Main Menu

ஊருக்கொரு எம்.பி. கோஷமும் : பிரதேசவாத மைய அரசியலும் !

(ஏ.எல்.நிப்றாஸ்)
ஒவ்வொரு ஊருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் தேவை என்ற வெற்றுக்கோரிக்கையின் காரணமாக இன்னுமொரு தடவை ‘தகுதியில்லாத’ அரசியல்வாதிகளை முஸ்லிம் சமூகம் பாராளுமன்றத்திற்கு அனுப்பப்போகின்றதோ என்ற சந்தேகம் எழத் தொடங்கியிருக்கின்றது.

இந்தப்பின்னணியில் பிரதேசவாதமும் பிளவுகளும் அதிகரிப்பதுடன், முஸ்லிம்களின் வாக்குகள் மீண்டும் சிதறடிக்கப்படப் போகின்றதென்ற கவலையும் கூடவே எழத்தான் செய்கின்றது.

நாடு தற்போது பாராளுமன்றப் பொதுத்தேர்தலை எதிர்நோக்கியுள்ளது. இந்தத்தேர்தலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை முஸ்லிம் கட்சிகள் மற்றும் அரசியல் அணிகள் இப்போது முடுக்கி விட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தமது மக்களை மறந்து கொழும்பில் முகாமிட்டிருந்த தலைவர்கள், தளபதிகள் எல்லோரும் மெல்ல மெல்ல களத்திற்கு விஜயங்களை மேற்கொள்ள ஆரம்பித்திருப்பதைக்காண முடிகின்றது.

பொதுஜனப் பெரமுண கட்சியானது, பிரதான முஸ்லிம் கட்சிகளை அடுத்த தேர்தலுக்கு முன்னதாக கூட்டுச்சேர்க்கமாட்டாது. ரணில் விக்கிரமசிங்கவும் ஐ.தே.க.வில் எல்லா இடங்களிலும் இணைந்து போட்டியிட வேண்டும். இல்லா விட்டால், தனித்துப் போட்டியிடட்டும் என்ற முடிவை எடுத்துள்ளதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையிலேயே சஜித் தலைமையிலான புதிய கூட்டணி பற்றிய கதைகள் உலா வந்து கொண்டிருக்கின்றன என்பது கவனிப்பிற்குரியது.

தோல்விப் பயம்
நாம் முன்னைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததைப்போல, இந்தத்தேர்தலில் பல முக்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள் தோல்வியடையக் காத்திருக்கின்றார்கள். இது அந்தந்த அரசியல்வாதிகளுக்கு தெரியுமென்பதுடன், நடப்பு விவகாரங்களை உற்று நோக்குகின்ற அறிவார்ந்த மக்களும் யார் வெற்றி பெறுவார்?, யார் தோல்வியுற்று அதிகாரமிழப்பர்? என்பதை அறிவார்கள். ஆனால், யாரும் வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ளமாட்டார்கள்.

முன்னாள் பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், ஓரிரு அமைச்சர்கள் இத்தேர்தலில் வெற்றி பெறுவதே நிச்சயமற்றதாகி இருக்கின்றது. சில பெரிய அரசியல்வாதிகள் கூட வேறு மாவட்டத்தில் போட்டியிடுவோமா என்று சிந்திப்பதாகக் கூறப்படுகின்றது. பல அணிகள் களமிறங்கி, முஸ்லிம்களின் வாக்குகள் பல கூடைகளுக்குள் பிரிவடையக் கூடிய சூழலில், வெற்றியை எட்டிப்பார்ப்பதென்றால் கூட பல முஸ்லிம் அரசியல்வாதிகள் தீயாய் வேலை செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

பெருந்தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா? அப்படியென்றால், எந்தக்கட்சியுடன் கூட்டுச்சேர்வது? தனித்து போட்டியிட்டால் வெற்றி பெறலாமா? நான் வெல்வேனா? எமது கட்சிக்கு எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைப்பார்கள்? என்ற ஆயிரம் குழப்பங்கள் முஸ்லிம் தலைமைகளுக்கு ஏற்பட்டுள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக, தாம் எடுக்கின்ற தீர்மானத்தை நியாயப்படுத்துவதற்கு ‘என்ன கற்பிதத்தை முஸ்லிம் சமூகத்திற்கு கூறப்போகின்றோம்’ என்பதையும் தேடி, தயார் செய்தாக வேண்டிய நிலையில் அவர்கள் இருக்கின்றார்கள் எனலாம்.

கணக்குப்பிழை
இது இவ்வாறிருக்க, அடுத்த தேர்தலில் பல முஸ்லிம் பிரதேசங்கள் மற்றும் பிராந்தியங்களில் அப்பகுதியைச்சேர்ந்த வேட்பாளர்களே களமிறக்கப்பட வேண்டுமென்ற கோஷங்கள் மெதுமெதுவாக மேலெழத்தொடங்கியிருக்கின்றன. இவற்றுள் சில கோரிக்கைகள் உண்மையில் நியாயமானவையாகும், இன்னும் சில அழுத்தங்களை ‘வேட்பாளர் கனவோடு’ இருப்பவர்கள் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றார்கள் என்றே சொல்ல வேண்டியுள்ளது.

ஒரு மாவட்டத்தில் எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் மொத்தமாக இருக்கின்றனர். அதில் எத்தனை எம்.பி.க்கள் முஸ்லிம்களுக்கு அல்லது குறித்தவொரு முஸ்லிம் கட்சிக்கு கிடைக்கலாம் என்ற நிகழ்தகவுகளையெல்லாம் பரிசீலிக்காமல், ‘ஊருக்கொரு எம்.பி. வேண்டும்’ என்ற கோஷம் தூக்கிப் பிடிக்கப்படுவதைக் காணும் போது, நமது அரசியல் அறிவை எண்ணி சிரிப்பதா? அழுவதா? எனத்தெரியவில்லை.

முஸ்லிம் கட்சித்தலைவர்களுக்கு தமது கட்சியின் அல்லது அணியின் எம்;.பி.க்களை அதிகரிக்க வேண்டுமென்றதொரு பெரு விருப்பம் ஏற்பட்டுள்ளதாக கணிக்க முடிகின்றது. மாற்றுக்கட்சியை விட நாம் எத்தனை எம்.பி. அதிகம் எடுக்கலாம்? எவ்வாறு செல்வாக்குச் செலுத்தலாம்? என்பது இந்த விருப்பத்தின் பின்புலம் எனலாம்.

அரசியல் தலைமைகளின் நிலைமை இதுவென்றால், மக்களின் போக்குகளோ இதை விட மோசமாகத் தெரிகின்றது. அதாவது ஊருக்கொரு எம்.பி. கோஷம் மீண்டும் ஈனஸ்வரத்தில் எழத்தொடங்கியிருக்கின்றது. இதன் காரணமாக, அயல் பிரதேசங்களுக்கிடையில் ஒருவித பிரதேசவாத சிந்தனையும் அரசியல் பகைமை பாராட்டலும் துளிர் விடத் தொடங்கியிருக்கின்றது என்று கூறலாம்.

பிரதான முஸ்லிம் கட்சிகளில் முறையான கட்டமைப்பும் கட்டுக்கோப்பும் பேணப்படவில்லை. முஸ்லிம் காங்கிரஸில் மர்ஹூம் அஷ்ரப் உருவாக்கிய கட்சிக்கட்டமைப்பு பின்னர் சரியாக பராமரிக்கப்படாமையால் சிதைவடைந்து போயுள்ளது. மக்கள் காங்கிரஸில் சரியான கட்டமைப்பு இன்னும் உறுதியாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஏனைய முஸ்லிம் கட்சிகளிலும் பெரிய முன்னேற்றங்களில்லை.

இந்தப்பின்னணியில், முஸ்லிம் கட்சிகளுக்குள் எப்போதும் இரண்டு அல்லது மூன்று அணிகள் இயங்குகின்றன. கொழும்பான், கண்டியான், கிழக்கான், வடக்கான் என்ற பிராந்தியவாதங்கள் உள்மனதிலிருந்து செல்வாக்கு செலுத்துகின்றன. அதே நேரம், அநேகமான ஊர்களில் முஸ்லிம் கட்சிகளுக்கு குறைந்தது இரண்டு அணிகள் இருக்கின்றன. ஆரம்பத்தில் மு.கா.வுக்கு இந்நிலை இருந்தது. இப்போது மக்கள் காங்கிரஸிற்கும் இந்நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலைமை மற்றைய முஸ்லிம் கட்சிகளுக்கும் உருவாகலாம்.

