Main Menu

கோறளை மத்தி ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் சர்வ மத 72 வது சுதந்திர தின நிகழ்வு

கோறளைப்பற்று மத்தி ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் ஏற்பாட்டில் 72 வது சுதந்திர தினத்தைச்சிறப்பிக்குமுகமாக சர்வ மதத்தவர்களையும் ஒன்றிணைத்து நடாத்திய சுதந்திர தின நிகழ்வும் சர்வ மத மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கலும் தென்னங்கன்று விநியோகமும் சுந்தந்திர தினமான கடந்த 04.02.2020ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு வாழைச்சேனை புகையிரத நிலைய சந்தியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

கோறளைப்பற்று மத்தி ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் செயலாளர் என்.எம்.அஸ்ஹர் அலி தலைமையில் இடம்பெற்ற இப்பிரமாண்டமான நிகழ்வில், பிரதம அதிதியாக கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி ஷோபா ஜெய ரஞ்சித் அவர்கள் கலந்து கொண்டார்.

கெளரவ அதிதிகளாக கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி, நல்லாட்சிக்கான ஐக்கிய முன்னணியின் முன்னாள் தவிசாளர் எம்.எம்,ரஹ்மான், தென்னை அபிவிருத்தி சபை முகாமையாளர் ஹரீஸ், வாழைச்சேனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எஸ்.ஜெயசுந்தர (ASP), நாவலடி இராணுவ முகாம் கட்டளையிடும் அதிகாரி ஆகியோரும் கல்குடா உலமா சபை உறுப்பினர் மெளலவி எம்.எஸ்.எம்.அஷ்ரப், மையிலங்கரச்சை மஹிந்தாராம விகாராதிபதி பூஜிய மஹிந்தா லங்கார ஹிமி, கறுவாக்கேணி ஆலய குருக்கள் சிவா சிறீ ப.கண்ணன், வாழைச்சேனை மெதடிஸ்த ஆலய போதகர் வீ.உதயகுமார் ஆகிய சர்வ மதத்தலைவர்கள், சட்டத்தரணிகள், சமூக ஆர்வலர்கள், கோறளை மத்தி ஆட்டோ ஓட்டுனர் சங்க உறுப்பினர்கள், பொது மக்கள், பிரதேச வர்த்தகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் விஷேட அம்சமாக மாணவர்களுக்கு அக்கி வில்லா ஹோட்டல் உரிமையாளரால் வறிய இருபது மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கபட்டதுடன், தெரிவு செய்யப்பட்ட சகல மதங்களையும் சேர்ந்த சுமார் இருநூறு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும்  வழங்கப்பட்டன, தென்னை அபிவிருத்திச்சபையினால் வழங்கப்பட்ட தென்னங்கன்றுகள் இருநூறு பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இன, மத பேதங்களை கடந்து எல்லோரும் இலங்கைத் திருநாட்டின் மக்கள் என்ற அடிப்படையில் தேசியத்துக்கும் சேதி சொல்லும் ஒரு மிகப்பிரமாண்டமான நிகழ்வாக சுதந்திர தின வைபவம் இடம்பெற்றமை பாராட்டத்தக்கது.

இந்நிகழ்வை சிறப்பாகக் கொண்டு நடாத்துவதில் கோறளைப்பற்று மத்தி ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினருடன் இணைந்து கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி தன்னாலான முழுப்பங்களிப்பினையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Comments are Closed