Main Menu

வெளியானது சாய்ந்தமருது நகர சபை வர்த்தமானி : மக்கள் மகிழ்ச்சிக்கொண்டாட்டத்தில்

பாறுக் ஷிஹான் & எஸ்.அஷ்ரப்கான்
நகர சபை வழங்கப்பட்டதாக வெளியான தகவலைடுத்து, சாய்ந்தமருது ஜும்ஆப்பள்ளிவாசல் முன்னால் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இக்கொண்டாட்டமானது, வெள்ளிக்கிழமை (14) மாலை 4 மணி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், அதனைச்சீர்செய்யுமுகமாக கல்முனை போக்குவரத்து பொலிஸார் கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இங்கு கூடியுள்ள மக்கள் திரளாகக்கூடி பாதசாரிகளுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடி வருவதுடன், பட்டாசு கொளுத்தப்பட்டுள்ளன.

இலங்கையின் கிழக்கின் அம்பாரை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபையிலிருந்து பிரிந்து புதிதாக உதயமாகின்ற சாய்ந்தமருது நகர சபை குறித்து பின்வருமாறு மக்கள் தத்தமது கருத்துக்களை ஊடகங்களிடம் வெளிப்படுத்தினர்.

அதாவது, சாய்ந்தமருது மக்கள் கல்முனையிலிருந்து பிரிந்து செல்வதற்கு பல காரணங்கள் உள்ளன. சில தரப்பிடம் காணப்பட்ட பிரதேசவாதம் மற்றும் கல்முனைக்குடி முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் அரசியல்வாதிகளின் புறக்கணிப்பு, கல்முனை மாநகர சபை மேயராக சாய்ந்தமருதைச் சேர்ந்தவர்களை நியமிப்பதில் தடை போன்றவற்றால் சாய்ந்தமருது, மாளிகைக்காடு உள்ளடக்கிய பகுதியையும் காரைதீவு எல்லையாகக் கொண்ட பகுதி சாய்ந்தமருது நகர சபை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இது அம்மக்களின் நீண்ட காலப்பிரச்சினையாகவும் அதே நேரம், கல்முனை தேர்தல்தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் கட்சிகள் சரிவை எதிர்நோக்கியுள்ளன. சாய்ந்தமருது மக்களிடையே இச்சபை செயற்பாட்டை செயலுருவாக்கிய தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவின் கையோங்கியுள்ளதை மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறினார்கள்.

இது கல்முனையிலிருந்து சாய்ந்தமருது பிரிந்து செல்வதால் தமிழ் மக்கள் சந்தோசப்படுவதை விட, ஒரு நீண்ட காலமாக மக்களின் ஜனநாயகப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக அவர்கள் பார்க்கின்றார்கள். சாய்ந்தமருது மக்களைப் போன்றே கல்முனையில் தனிப்பிரதேசம் கேட்கவில்லையாயினும், நிர்வாக ரீதியில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என அழைக்கப்படும் தமிழ்ப்பிரதேச செயலகம் தரமுயர்வு நீண்ட காலப்பிரச்சினையாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.



Comments are Closed