Main Menu

மட்டக்களப்பில் இளைஞர் பாராளுமன்றத்திற்கான வேட்பு மனுத்தாக்கல்

எஸ்.எம்.எம்.முர்ஷித்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர் பாராளுமன்றத்திற்கான வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான சகல ஏற்பாடுகளும் மாவட்ட செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று அதிகளவான இளைஞர், யுவதிகளுடன் வேட்பு மனுக்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்தமை அவதானிக்க முடிந்தது.

உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் தலைமையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிமனை உதவிப்பணிப்பளர் கே.நந்ததிலக்க, தேசிய சம்மேளனத்தின் பிரதிநிதி ரி.விமல்ராஜ், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ரி.கலாராணி, தகவல் நிலைய உத்தியோகஸ்த்தர் ஏ.எம்.ஹனீபா, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனப் பிரதிநிதி பி.சஜந்தன், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகஸ்த்தர் ஏ.நிஸாந்தி ஆகியோர் அடங்கரான குழு வேட்புமனுத்தாக்கல் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்டத்தில் பதினான்கு பிரதேச செயலகங்களைச்சேர்ந்த முன்னூற்று நாற்பத்து ஐந்து கிராம சேவகர் பிரதிநிதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இளைஞர் கழகங்களைச்சார்ந்த இளைஞர், யுவதிகளும் இத்தேர்தலில் வேட்பாளர்களாக வேட்புமனுத்தாக்கல் செய்ய முடியும்.

இதில் வேட்பாளர்களுக்கான வயதெல்லை 18 முதல் 27 வயதிற்குட்பட்ட இளைஞர் கழகங்கள் அல்லாதோர் தேர்தலில் போட்டியிட முடியும். அதே வேளை, இளைஞர் கழகங்களுக்கான வயதெல்லை 15 முதல் 29 வயதிற்குட்பட்ட கழக உறுப்பினர்கள் இத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதிவாய்ந்தவர்களாகக் கருதப்படுவர்.

இத்தேர்தலில் 18 முதல் 29 வரையான மாவட்டத்தின் சகல இளைஞர்களும் வாக்களிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கென 1979ம் ஆண்டு ஒன்பதாம் இலக்க இளைஞர் சேவைகள் சட்டத்தின் நோக்கங்களை அடைதல் எனும் சட்டத்திற்கூடாக இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பானது நிதி மற்றும் நியாயமானதொரு சமூகத்தின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் குறித்து குடிமக்களுக்கு கல்வி கற்பித்தல், தேசிய, சர்வதேச, பொருளாதார, சமூக, அரசியல், கலாசார சூழலினை சரியான முறையில் பேணுவதற்கான ஒரு ஆளுமைமிக்க இளைஞர் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கிலே இச்செயற்பாடு இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.

இத்தேர்தல் வேட்புமனுவானது மு.ப 10.00 மணி முதல் பி.ப 3.30 மணி வரை நடைபெற்று வருகின்றது. இதே போல், இன்றும் நடைபெறும்.

இலங்கையில் 2020ம்ஆண்டு இளைஞர் பாராளுமன்றத்திற்கான ஒவ்வொரு பிரதேச செயகத்திலிருந்தும் 334 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அதனைத்தவிரவும் உயர்கல்வி மற்றும் பிறதுறைகள் சார்ந்த பிரதிநிதிகள் இருபத்திரண்டு பேர் பிறிதொரு தினத்தில் தேர்தல் மூலமாக 22 பேர் தெரிவு செய்யப்படுவர். மொத்தம் 356 பிரதிநிதிகள் இப்பாரளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவர். இதில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் என முக்கிய துறைகளுக்கான அமைச்சுப்பதவிகளும் இப்பிரதிநிதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டோர்களுக்கு பதவிகள் வழங்கப்படும்.



Comments are Closed