Main Menu

கல்வியும், விளையாட்டும் நாணயத்தின் இரு பக்கங்கள் – காரைதீவில் கலாநிதி செல்லையா அருள்மொழி

(எஸ்.அஷ்ரப்கான்)
விளையாட்டு என்பது அன்றாடம் பிள்ளைகளுக்குத் தேவையான பயிற்சியுடன் கூடிய ஆளணி விருத்திச் செயற்பாடாகும். கல்வி எனபது ஒரு நடத்தை மாற்றமாகும். அதே போன்று, விளையாட்டு என்பதும் ஒரு நடத்தை மாற்றமாகும் என கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசாரபீடத்தின் கல்வி மற்றும் குழந்தை நலத்துறைப் பிரிவுத்தலைவர் கலாநிதி செல்லையா அருள்மொழி தெரிவித்தார்.
20 வருடங்களுக்குப்பிறகு காரைதீவு சண்முக மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப்போட்டி அதிபர் செ.மணிமாறன் தலைமையில் வியாழக்கிழமை (13) மாலை பாடசாலைக்கருகிலுள்ள மைதானத்தில் நடைபெற்ற போது அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில், கௌரவ அதிதியாக கல்முனை கோட்டக் கல்விப்கணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீலும் கலந்து கொண்டார்.
கங்கை, காவிரி, யமுனை ஆகிய இல்லங்கள் பங்குபற்றிய இப்போட்டியில் கங்கை இல்லம் 380 புள்ளிகளைப்பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக்கொண்டது.
பிரதமர் விருந்தினர் இங்கு மேலும் பேசியவை வருமாறு,
கல்வியும் விளையாட்டும் ஒரு மாணவனுக்கு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. முக்கியமாக விளையாட்டு பிள்ளைகளின் பண்புசார்ந்த விருத்தியை அபிவிருத்தி செய்வதற்கு துணையாக அமைகின்றது.
அநேகமான ஆசிரியர்கள் தமது பாடத்திட்டத்தை முடிப்பதற்கு ஏற்றவாறு வேலைகளை முடித்து விட்டுச்செல்வது வழக்கமாகவுள்ளது.
அண்மைக்கால இலங்கை ஆய்வின்படி 90 வீதமான ஆசிரியர்கள் தங்கள் பாடத்திட்டத்திலுள்ள பாட அலகுகளை முடித்து விட்டு தங்கள் குறிக்கோளை நிறைவேற்றுகின்றனர். அவர்கள் இணைப்பாட விதான செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுமில்லை. அதைப் பற்றிச்சிந்திப்பதுமில்லை. ஒரு பாடசாலை கருத்திட்டச்செயற்பாடுகளை அடைய வேண்டுமாக இருந்தால், பாடத்திட்டத்தோடு இணைந்த செயற்பாடுகள் முக்கியமானது. இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் விளையாட்டு மிகவும் முக்கியமானது. பாட விடயங்கள் எவ்வாறு அளவு ரீதியான விருத்தியைக் கொடுக்கின்றதோ அதேபோல, விளையாட்டு பண்பு ரீதியான விருத்தியைக் கோடுக்கின்றது.
இவை இரண்டும் சேர்ந்ததே ஒட்டு மொத்த விருத்தியாகும். பாடசாலைகளில் விளையாட்டுக்கள் நடைபெறாமலிருந்தால் அங்கு நாம் பண்பு ரீதியான விருத்தியைக்காண முடியாது.
ஆசிரியர்கள் பாடவிதானச் செயற்பாடுகளை மட்டும் முடித்து விட்டு நிற்காமல் பண்பு ரீதியான செயற்பாடுகளிலும் அக்கறை செலுத்த வேண்டும் என்றார்.


Comments are Closed