Main Menu

அலி சப்ரியின் வருகை, கிழக்கு அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

இந்த செய்தியைப் பகிர்க >>>
சாய்ந்தமருது -எம்.எம்.எம்.நூறுல்ஹக்
கடந்த வாரம் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அம்பாறை, மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை மையப்படுத்தி சில வைபவங்களில் கலந்து கொண்டது நாமறிந்ததே, அவர் திட்டமிட்டு வந்த வைபவங்கள் தவிந்து, சடுதியாகப் பெறப்பட்ட நேரவொதுக்கீடுக்குரிய வைபவங்கள் மற்றும் சில சிநேகபூர்வமான சந்திப்புக்கள் எனவும் அவர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் கிழக்கு வருகைக்குப் பின்னால், அரசியல் நோக்கம் தாரளமாக இருக்கிறதென்பது மட்டும் உறுதியானது. இதனால் தான் அவரது உரைகளில் அரசியல் கருத்துக்கள் அனல் பறக்கும் வசனங்களினூடாக வெளிப்பட்டது – இதுவே இதற்கான ஆதாரச்சான்றாகவும் அமைந்து விடுகின்றது.
ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் தனிப்பட்ட அரசியல் இலக்கு குறித்து இக்கட்டுரை ஆராய்வதைத் தவிர்த்து, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் அவர் ஆற்றிய உரைகளின் பின்னணியில் இருக்கின்ற பொதுவான அரசியல் நோக்குகள் குறித்தும், குறிப்பாக, கல்முனையில் நடைபெற்ற பகிரங்கக் கூட்டத்தின் தாற்பரியம் மற்றும் சாய்ந்தமருது பள்ளிவாசலின் சந்திப்புக் குறித்தும் அலசுவதுமே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நமது நாட்டின் முன்னாள் ஐனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ சார்பு அரசியல் நிலைப்பாட்டிலிருந்து வந்தவர் என்ற தொடரில் இன்றைய நமது நாட்டு ஜனாதிபதி கோட்டாபாயவின் அரசியல் இருப்பிலிருந்து வருகின்ற ஒருவர் என்பது மிகப்பகிரங்கமானது. அதே போன்று, இன்றைய நமது நாட்டு ஐனாதிபதி கோட்டாபாயவின் தேர்தல் களத்தில் அவர் சார்பான பிரசார நடவடிக்கையில் அதிக ஈடுபாட்டைக்காட்டியவர் என்ற பதிவை தன் பக்கம் வைத்திருக்கும் ஒருவருமாவார்.
இதற்கப்பால், நேரடியாக மக்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தை- குறியாகக்கொண்டவொரு அரசியல் செயற்பாட்டாளராக இருந்தவரல்லர். எதிர்வரும் பொதுத்தேர்தலில் மக்கள் அரசியல் பிரதிநிதித்துவ அரசியலை செய்யக்கூடும் என்ற நம்பிக்கை அல்லது எதிர்பார்ப்புக்குரிய ஒரு பிரமுகராக இன்றிருக்கின்றார். சில வேளை, எதிர்காலத்தில் பொதுஜன பெரமுனவின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் நேரடியாகப் பங்கெடுக்கும் ஒருவராக மாறக்கூடுமென்ற எதிர்பார்ப்புக்குரியவராகவும் இருக்கின்றார்.
அதே நேரம், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் வாழும் முஸ்லிம் மக்களின் பெரும்பாலானவர்களுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி பற்றி போதிய பரிச்சயமமில்லாதவர்கள் என்பது ஒரு உறுதியான செய்தியாகும். இத்தகைய புலத்திலிருக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் அரசியல் பின்புலத்தைப்புரிந்து கொள்வது அவ்வளவு இரகசியமான ஒன்றல்ல.