மக்களே சிந்திக்க
மக்கள் இது குறித்து கவனமாகச்சிந்திக்க வேண்டியது அவசியம்! இலங்கையில் முஸ்லிம்களுக்கென்று ஒரு அரசியல் இயக்கம் தேவையென்று மக்கள் உணர்ந்த காலமொன்று இருந்தது. பிறகு, அரசியல்வாதிகள் தமது விருப்பின் பேரில் கட்சிகளை உருவாக்கிக் கொண்டனர். இன்று குறைந்த பட்சம் 5 முஸ்லிம் கட்சிகள் முஸ்லிம் அரசியலில் செயற்படு நிலையிலுள்ளன. ஆனால், ஒட்டுமொத்தமாகச் சொன்னால், ‘ஏன்டா இந்தக்கட்சிகளை உருவாக்கினோம்’ என்று மக்கள் சிந்திக்கும் நிலைமை பல தடவைகள் ஏற்பட்டது.

இப்போது, முஸ்லிம் கட்சிகளுக்கிடையில் முரண்பாடு காணப்படுகின்றது. ஒரு கட்சிக்குள்ளேயே பல நிலைப்பாடுகள், அணிகள் உள்ளன. ஒவ்வொரு ஊரிலும் பல கட்சிகள் அரசியல் செய்கின்றன.

இவ்வாறு ஒரே ஊரில் செயற்படும் ஒரு குறிப்பிட்ட முஸ்லிம் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கிடையிலேயே பெரும் முரண்பாடுகளும் குத்து வெட்டுகளும் இருக்கின்றன. முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளாக இருக்கின்ற இவ்வாறான பேர்வழிகளில் பலருக்கு அரசியல் தெரியாது, சமூக அக்கறையுமில்லை. ‘படங்காட்டி’, கிடைப்பதைச்சுருட்டிக் கொள்ளும் வேலையே பெரும்பாலும் நடக்கின்றது எனலாம்.

மிகவும் பிற்போக்குத்தனமான, பக்குவப்படாத ஒரு அரசியல்மயப்படுத்தலின் அடையாளங்களாகவே இவற்றைப் பார்க்க முடிகின்றது. இந்த இலட்சணத்தில், சமூகம் ஒன்றுபட வேண்டும், நமது பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற வேண்டுமென்ற கூப்பாடுகள் வேறு. இதற்காக உண்மையில் வெட்கப்பட வேண்டும்.

தரமானவர்கள் வேண்டும்
இதுவெல்லாம் உண்மையில் தவறானதொரு நிலைப்பாடும் போக்கும் என்று தான் சொல்ல வேண்டும். அரசியலில் ஆசனமும் வாக்குகளும் தான் கணக்கில் வருபவை என்றாலும் கூட, அதிக ஆசனங்களைப்பெற வேண்டுமென்று கட்சித் தலைவர்கள் சிந்திப்பதை போல, அவ்வாறு தமது கட்சியூடாக பாராளுமன்றத்திற்கு வருபவர்கள் தரமானவர்களாக இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். பல சீனத்தயாரிப்புக்களை வைத்திருப்பதை விட அசல் ஜப்பான் தயாரிப்பு நல்லது என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும்.

அதிக பாராளுமன்ற உறுப்பினர்களை எடுப்பது நல்லதே. அது முஸ்லிம்களுக்கு பலமுமாகும். ஆனால், அவர்கள் அந்தப் பதவிக்கு பொருத்தமானவர்களாக இருக்க வேண்டும். சமூக சீர்கேடுகளில் ஈடுபடுவர்களாக, போதைப் பொருள் வர்த்தகத்திற்கு துணை புரிபவர்களாக, பணம் பெற்று தொழில் வழங்குபவர்களாக, பணத்திற்காக எதையும் செய்யக் கூடியவர்களாக, சபல புத்தியுடையோராக, ஊழல் பேர்வழிகளாக, சமூகத்திற்கு அநியாயம் நடக்கின்ற போது ஓடி ஒழிபவராக இருக்கக்கூடாது. இதனை உறுதிப்படுத்தும் பொறுப்பு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் இருக்கின்றது என்பதை மறந்து விடக்கூடாது.

அதே போன்று, எங்களுக்கும் எம்.பி. தேவையென்ற கோஷத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டு முஸ்லிம் பிரதேசங்கள் அயல் பிரதேசங்களுடன் முரண்படுவதையும் பிரதேசவாதத்தை மையமாகக் கொண்டு குறுகிய அரசியல் பேசுவதையும் கை விட வேண்டும். ஊர்களுக்குள்ளிருக்கின்ற முஸ்லிம் கட்சி முக்கியஸ்தர்களின் சிறுபிள்ளைத்தனமான முரண்பாடுகளும் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். தலைவர்கள் இதனை வைத்து பிரித்தாளும் அரசியல் செய்ய முனையக்கூடாது.

