Main Menu

கொரோனாவுக்கு ஆயுர்வேதத்தில் தீர்வுள்ளது – ஜனசஹன ஸ்தாபனத்தின் தலைவர் டாக்டர் தேசப்பிரிய

(எஸ்.அஷ்ரப்கான்)
மக்கள் எதிர்கொண்டு வருகின்ற நீண்ட கால ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு முறையான இலவச ஆயுர்வேத சிகிச்சை மூலமாக நிரந்தரத்தீர்வு பெற்றுத்தர முடியுமென்று ஜன சஹன ஸ்ரீலங்கா இஸ்தாபனத்தின் தலைவர் டாக்டர் துஷித தேசப்பிரிய தெரிவித்தார்.
அக்கரைப்பற்றில் ஊடகவியலாளர்களை இன்று (13) வியாழக்கிழமை சந்தித்து ஜன சஹன ஸ்ரீலங்கா மனித நேய இஸ்தாபனத்தின் வேலைத்திட்டங்கள் குறித்து விளக்கமளித்த போது இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
சுகாதாரமானதும், ஆரோக்கியமானதுமான வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் கிடைக்கப்பெறுவது உண்மையிலேயே வரப்பிரசாதமாகும். ஆகவே தான், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என தமிழில் பழமொழியுள்ளது.
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். உடலை நன்றாக வைத்திருந்தால் தான் உள ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் கூட வளம் பெற்று முழுமையான சுகதேகியாக வாழ முடியும். இதனால் தான் ஜன சஹன ஸ்ரீலங்கா மனித நேய இஸ்தாபனம் மாற்று வைத்திய முறைகளில் பிரசித்தி வாய்ந்த ஆயுர்வேதம் மூலமாக மக்களுக்கான மருத்துவ சேவைகளை இலவசமாக அவர்களின் காலடிகளுக்கு கொண்டு சென்று வழங்குகின்றது.
நாம் கொழும்பு, கண்டி, மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம், நுவரெலியா அடங்கலாக நாடு பூராவுமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் இலவச மருத்துவ முகாம்கள் மற்றும் சிகிச்சை நிலையங்களை நடத்தி வருகின்றோம். எம்மிடம் சிகிச்சை பெற்ற நோயாளர்கள் அநேகர் நீடித்த பல நோய்களிலிருந்து நிரந்தரத்தீர்வினைப் பெற்றுள்ளனர் என்பது எமக்கு பெருமகிழ்ச்சி தருகின்றது. அதே போல, பல நோயாளர்களும் மெல்ல மெல்ல நிவாரணம் பெற்று வருகின்றனர்.
எமது கதவுகள் எப்போதும் திறந்திருக்கின்றன. அன்பர்கள் கோருகின்ற பட்சத்தில் அவர்கள் கோருகின்ற இடங்களுக்கு வந்து சேவை செய்ய நாம் காத்திருக்கின்றோம். கொரோனா வைரஸ் தொற்று பற்றி இன்று அதிகம் பேசப்படுகின்றது. ஆயினும், அதற்குக்கூட ஆயுர்வேதத்தில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தீர்வு சொல்லப்பட்டிருக்கின்றது. பெயர்கள் புதுமையானவை. நோய்கள் பழைமையானவை.
எமது வைத்திய அணி சீனா அடங்கலாக எந்த நாட்டுக்கும் சென்று கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கும் சேவையாற்ற தயாராகவேயுள்ளது. எமது அனுதாபங்களை ஏற்கனவே சீனத்தூதுவருக்கு அறியக்கொடுத்து அன்புக்கரம் நீட்டியிருக்கின்றோம். அது போல உள்நாட்டிலும் கொரோனா தொற்று நீக்க சிகிச்சைகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம் என்றார்.


Comments are Closed