நமது நாட்டின் பெரும்பான்மையாக வாழுகின்ற சிங்கள மக்களின் பெரும்பாலானோரினால் நேசிக்கப்படும் மஹிந்த – கோட்டா அணியினரை சிறுபான்பான்மை மக்கள் ஆதரிக்க வேண்டும். குறிப்பாக, முஸ்லிம் மக்கள் இந்த நிலைப்பாட்டைத் தான் எடுக்க வேண்டும். இதற்குத்தடையாக இருக்கின்ற இன்றைய முஸ்லிம் தலைமைகளான முன்னாள் அமைச்சர்களான றஊப் ஹக்கீம், றிஸார்ட் பதியூதீன் ஆகியோர்களின் அரசியல் வழிகாட்டால்களை முஸ்லிம் மக்கள் நிராகரிக்க வேண்டுமென்கின்ற பொதுவான தொனிப்பொருளில் தான் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் அரசியல் இலக்கு நோக்கியே,உரையாற்றிச்சென்றார். இந்த கருத்தாடல் இவ்விரு மாவட்ட முஸ்லிம் மக்களுக்குப் புதியதல்ல.
கடந்த 2003களிலிருந்து இற்றைவரை நமது நாட்டின் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ், சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜாபக்ஷ மற்றும் இன்றைய ஜனாதிபதி கோட்டபாய வரை சுமார் பதினேழு ஆண்டுகளாக இவர்களின் சார்பு அரசியலில் இருந்து வரும் ஒருவராவார். அது மட்டுமன்றி, ரணில் விக்கிரமசிங்காவின் சார்பிலான அரசியல் முன்னெடுப்புக்கள் முஸ்லிம் சமூகத்திற்கு சரியானதல்ல என்பதை அறுதியிட்டு உறுதியாக உரைத்துக் கொண்டிருப்பவர்.
அது மட்டுமன்றி, முன்னாள் அமைச்சர்களான றஊப் ஹக்கீம், றிஸார்ட் பதியூதீன் ஆகியோர்களின் அரசியல் வழிகாட்டால்கள் முஸ்லிம் சமூகத்திற்கு விடியலைத்தராது என்பதை எடுத்துக்காட்டி, இவர்களின் தலைமைத்துவத்தை முஸ்லிம் சமூகம் நிராகரிக்க வேண்டுமென அழுத்தம் திருத்தமாக வலியுறுத்திய ஒருவராகவும் இருந்து வருவது மிகப் பகிரங்கமானது.
ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் அரசியல் கொள்கைகளுக்கு நூறு வீதம் நெருங்கி இருப்பதற்கப்பால் நேரடி மக்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் செயற்பாட்டையும் கொண்டிருக்கும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் பதினேழு வருட அறைகூவலுக்கு செவிசாய்க்காத கிழக்கு வாழ் மக்கள் மூன்று நாள் பிரசாரத்தினூடாக பெரும்பாலான முஸ்லிம் மக்கள் மாறி வரலாறு படைப்பார்கள் என்று எதிர்பார்ப்பது அல்லது அரசியல் அரூடம் தெரிவிப்பது ஓர் ஆரோக்கியமான நகர்வாக இராதென்பதில் சந்தேகமில்லை.
உண்மையில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் இருப்புக் கொண்டுள்ள முஸ்லிம்களும் சரி, அல்லது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மொத்த முஸ்லிம் மக்களில் பெரும் பகுதியினர் கடந்த 2015, 2019களில் நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தல்களில் முறையே மஹிந்த கோட்ட பாய ஆகியோர்களை ஆதரிப்பதிலிருந்து வெகுவாகப் பின் வாங்கிக் காணப்படுகின்றனர். இதற்கு முந்திய காலங்களான 1988, 1994,1999, 2004, 2010ம் ஆண்டு காலகட்டங்களில் நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தல்களின் போது, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ஷ ஆகியோர்களை ஆதரித்து வடக்கு, கிழக்கு வாழ் முஸ்லிம் மக்கள் வாக்களித்தளவிற்குக்கூட 2015 இல் மஹிந்தவையும் 2019 இல் கோட்டாவையும் ஆதரிக்காத நிலையைக் காண்கின்றோம்.
