Main Menu

பின்னடைவை நோக்கிச்செல்லும் அல் ஹிதாயாவை மீட்டெடுக்க மீராவோடை சமூகம் முன் வர வேண்டும் – பழைய மாணவர் சங்க கட்டார் கிளை உருக்கமான வேண்டுகோள்

இந்த செய்தியைப் பகிர்க >>>

புதிய அதிபர் நியமனத்தின் பின்னர் பின்னடவை நோக்கிச்செல்லும் மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தை மீட்டெடுத்து, அதன் கல்வி வளர்ச்சியைத் தொடர்ந்தும் முன்னெடுக்க மீராவோடை சமூகமும் குறிப்பாக, பள்ளிவாயல் நிருவாகம், பழைய மாணவர் சங்கம் மற்றும் ஊர் நலன்விரும்பிகள், ஊர் நலன்சார் அமைப்புக்களும் முன்வரவேண்டுமென மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கட்டார் கிளை உருக்கமான வேண்டுகோளொன்றை விடுத்துள்ளது.

அவ்வேண்டுகோளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நல்லதொரு அடைவு மட்டத்தையும், சிறந்த ஒழுக்க விழுமியங்களுடனும் கல்வியை நோக்கிப்பயணித்த எமது அல் ஹிதாயாவின் நிலை புதிய அதிபர் நியமனத்தின் பின்னர் அதாள பாதாளத்தை நோக்கி நகர்வதையும் பொறுப்புவாய்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் செய்யுமளவிற்கு சென்று கொண்டிருப்பதும் கவலையளிப்பதுடன், இதனை இன்னும் கைகட்டிப்பார்த்துக்  கொண்டிருக்க முடியாது.

இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சியைக் கட்டிக்காப்பதில் பள்ளிவாயல் நிருவாகமும் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்களும் ஊர் நலன்விரும்பிகளும் அதிக சிரத்தையுடனும் அர்ப்பணிப்புடனும் பல தியாங்கங்களைச் செய்துள்ளனர்.  இதுவரையும் தம்மாலான பங்களிப்பினை வழங்கி இப்பாடசாலையை வளர்த்தெடுத்த பாடுபட்டு வரும் நிலையில், இப்பாடசாலையை தனிப்பட்ட ஒரு சிலரின் அஜந்தாக்களுக்கும் நலனுக்கும் விட்டு விட முடியாது.

கடந்த சில திங்களாக சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனமாகிப்போன கற்பிக்கும் ஆசிரியர்களின் ஒழுக்க விழுயங்கள் ஒழுக்கமான மாணவர் சமூகத்தையோ எதிர்கால இளைஞர் தலைமைகளையோ உருவாக்காது என்பது கவலை தரும் விடயமாகும்.

ஒழுக்கச்சீர்கேட்டுடன் மாணவர்களை வளர்த்தெடுப்பது ஒரு புறமிருக்க மாணவர்களை வழி நடாத்தும் ஆசான்களும் ஆசான்களை வழிநடாத்தும் தலைமையும் ஒழுக்க மாண்புகளைக் கொண்டவர்களல்ல என்பதும் மாணவர்களுடனும் அவர்கள் பெற்றோர்களுடனும் சீறி விழும் செயற்பாடும் ஒட்டுமொத்த பாடசாலையின் கல்வி வளர்ச்சியையும் பாதிக்கும்.

அத்தோடு, பாடசாலையின் வளர்ச்சியில் அக்கறையற்று அதிபர் செயற்பட்டு வருவதுடன், பாடசாலைக்காகவே இரவு பகல் பாராது உழைத்த சிரேஷ்ட ஆசியர்களின் இடமாற்றத்தினைக்கூட கண்டும் காணாதிருப்பது எதிர்கால கல்வி வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல.

ஆசிரியர் தட்டுப்பாட்டுடன் இருக்கின்ற நிலையில், இப்பாடசாலையிலிருந்து ஏக காலத்தில் 13 முக்கிய பாடவிதானங்களுக்கான ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுள்ள நிலையில், மாற்றீடாக தகுதி வாய்ந்த பாடவிதானங்களுக்கு பொருத்தமான ஆசிரியரைப் பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டாமை உயர்தர கணித, விஞ்ஞான மற்றும் சாதாரண தர பெறுபேறுகளின் பின்னடைவுக்கும் வழி வகுக்கும்.

அத்தோடு, பாடசாலை நிருவாகத்தைக் கொண்டு நடாத்துவதில் சவால்களை எதிர்கொள்ளுமளவிற்கு தகுதியற்ற ஒருவராக தற்போதைய அதிபர் காணப்படுவதுடன், புதிய வருடத்திற்கான நேரசூசி தயாரிப்பதில் ஆசிரியர்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ளதுடன், பக்கச்சார்பான போக்குடன் அதிபர் செயற்படுவதான குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

ஆசிரியர்களுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகளும் கருத்து மோதல்களும் மாணவர்களைப் பாதிப்பதுடன், ஒழுக்க கட்டுப்பாடில்லாமல் அதிபருக்கெதிராக மாணவர்கள் விரல் நீட்டுமளவிற்கு நிலைமை மோசமாகவுள்ளது.

அத்தோடு, கலாசார சீர்கேடுகளைத் தவிர்க்கும் நோக்கில் ஆண், பெண்கள் கலப்பைத் தவிர்க்கும் நோக்கில் கலந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகளை இல்லாமல் செய்து, தரம் 10, 11 வகுப்பு மாணவ, மாணவிகளை ஒன்றிணைக்க எடுத்துள்ள முயற்சி கல்வி வளர்ச்சியில் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்..

அத்தோடு, ஆசிரியர் அதிபர் முரண்பாடு ஆசிரியர் மாணவர் முரண்பாடு, பாடசாலை நிருவாகம் பெற்றோர் முரண்பாடுகள் என வளர்ந்து கொண்டு போகுமாக இருந்தால் தற்போதுள்ள உயர்தர, சாதாரண தர வகுப்புக்களை இல்லாமலாக்கி தரங்குறைக்கப்பட்ட பாடசாலையாக அல் ஹிதாயாவின் நிலை உருவாகலாம்.

எனவே, தனிப்பட்ட நலன், செல்வாக்கு, ஊரவன், உறவின் என்ற காரணங்களை ஒரு புறம் ஒதுக்கி விட்டு பாடசாலையின் எதிர்கால கல்வி வளர்ச்சியை மட்டும் இலக்காகக்கொண்டு இப்பாடசாலையில் அக்கறையுள்ள மீராவோடை பள்ளிவாசல் நிருவாகமும் ஏனைய அமைப்புகளை ஒன்றிணைந்து தற்போதுள்ள நிலையிலாவது பாடசாலையை மீட்டெடுத்து, பொருத்தமானதொரு அதிபரின் கையில் ஒப்படைக்க முன்வரவேண்டும் என மிகவும் உருக்கமாகவும் வினயமாகவும் கேட்டுக்கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீராவோடை பள்ளிவாயல் நிருவாகமே, பொது அமைப்புக்களே, பழைய மாணவர்களே, ஊர் நலன்விரும்பிகளே..

இது உங்கள் அனைவரதும் மேலான கவனத்திற்கு…

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed