Main Menu

மட்டக்களப்பில் தமிழ்ச்சங்கக் கட்டடத்திறப்பு விழா

எஸ்.எம்.எம்.முர்ஷித்.
மட்டக்களப்பு-திருமலை வீதி, பிள்ளையாரடியில் அமைந்துள்ள தமிழ்ச்சங்கk கட்டடத்திறப்பு விழா எதிர்வரும் மாசித்திங்கள் பதினைந்தாம் நாள் சனிக்கிழமை முற்பகல் 9.00 மணியளவில் மிகவும் கோலாகலமான முறையில் இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தலைவர் சைவப் புரவலர் வி. ரஞ்சித மூர்த்தி தலைமையில் நடைபெறவுள்ள இப்பெருவிழாவில் சிறப்பதிதிகளாக கலந்து சிறப்பிக்கவிருக்கும் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சுரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜா, தமிழ்ச்சங்கத்தலைவர் திரு.வி. ரஞ்சிதமூர்த்தி, சங்கப்பொருளாளரும் கட்டடக்குழுத்தலைவருமான தேசபந்து மு.செல்வராஜா ஆகியோர் இணைந்து கட்டடத்தை திறந்து வைக்கவுள்ளனர்.

இந்நிகழ்வு பிள்ளையாரடி புரவிப்பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து பேரணியாகப்புறப்பட்டு தமிழ்ச்சங்கக் கட்டட வாசலில் வரவேற்பு உபசாரங்கள் நடைபெறவிருக்கின்றது.

அதனைத்தொடர்ந்து கட்டட நிர்மாண கொடையாளிகளின் நாமம் பொறித்த நினைவுப் படிகம் திரைநீக்கம் செய்யப்பட்டு, கட்டட வாசல் முன்றலில் கம்பீரமாகக்காட்சியளிக்கும் வான் புகழ் கொண்டு விளங்கும் திருவள்ளுவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து திறப்பு விழா தொடர்ந்து நிகழும்.

இந்நிகழ்வில் கட்டட நிர்மானக்குழுத்தலைவர் தேசபந்து மு.செல்வராஜா உட்பட பதின் நான்கு கொடையாளிகளின் நாமம் செய்யப்படும்.

மேலும், இக்குழுவினர் மட்டக்களப்பு தமிழ்ச்சங்க நிர்வாகிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிப்பார்கள்.

கட்டட நிர்மானக் குழுவினரை தமிழ்ச்சங்கமும் பாராட்டிக்கௌரவம் வழங்கவிருக்கினறது. மேலும் இத்திறப்பு விழாவை நினைவுகூறும் வகையில், சிறப்பு மலரும் வெளியிடப்படவிருக்கன்றது.

இவ்வைபவத்தைc சிறப்பிக்க மட்டக்களப்பு ரிதம் கலைக்குழுவினரின் வரவேற்பு நடனமும் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவன மாணவர்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெறவிருப்பதோடு, மலர்க்குழு ஆசிரியர் தேசியக்கலைஞர் வெல்லவூர்க்கோபால் கட்டட வரைஞர் எஸ். லோகேந்திரதாஸ், அதற்குப் பொறுப்பாகவிருந்த எந்திரி திரு. ரகு ஆகியோரும் கட்டடத்தை கட்டி நிறைவு செய்த கொத்தனார் கலைஞர் குழுத்தலைவரும் கௌரவம் பெறவிருக்கின்றனர்.

மீன்பாடும் தேன்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் இந்நிகழ்விற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு தமிழ் மீது ஆர்வம் கொண்ட அனைவரையும் மட்டக்களப்ப தமிழ்ச்சங்கம் அழைப்பு விடுக்கின்றது.



Comments are Closed