இத்தகைய வேரூன்றிய நிலைப்பாடு எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது முற்றாக ஒழிக்கப்பட்டு மாறுதல் ஏற்பட்டு விடுமென எதிர்பார்ப்பதும் நம்புவதும் இயற்கை நீதிக்கும், இயல்பு நடைமுறைமைக்கும் ஒவ்வாத ஒன்றே. ஏனெனில் எதிர்வரும் பொதுத்தேர்தல் அறிவிப்பு மார்ச் அல்லது ஆகஸ்ட் அளவில் அறிவிக்கப்படுவதற்கான சாத்தியமேயுண்டு. இவ்விரு தினங்களில் எதுவானாலும் அதற்கிடையில் இருக்கும் இடைவெளி என்பது சுமார் 28 தினங்கள் அல்லது 180 தினங்களேயாகும்.
ஆனால், மஹிந்த, கோட்டா மீதான வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் பெரும் பகுதியினரின் நம்பிக்கையீனம் என்பது சுமார் பத்து வருடங்களுக்கு மேலிருந்து வருகின்றவொன்றாகும். இதனை வேறொரு கோணத்தில் நோக்கினால், மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப்பின் மரணத்தையடுத்து, ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் கட்சியின் தலைமைத்துவத்திற்கு றஊப் ஹக்கீம் (2000) வந்த காலத்திலிருந்து இற்றைவரை சந்திரிகா, மகிந்த, தொட்டு கோட்டா வரையான 20 வருடங்களாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் வெறுப்புணர்வு, அச்சவுணர்வு என்பன ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் மூன்று நாள் பிரசாரம் உடைத்தெறிந்து விடுமென்று நம்புவதாக இருந்தால், அது அற்புதமாக நடைபெறக்கூடியதேயன்றி வெறும்மனித முயற்சிக்கு உட்பட்ட இயற்கை வழிமுறையல்லவே.
மூன்று நாட்கள் பிரசாரத்திற்கு பார்க்கிலும் சுமார் பதினேழு ஆண்டுகளாக மக்கள் அரசியல் பிரதிநிதித்துவம் வகித்தும் தேசிய காங்கிரஸ் எனும் அரசியல் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்வின் யதார்த்தபூர்வமான கருத்தாடலுக்கு இவ்விரு மாவட்ட முஸ்லிம் மக்களில் பெரும் பகுதியினர் செவிசாய்க்கவில்லை. இவர் அம்பாறை மாவட்டத்தினைப் பூர்வீகமாகக் கொண்டவர், பொதுவாக கிழக்கு மக்களோடு மிகவும் நெருங்கிய தொடர்பைக் கொண்டவராக இருந்தும் இவரது கூற்றுக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது, புறமொதுக்கப்படுகின்ற நிலை தான் மேலோங்கிக் காணப்படுகின்றதென்றால், சொல்பவரை வைத்து கிழக்கு முஸ்லிம் மக்கள் தமது அரசியல் சார்பு நிலையை முடிவு செய்யத் துணியவில்லை என்பது துலாம்பரமானது.
அப்படியாயின், இதன் பின்னணி என்பதற்கு அலி சப்ரி, அதாவுல்லாஹ் என்கின்ற நாமங்கள் காரணமாக இருக்க முடியாதென்பது திட்டவட்டமானது. அப்படியாயின், இதன் தாற்பரியத்தை சரியாக விளங்கிக் கொள்வதற்கும் அதனை நிவார்த்திப்பதற்குத் தேவையான அணுகுமுறைமைகள் எந்தத்தரப்பிலிருந்து நிகழ்வதனூடாக சாத்தியமாகுமென்ற புரிதலும் அதற்கேற்ற செயற்பாடுகளும் நிகழாத வரை கிழக்கு வாழ் முஸ்லிம் மக்களின் அரசியல் நகர்வுகளில் மாற்றங்கள் சடுதியாக நடைபெற்று விடாதென்கின்ற புரிதல் தான் எதிர்கால எழுச்சிகளுக்கு வித்திடும்.