மாறிய மனோநிலை
நமது வரலாற்றைத்திரும்பிப் பாருங்கள். முஸ்லிம் சமூகம் முன்னைய காலங்களில் பதவிகளுக்காக சண்டையிட்டுக் கொண்டதில்லை. ஒரு சில அரசியல்வாதிகள் சில ஊர்களை மாற்றாந்தாய் மனப்பாங்கோடு செயற்பட்டதாக அப்போதே குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் கூட, ஒரு பிரதேசத்தின் வாக்காளப் பெருமக்கள் ‘எமக்கே எம்.பி. வேண்டும்’ என்பதற்காக, பக்கத்து ஊர் மக்களுடன் கருத்து முரண்பட்ட சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு.

இலங்கையில் ஒரு காலத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களே இருந்தனர். சில மாவட்ட முஸ்லிம்களுக்கு எம்.பி. பிரதிநிதித்துவங்களே இருக்கவில்லை. ஆனாலும், ஓரளவுக்கு பொதுவாக முஸ்லிம்களின் உரிமைகள் கிடைத்துக் கொண்டே இருந்தன.

அது போலவே, முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட பிறகும் 1989ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற பல தேர்தல்களில் பக்கத்து ஊர்களின் வேட்பாளர்களுக்காக மாவட்டத்தின் எங்கோ ஒரு மூலையிலிருக்கின்ற வாக்காளர்கள் வாக்களித்த வரலாறு இருக்கின்றது. ‘எங்களது ஊருக்கு வேட்பாளர் போட வேண்டும், எங்களுக்கும் எம்.பி. தேவை’ என்று மக்கள் நினைத்ததுக்கூட கிடையாது எனலாம்.

பக்கத்து ஊர்களுக்கு எம்.பி. பதவியைப் பெற்றுக் கொடுக்க வாக்களித்து அழகு பார்த்தது மட்டுமன்றி, அசித்த பெரேரா போன்ற சகோதர சமூகத்தவருக்கும் தேசியப்பட்டியல் எம்.பி.யை வழங்கிய பெருமைக்குரிய முஸ்லிம் சமூகம் இன்று எம்.பி. மற்றும் மாகாண சபை உறுப்பினர் பதவிகளுக்காக பகைமை பாராட்டுவதைப் பார்க்க மிகவும் கவலையாகயுள்ளது.

இந்தப்போக்கு இன்று தலைகீழாக மாறியுள்ளமைக்கு தற்கால பாராளுமன்ற உறுப்பினர்களும் காரணமெனலாம். ஒழுங்காக ஒரு சேவையைக்கூட செய்யாமை, அவ்வாறு செய்தாலும் பிரதேசவாதம் பார்க்கின்றமை, தரகுப்பணம் எதிர்பார்க்கின்றமை, வேறு ஊர் மக்களால் சந்திக்க முடியாத நிலை போன்ற பல காரணங்கள் அடிப்படையிலுள்ளன.

இந்தச்சூழலில், எம்.பி. ஆக வேண்டுமென்ற சொர்ப்பனத்தில் இருக்கின்ற ஒரு உள்ளூர் அரசியல்வாதியும் உருவாகி விடுவாரென்றால், பிரதேசவாதம் தானாகவே தோற்றம் பெற்று, ஊருக்கொரு எம்.பி.கோஷத்திற்கு ஊக்கமருந்து ஊட்டப்படுவதைக் காண முடிகின்றது.

சும்மா இருந்த எம்.பி.கள்
அண்மைக் காலங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். இதனை வைத்து அந்தந்த கட்சிகளும் அரசியல்வாதிகளும் பெரும் காய்நகர்த்தல்களை மேற்கொண்டனர். ஆனால், முஸ்லிம் சமூகத்திற்கு இவர்களால் கிடைத்த மிகப்பெரிய பிரதிபலன் என்ன? முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்ந்தனவா? அபிலாஷைகள் நிறைவேற்றப்பட்டனவா?.இல்லையே.

இவர்களுள் பெயர் குறிப்பிடத்தக்க நான்கைந்து பேரைத்தவிர, வேறு பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரிதாக முஸ்லிம் சமூகத்திற்காக பாராளுமன்றத்தில் உரையாற்றக்கூட இல்லை. தமது ஊருக்கு தேசியப்பட்டியல் வேண்டுமென்று மல்லுக்கட்டி தேசியப்பட்டியல் எம்.பி.களைபப்பெற்ற மக்களுக்கு அதன் மூலம் பெரிதாக என்ன உரிமை கிடைத்திருக்கின்றது. அஸ்ரப் காலத்தில் ஒரு இணைப்பதிகாரி செய்த சேவையைக்கூட பல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்யவில்லை என்பதே நமது அனுபவமாகும்.

சுருங்கக் கூறின், எண்ணிக்கைகள் அதிகரித்ததைத் தவிர வேறெதுவும் பெரிதாக நிகழவில்லை. எம்.பி.ஆசனங்களின் தொகை அதிகரிக்க வேண்டும் என்று நினைத்த முஸ்லிம் சமூகம், அந்த ஆசனங்கள் எப்பேர்ப்பட்ட தரமிக்க மக்கள் பிரதிநிதிகளால் நிரப்பப்பட வேண்டும் என்று சிந்திக்க தவறிவிட்டது. எம்.பி. பதவிக்கு கொஞ்சம் கூட தகுதியற்ற பலரை திரும்பத்திரும்ப தெரிவு செய்து அனுப்பிக் கொண்டிருக்கின்ற இயந்திர சமூகமாக மாறிப்போனது என்று தான் சொல்ல வேண்டியுள்ளது. இந்நிலை மாற வேண்டும்.

எண்ணிக்கை மட்;டுமல்ல
யார் யாரை வேட்பாளராக நியமிப்பதென்ற சிக்கல் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் தலைமைகளுக்கு மட்டுமன்றி, பொதுஜன பெரமுண, ஐ.தே.க. மற்றும் சுதந்திரக்கட்சியுடன் இணைந்துள்ள முஸ்லிம் தலைமைகளுக்கும் ஏற்பட்டிருப்பதாகச் சொல்ல முடியும். எனவே, முஸ்லிம் அரசியல் தலைமைகளும் பொது மக்களும் இவ்விடயத்தில் தெளிவு பெற வேண்டும்.

ஒவ்வொரு ஊருக்கும் எம்.பி. வேண்டுமென்ற எண்ணத்தையும் அதற்காக மிக நுணுக்கமாக பிரதேசவாதம் பேசுவதையும் கைவிட வேண்டும். ஊர் கடந்து சேவை செய்யக்கூடிய வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். ஆனால், அவர்கள் எல்லா வழிகளிலும் தகுதியுடைய ஆளுமைகளாக இருப்பது கட்டாய முன் நிபந்தனையாகும்.

இந்தச்சூழ்நிலையில், எம்.பி. பதவி பெற வேண்டுமென்பதற்காக தகுதிக்கு மீறி ஆசைப்படுவோர், நிச்சயமாக தோற்பார் எனத் தெரிகின்றவர், பணம் மட்டும் படைத்தவர், கட்சிக்குள் படங்காட்டிக் கொண்டு திரிந்தவர், ஊருக்கு எம்.பி.வேண்டுமென்று சொல்லி அழுத்தம் கொடுக்கின்ற செயற்பாட்டாளர்கள், பக்கத்து ஊர் மக்களின் ஆதரவில்லாதவர்கள் போன்றவர்களை எந்தக்காரணத்திற்காகவும் வேட்பாளராக நியமிக்கக் கூடாது.

அதே போன்று, கடந்த பாராளுமன்றங்களில் ஒரு எம்.பி.யாக இருந்த போதும், மக்களுக்கு சேவை செய்யாமல், முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது அதற்காக குரல் கொடுக்காமல், தமது உழைப்பில் மாத்திரம் குறியாய் இருந்த அரசியல்வாதிகளையும், இனி இவர் தேவையில்லையென்று மக்களால் கருதப்படும் எம்.பி.களையும் மீண்டும் வேட்பாளர்களாக களமிறக்கக்கூடாது.

ஆக மொத்தத்தில், இங்கு, உருப்படிகள் மட்டுமே முக்கியமில்லை. ‘உருப்படியான’ பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதிலேயே முஸ்லிம் சமூகம் கவனஞ்செலுத்த வேண்டும்.

– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி)



Comments are Closed