்களை விட்டு ஏன் தூரமானார்கள்? தற்பொழுது உங்களின் நிலை கல்குடாவில் எவ்வாறுள்ளது. அதற்கு முக்கிய காரணமென்ன? இவைகளைப் பற்றியாவது நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா?

படித்த பண்பாளராகக்கருதப்படும் சகோதரர் றியாழ் அவர்களே…!
நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட அரசியல் என்ற பார்வையாக இருந்தாலும் சரி, றவூப் ஹக்கீமுக்கு தான் விசுவாசமாக செயற்பட வேண்டுமென்பதாக இருந்தாலும் சரி, அல்லது நான் கொழும்பு றோயலில் படித்து பல பட்டங்களோடு முதன்மை கம்பனியொன்றில் முக்கியமான பொறுப்பிலிருக்கின்ற கல்குடாவிலுள்ள படித்த எல்லோரையும் விடவும் திறமையானவன் என நீங்கள் கருதினாலும் சரி.!

சமூகத்தின் விடிவிற்காய் தனது தூரநோக்கு சிந்தனையில் பல திட்டங்களைக் கையிலெடுத்து, அதனை தனது இறுதிக்கட்ட அரசியல் காலத்திற்குள் கல்குடா சமூகத்திற்காக நிறைவேற்றிக்கொடுக்க வேண்டுமென்ற தூய சிந்தனையோடு செயற்பட்டு வரும் கல்குடாவின் அரசியல் தலைமையான அமீர் அலியின் அரசியல் ஆளுமையினையும் அனுபவத்தினையும் உங்களின் விடாப்பிடியான செயற்பாடுகளினால் செல்லாக்காசாகி விடலாம்.

அத்தோடு, அவரை 2020ல் வீட்டுக்கு அனுப்பி விடலாமென்ற உங்களுடைய சிந்தனையினை சமூகத்துக்காக நீங்கள் கைவிட்டுச் செயற்பட வேண்டுமென்பது எனது பணிவான வேண்டுகோளாகும். நீங்கள் முன்னெடுக்கின்ற ஒவ்வொரு செயற்பாடுகளும் இந்நாட்டில் முஸ்லிம்கள் வாழுகின்ற இக்கட்டான இக்கால கட்டத்தில் மீண்டுமொருமுறை கல்குடா மக்களை அரசியல் அநாதைகளாக்கும் என்பதனை நீங்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.

நீங்கள் கல்குடாவிலிருந்து பிரிக்கின்ற ஒவ்வொரு வாக்குகளும் அல்லது உங்களுடைய அமீர் அலி மீதான முரண்பாட்டு செயற்பாடுகளெல்லாம் வெளியூர்களிலிருந்து தேர்தல் காலங்களில் கல்குடாவில் குட்டையினைக்கிளப்பி அதில் மீன் பிடிக்க காத்திருப்பவர்களை பாராளுமன்றக்கதிரையில் உட்கார வைத்திடுமென்பதனை நீங்கள் இனியாவது உணர்ந்து செயற்பட முன்வர வேண்டும். கல்குடா சமூகத்தின் மீது உங்களுக்கு பாசம் இருக்குமேயானால், நீங்கள் நிச்சயமாக சில விடயங்களில் சமூகத்துக்காக விட்டுக்கொடுப்புச் செய்வீர்கள்.

உங்களை நாங்கள் படித்தவர், பண்பாளர், இஸ்லாமிய பற்றுள்ளவர் என்ற வகையில் மதிக்கின்றோம். அதற்காக நீங்கள் அரசியலில் தப்பான முறையில் ஒருவருடைய நீண்ட காலத்து சுயநல அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குமைவாகச் செயற்படுகின்ற விடயத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது.

உங்களுடைய செயற்பாடுகள் கல்குடா சமூகத்தினதும் எதிர்கால எமது சந்ததியினரதும் அரசியல் உரிமைகள் மற்றும் இன்னபிற அடிப்படை சமூக அபிவிருந்திச் சிந்தனைகளை இல்லாதொழிக்க அடித்தளமிடுமாயின், நாங்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்புக்கும் மரியாதைக்கும் பலனேதுமில்லாமல் போய் விடும். அதனாலேயே கல்குடா சமூகமும் இன்னுமொரு முறை ஏமாந்து விடக்கூடாதென்பதற்காக இந்த பகிரங்க மடலினை உங்களுக்கு எழுதுவதன் பிரதான காரணமாக இருக்கின்றது.

ஆகவே, நீங்கள் மிகவும் நிதானமாகச் சிந்தித்து உங்களுடைய அரசியல் நகர்வுகளை கல்குடா சமூகத்துக்காக நன்மை பயக்கும் விதத்தில் முன்னெடுக்க வேண்டுமென்பதனை நான் உங்களுடன் பழகியன் என்ற வகையில் மிகவும் தாழ்மையாக முன்வைக்கின்றேன். கல்குடாவில் எதிர்வருகின்ற தேர்தல்களில் மீண்டுமொரு வேலி கட்டப்பட்ட அரசியல் கலாசாரத்தினை ஏற்படுத்துவதற்கு நீங்கள் அமீர் அலியுடன் கைகோர்த்துச் செயற்பட்டு எமக்கிருக்கின்ற வாக்குப்பலத்தினை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்கு முக்கிய காரணகர்தவாகவும் ஊர் ஓடுகின்ற பொழுது நீங்களும் ஒத்து ஓடுகின்ற செயற்பாட்டு இயக்குனராகவும் இருக்க வேண்டுமென்பது எங்களது ஆசையாகும்.

அவ்வாறு நீங்கள் சமூகத்துக்காக அமீர் அலியுடன் கைகோர்த்துச் செயற்பட முன்வருகின்ற பொழுது, ஒட்டு மொத்த கல்குடா சமூகமும் உங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும். அமீர் அலியின் அரசியல் தலைமைக்குப் பிற்பாடு கல்குடா சமூகமே கல்குடாவின் அரசியல் அதிகாரத்தினை அமீர் அலியின் ஆசீர்வாதத்துடன் வட்டாவில் வைத்து உங்களுடைய கைகளில் தருவார்கள் என்பது தான் நிதர்சனமாக அமையுமென்பதனையும் உங்களுக்கு மிகவும் தாழ்மையுடன் இங்கே ஞாபகப்படுத்தி விடை பெறுகின்றேன்.

இப்படிக்கு ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்Comments are Closed