இலங்கையில் இனப்பிரச்சினை என்று ஒன்றில்லை. தமிழர்களும் முஸ்லிம்களும் தான் அடிப்படைவாதிகளாக இருக்கின்றனர். சிங்கள மக்களிடமும்.அவர்கள் சார்ந்து வருகின்ற நமது நாட்டின் அரசாங்கத்திடமோ இனப்புறக்கணிப்பு கிடையாதென்று நம்புகின்றனர். இதில் மஹிந்த, கோட்டா தரப்பினர் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இதனால் நாட்டில் காணப்பட்ட யுத்தத்தை முடிவுக்குக்கொண்டு வருவதும் அபிவிருத்திகளை முன்னகர்த்துவதும் இந்நாட்டில் நிலையான நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் இங்கு நிலைப்பேறாக்கி வைக்குமென்கின்ற திட்ட முன்னெடுப்பில் அதிக நம்பிக்கை வைத்தவர்களாகக் காணப்படுகின்றனர்.
இந்தக்கோட்பாட்டை குறிப்பாக வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்கள், முஸ்லிம்களில் பெரும் பகுதியினர் ஏற்றுக்கொள்ளும் மனோ நிலைக்கு வரவில்லை. ஏனிந்த நிலையென்று பார்த்தால். தமிழர்களைப் பொறுத்தவரை ஆயுதமேந்திப் போராடும் நிலைக்கு வித்திட்ட அடிப்படைக் காரணங்களாக அமைந்த இனப்புறக்கணிப்பு சிந்தனைகளோ, அதனையொட்டி நிகழ்ந்த அநியாயங்களோ நிவார்த்தி செய்யப்படவில்லை. மாறாக, அவை அப்படியே தொடர்ந்தும் செயற்படுகின்ற போது,, எப்படி மாற்றம் வரும்? இதே போன்று தான் இங்குள்ள முஸ்லிம் மக்கள் மீதும் காட்டப்பட்ட இனப் புறக்கணிப்புக்கள் தொடர்ந்த வண்ணம் தான் இருக்கின்றது.
உதாரணமாக, பின்வரும் இரண்டு நிலைகளை எடுத்து நோக்குவதன் மூலம் இங்குள்ள முஸ்லிம் மக்களின் மனோ வலிமை எதன் மீது இன்றுமிருக்குமென்பதை மிகவும் தெளிவாகவே காட்டப் போதுமானது.
(1) தமிழ்த்தரப்பினர்களின் ஆயுதமேந்திய போராட்டத்திற்கு முன்னரும் பின்னரும் தமிழர்களினால் முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட எந்தப்புறக்கணிப்புக்களும் முற்றாக இல்லாமற் செய்யப்படவில்லை. ஆயுதமேந்திய தமிழர்களினால் விளைவிக்கப்பட்ட உயிர் , உடமைச்சேதங்கள் ஒரளவு தடுக்கப்பட்டுள்ளது. தவிர, நிலப்பறிப்பு, நிர்வாக ரீதியாகக் காட்டப்படும் பாகுபாடு, முஸ்லிம் மக்களின் மத, கலாசார நடவடிக்கை மீது காட்டப்படும் சிங்கள, தமிழ் மக்களின் எதிர்நடவடிக்கைகளும் அட்டூழியங்களும் நிறுத்தப்படவில்லை. இதனால் யுத்த ஒழிப்பு ஒராளவு பாதுகாப்பானது என்றாலும் முழுமையான தீர்வை முஸ்லிம்களுக்குத் தரவில்லை.
இதனால், யுத்தத்தை முடித்தோம் என்ற கோஷத்திற்காக மட்டும் இவர்களை முழுமையாக நம்பி முஸ்லிம் சமூகம் செல்வதற்கு நம்பிக்கை வைக்கத்தயாரில்லாதவொரு போக்கையே கடைப்பிடிக்கின்றனர்.
(2) கல்முனை -கல்முனைக்குடி சார்ந்த முஸ்லிம்களினால் சரி காணப்பட்ட ஒரு கோரிக்கையாக கல்முனை மாநகர சபை நான்காக ஒரே நேரத்தில் பிரிக்கப்படல் வேண்டுமென்கின்ற கூற்று இன்று பகிரங்கப்படுத்தப்படுகின்றது. இதற்கிசைவாக முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வும் நான்காகப் பிரிப்பதை சரி காண்கின்றார். அப்படியிருந்தும், இம்மக்கள் அவரை முழுமையாக ஏற்கத்தயாரில்லாத சூழல் தான் காணப்படுகின்றது. தமது கோரிக்கைக்கு அவர் சாதகமானவராக இருந்தும் இவரை அங்கீகரிக்க மறுப்பதென்பது அவர் சார்ந்து வரும் அரசியல் பின்புலத்தை வைத்தே இவ்விரு உதாரணங்களிலிருந்தும் கிழக்கு முஸ்லிம் மக்களின் பெரும் பகுதியினர்களின் அரசியல் போக்கு என்பது மஹிந்த மற்றும் கோட்டா அணியினர் மீதான நம்பிக்கையில்லாதததையே காட்டுகின்றது.
அப்படியென்றால், இவர்களுக்கு நேரெதிரான அரசியலை இம்மக்களின் பெரும் பகுதியினர் ஆதரிப்பதென்பது பிரச்சினையைத் தீர்த்தவர்கள் என்பதினாலா? என்று கேட்டால், இல்லையென்ற பதிலே நமக்கு கிடைக்கும்.
குறிப்பாக, ரணில் விக்கிரமசிங்காவின் வெளிப்படையான அரசியல் போக்குகளில் கடும் சிங்களத்தேசியவாதம் வெளிப்படுவதில்லை. பிரச்சினைகளைத் தீர்ப்போம், அதற்கான பேச்சுவார்த்தை என்ற பாங்கிலான செயற்பாட்டை முன்னெடுப்பதினால், இவரின் சார்பு அரசியலை முஸ்லிம் சமூகத்திடம் றஊப் ஹக்கீம், றிஸார்ட் பதியூதீன் கொண்டு வருவதினால் அழமாகச் சிந்திக்க முடியாத முஸ்லிம்கள் முதலில் இரையாகிப் போகின்றனர். இவர்களின் தொகையைப் பார்த்த நடுத்தர சிந்தனைக்குரியவர்களும் ஏமாந்து போவதினால் தான் ரணில் சார்ந்த சார்பு அரசியலுக்கு இங்குள்ள முஸ்லிம் மக்கள் அதிகமாக இரையாகிப் போகின்றனர்.
அது மட்டுமன்றி, ரணில் சார்ந்த அரசியலில் இருப்புக்கொண்டிருக்கும் கடும்போக்குடைய சிங்கள அரசியல் கதையாடல் வெறும் கதையாடல் போன்றதொரு பிரமைமையைத் தோற்றுவித்து விடும். ஆனால், மகிந்த – கோட்டா அணியிலிருக்கும் கடும் சிங்களப் போக்குடையவர்களின் முஸ்லிம் விரோதப்பேச்சுக்கள் நடைமுறைப்படுத்துவதற்கான எத்தனங்களைச் செய்வது போன்ற கட்டமைப்புக்கு அரசாங்கமே வருவது போன்ற நிலைகள் காணப்படுவதுமுண்டு.
இத்தகைய பார்வையும் பதிவும் மகிந்த – கோட்டா அணியினர் மீது கிழக்கு முஸ்லிம்களில் பெரும் பகுதியினரிடம் இருப்புக கொண்டிருப்பதினால் இவர்கள் சார்ந்த அரசியலை இப்போதைக்கு அதாவுல்லாஹ் என்றாலும் சரி தான் அலி சப்ரி என்றாலும் சரி தான். இலகுவில் வெற்றி பெறாதென்பது திண்ணமானது.
இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed