Main Menu

நெற்சந்தை மாபியா

(ஏ.எல்.நிப்றாஸ் – வீரகேசரி)
‘வரப்புயர நீருயரும், நீருயர நெல்லுயரும், நெல்லுயரக் குடியுயரும், குடியுயரக் கோலுயரும், கோலுயரக் கோனுயர்வான்’ நாம் சிறுவயதில் பாடப்புத்தகத்தில் படித்துப்பாடமிட்ட ஒளவையாரின் பாடல் வரிகள் இது.

ஆனால், ‘விவசாயத்தின் வளர்ச்சியே ஒட்டுமொத்த நாட்டின் உயர்வும்’ என்ற உள்ளர்த்தம் நிறைந்த இந்த வார்த்தைகளின் தார்ப்பரியத்தை அரசாங்கமும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் உணர்ந்து செயற்படுகின்றார்களா? என்ற வலுவான சந்தேகம் அடிக்கடி எழத்தான் செய்கின்றது.

‘இலங்கை ஒரு விவசாய நாடு’ என்று பெருமையடித்துக் கொள்கின்றோம். ‘நெல்லும் ஏனைய விவசாயப்பயிர்களும் விளைகின்ற பூமி’ என்று நூற்றாண்டு காலமாக வர்ணித்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால், அடிமட்ட விவசாயிகளின் வாழ்வும், நெல் மற்றும் அரிசிச்சந்தை நடவடிக்கைகளும், எந்தளவுக்கு மிக மோசமாகப் போய்க்கொண்டிருக்கின்றதென்று நாம் சிந்திக்கத்தவறி விடுகின்றோம். ஒரு வேளை, சிந்தித்தாலும் அதற்குத்தீர்வு காணும் நோக்கில் ஒழுங்கான,  ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை.

சுருங்கக்கூறின், பெருந்தோட்டக் கம்பனிகள் இலாபம் உழைத்துக் கொண்டிருக்க, தோட்டத்தொழிலாளர்கள் இன்னும் அன்றாடம் காய்ச்சிகளாக எவ்வாறு பொருளாதார ரீதியாகப் பின்தள்ளப்பட்டிருக்கின்றார்களோ, அது போலவே இலங்கையின் நெல் விவசாயிகளும் மாபியா வியாபாரம் செய்யும் நெல் வர்த்தகர்களால் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதை தடித்த எழுத்துக்களில் குறிப்பிட விரும்புகி;ன்றோம்.

விவசாயிகளின் நலனுக்காக முன்மொழியப்படும் சட்டங்களும் திட்டங்களும் ஏட்டுச் சுரக்காய்களாக இருப்பதாலும், விவசாயிகளுக்கு சேவை செய்வதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஒரு சிலர் யாருக்கோ ‘சேவகம்’ செய்வதாலும், நெல் மற்றும் அரிசி முதலாளிமார், வியாபாரிகள், தரகர்கள் கொள்ளை இலாபம் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

‘விவசாயமே வாழ்வு’ என்று வாழ்கின்ற அடிமட்ட முஸ்லிம், சிங்கள, தமிழ் விவசாயிகள் இன்னும் ஓட்டாண்டியாகவே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றனர்.

அன்றைய நிலைமை
ஒரு காலத்தில் கிராமப்புறங்களில் ‘போடிமார்’ என்ற ஒரு பகுதியினர் இருந்தனர். இவர்களில் அநேகர் பல நூறு ஏக்கர் நெல் வயல்களுக்குச் சொந்தக்காரர்களாக இருந்தனர். ஊரிலுள்ள பணக்காரர்களுள் இவர்களும் அங்கம் வகித்தனர். இந்த நிலைமை 2000ஆம் ஆண்டுகளுக்குப்பிறகு மாறிப்போனது.

விவசாயம் செய்பவன் அல்லது இரண்டு, மூன்று ஏக்கர் காணிகளை வைத்திருப்பவன் காலகாலமாக ஏழையாகவே இருக்கின்றான். பெரும் எதிர்பார்ப்பபோடு ஒரு போகம் முழுக்க அதாவது கிட்டத்தட்ட 5 மாதங்கள் உழைப்பவன் கடைசியில் பெரும்பாலும் இலாபமின்றி வீடு திரும்புகின்ற நிலைமையையே அண்மைக்காலங்களில் அவதானிக்க முடிகின்றது.

நெல் ஆலை உரிமையாளர்களும் நெற்கொள்வனவாளர்களும் மிகக்குறைந்த, நியாயமற்ற, அடிமாட்டு விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்வதால் கணிசமான இலாபத்தை அவர்களுக்கு கொடுத்து விட்டு, மீதமிருக்கின்ற சொற்ப பணத்தை கிருமிநாசினி, பசளைக்கடைக்காரர்களின் கடனுக்காகக்கொடுத்து விட்டு, வெறுங்கையுடன் வீடு திரும்புகின்ற விவசாயிகள் ஏராளம்.

நல்ல வேளையாக இந்தியாவைப்போல் கடன் தொல்லையால் நமது நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதில்லை. அவ்வாறு நடந்திருந்தால் கடல் தொல்லையிலுள்ள விவசாயிகளும் அதற்குப்பின்னாலுள்ள காரணங்களும் வெளிச்சத்துக்கு வந்திருக்கலாம். ஆனாலும், அது பற்றி இப்போதாவது நாம் பேச வேண்டியிருக்கின்றது.

எட்டாத திட்டங்கள்
ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் நாட்டின் விவசாயத்தை மேம்படுத்துவதற்காக பல திட்டங்களை அமுல்படுத்துகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக நெற்செய்கையாளர்களுக்கு மானிய விலை உரம், நெல்லுக்கு நிர்ணய விலை, விவசாயக்கடன் என்று எத்தனையோ நல்ல திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.

ஆயினும், உரிய காலத்தில் நீர்ப்பாசனம் கிடைக்காமை போன்ற இயற்கை சார்ந்த காரணங்களுக்குப் புறம்பாக, மானிய விலையில் உரம் தாமதமாக வழங்கப்படுகின்றமை, கறுப்புச்சந்தையில் அதிக விலைக்கு உரம் வாங்க வேண்டிய நிலையேற்படுகின்றமை, நிர்ணய விலைக்கு உரிய காலத்தில் நெல் சந்தைப்படுத்தும் சபை நெற்கொள்வனவை மேற்கொள்ளாமை, நெல் குற்றும் ஆலை உரிமையாளர்களும் நெல் வியாபாரிகளும் தரகர்களும் நிர்ணய விலையை விட குறைந்த விலையில் கொள்வனவை மேற்கொள்கின்றமை, இவற்றுக்கெல்லாம் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் சிலர் துணை போகின்றமை, பலர் கண்டும் காணாது போலிருக்கின்றமை ஆகிய காரணங்களால் அரசாங்கம் எதிர்பார்த்த நன்மைகளை அடிமட்ட விவசாயிகள் அனுபவிக்க முடியாத நிலை இருக்கின்றது.

இந்தப்பிரச்சினை கடந்த பல வருடங்களாக அம்பாறை, மட்டக்களப்பு உள்ளிட்ட தமிழ்ப்பேசும் மக்கள் வாழ்கின்ற மாவட்டங்களில் மட்டுமன்றி, பெரும்பான்மையின விவசாயிகள் வாழும் பல இடங்களிலும் உள்ளது. கடந்த போகத்திலும் இந்தப்பிரச்சினை இருந்தது. இந்தப்போகத்திலும் இருக்கின்றது. அடுத்த போகத்திலும் இருக்கலாமென்ற அச்சம் இப்போதே விவசாயிகளுக்கு ஏற்படத்தொடங்கி விட்டது.

இங்கு விவசாயிகள் எனப்படுவோர் விவசாயிகள் என்று சொல்லிக்கொண்டு நெல், உர வியாபாரம் செய்வோரோ, வயற்காரர்களிடம் நாட் சம்பளம் பேசி பணி புரியும் அடிமட்ட கூலித்தொழிலாளிகளோ அல்லர். அத்துடன், நிலச்சுவேந்தர்கள் போல நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களை வைத்துக்கொண்டு ஒவ்வொரு பிரதேசத்தின் நெற்சந்தையிலும் ஆதிக்கம் செலுத்துவோரையும் உள்ளடக்க முடியாது.

அதன்படி, ஒரு சில ஏக்கர் நெல் வயல்களை வைத்துக்கொண்டு அல்லது குத்தகைக்குப் பெற்றுக்கொண்டு அதில் தமது வாழ்வாதாரத்தை நம்பியிருக்கும் கீழ்நடுத்தர வர்க்கத்தைச்சேர்ந்த விவசாயிகளையே உண்மையான விவசாயிகள் என்ற வகையறாவுக்குள் உள்ளடக்க வேண்டியுள்ளது. அதாவது, உண்மையிலேயே இந்த நெற்சந்தை மாபியாவினால் தமது முதலீட்டை இழக்கின்ற, வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்ற தரப்பினராவார். மாறாக, இலாபம் பாதிக்கப்படுகின்ற கூட்டத்தினரல்லர்.

தொடர் பிரச்சினைகள்
கடந்த பல வருடங்களாக இலங்கையில் மொத்த நெல் உற்பத்தியில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டிருந்தாலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை. இதற்கு அவர்களது நெற்செய்கை முறைமை, காலநிலைசார் காரணிகளை விடவும் நெற்கொள்வனவுச்சந்தையில் நிலவும் மாபியா வர்த்தகம் முக்கியமான காரணியாக இருக்கின்றதெனலாம்.

ஒரு போகத்தில் நெற்செய்கைக்காக நெல்லை விதைப்பதற்கு முழை நெல் வாங்குவதில் தொடங்கி, மானிய உரம் வாங்குதல், நியாய விலைக்கு கிருமிநாசினி வாங்குதல் தொட்டு அறுவடை செய்து, நிர்ணய விலைக்கு விற்பது வரை பல்வேறு சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் விவசாயிகள் முகங்கொடுக்கின்றனர் என சமூக நலன்விரும்பி ஒருவர் கூறுகின்றார்.

மானிய விலையில் அரசாங்கம் உர விநியோகம் செய்வதாக அறிவிக்கின்ற போதும், ஒரு சில பகுதிகளைத்தவிர மற்றைய இடங்களில் இந்நடவடிக்கை உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்படுவதில்லை. இதற்கிடையில் கறுப்புச்சந்தைக்கு அதிக விலைக்கு உரம் வந்து விடுகின்றது. காலம் பிந்தி விடக்கூடாதென்று அதிக விலை கொடுத்து விவசாயிகள் கறுப்புச்சந்தையில் கொள்வனவு செய்வதுமுண்டு. இவ்வாறான சட்ட ரீதியற்ற வியாபாரத்திற்கும் உர விநியோக முறைகேடுகளுக்கும் சில அதிகாரிகளே துணை போவதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஏகபோக வியாபாரிகள்
நெல் அறுவடை தொடங்கியதும் ஆரம்பிக்கின்ற நெற்சந்தை மாபியா தான் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பையும் பின்னடைவையும் ஏற்படுத்துகின்றது. முன்னைய காலங்களில் நெல் அறுவடை தொடங்கியதும் பொலன்னறுவை போன்ற இடங்களிலிருந்து நெற்கொள்வனவாளர்களின் லொறிகள் அதிகளவில் வரும். அவர்கள் விவசாயிகளிடம் சென்று நெற்கொளவனவு செய்வார்கள். ஓரளவுக்கேனும் பேரம் பேசி விற்கும் நிலை அப்போதிருந்தது. இந்த போட்டிச்சந்தை காரணமாக உள்ளூர் வியாபாரிகளும் நல்ல விலைக்கே நெல்லை வாங்க வேண்டியிருந்தது.

ஆனால், இப்போது அம்பாறை மாவட்டம் உட்பட பல பிரதேசங்களுக்கு அவ்வாறான லொறிகள் வருவது மிகவும் குறைந்து விட்டது. உள்ளூர் நெல் வியாபாரிகள் ஏகபோக சந்தையை வைத்திருக்க முனைகின்றனர். வெளியூர் வியாபாரிகளுக்கும் அநேகமான உள்ளூர் நெல் வியாபாரிகள் மற்றும் நெல் ஆலை உரிமையாளர்களுக்குமிடையில் ஒரு ‘ஜென்டில்மேன் டீல்’ இருக்கின்றது என்கின்றார் விடயமறிந்த ஒருவர்.

இதன்படி, வெளியூர் நெற்கொள்வனவாளர்கள் உள்ளூர் வியாபாரிகளிடமிருந்தே நெல்லைக்கொள்வனவு செய்கின்றனர். உள்ளூர் வியாபாரிகள் நினைப்பது தான் விலை என்றாகின்றது. நீண்ட காலம் நெல்லை வைத்திருக்கவும் முடியாது. பணமும் தேவையென்ற நிலையிலிருக்கும் விவசாயிகள் குறைந்த விலைக்கு நெல்லை உள்ளூர் முகவர்களுக்கு விற்பதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதன் மூலம் திறந்த சந்தை தொழிற்பாடுகளின்றி, ஒருவித மாபியா வர்த்தகம் நடக்கின்றதெனலாம்.

இங்கு விவசாயிகள் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டு நெல் வியாபாரிகள் சந்தையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மட்டுமன்றி, அரசாங்கத்தின் நிர்ணய விலையை விடக்குறைந்த விலைக்கு கொள்வனவு செய்கின்றனர் என்பதாகும். இந்தப்போகத்திலும் பல இடங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அரசாங்கம் நிர்ணய விலையை மீளறிவிப்புச்செய்து, நெற்சந்தைப்படுத்தும் சபை நெற்கொள்வனவை ஆரம்பித்த பிறகு தான் அம்பாறை மாவட்டத்தில் சில தனியார் நெல் தரகர்கள் விலையைக்கொஞ்சம் அதிகரித்ததாக அறிய முடிகின்றது.

மறுதரப்பில், நெற்கொள்வனவு செய்யும் வர்த்தகர்கள் இதற்கு ஒரு காரணத்தைக்கூறுகின்றனர். அதாவது, நெல் ஈரெலிப்பாகவும் கல், மண் கலந்ததாகவும் இருக்கின்றது. எனவே, காய்ந்த நெல் என்றால் நல்ல விலை கொடுக்கலாம். இவ்வாறான ஈர நெல்களுக்கு குறைந்த விலையே கொடுக்க முடியும்’ என்று கூறுவதாகச் சொல்லப்படுகின்றது.

நியாயமற்ற விலை
முன்னைய காலங்களில் நெல் அறுவடை என்பது நீண்டதொரு செயன்முறையாகக் காணப்பட்டது. அறுவடைக்காக நெற்கதிர்களை கூலியாட்கள் அறுப்பார்கள். அது கட்டுக்கட்டாகக் கிடந்து காயும். பின்னர் சூடு வைக்கப்பட்டு, உழவு இயந்திரத்தால் சூடு மிதிக்கப்படும் வரை காய்வதற்கு வாய்ப்புக்கள் இருந்தன. அத்துடன், கல், மண்ணும் குறைவாகவே காணப்படும்.

ஆனால், இப்போது நெல் அறுவடை இயந்திரம் வந்து விட்டது. இரண்டு மணித்தியாலங்களுக்குள் அறுவடை முடிந்து விடும். ஏழை விவசாயிகளுக்கு அந்த நெல்லைக்கொண்டு போய் காய வைக்கும் வசதியுமில்லை. அதற்கான அவகாசமுமில்லை. அத்துடன், நெற்சந்தைப்படுத்தும் சபை நெல்லை சற்று தாமதித்தே கொள்வனவு செய்யும். அதற்கு சில வரையறைகள் கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே தான் வர்த்தகர்கள் கேட்கின்ற விலைக்கு விற்று விட்டுப்போக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. எவ்வாறிருப்பினும், நெல் ஈரம் என்ற உப்புக்குச்சப்பான காரணத்தைக்கூறி நெல் முதலாளிமார் மேற்கொள்கின்ற விலைக்குறைப்பு நியாயமற்றதாகும்.

நெல் வியாபாரிகள் இவ்வாறு கொள்வனவு செய்கின்ற நெல்லை காய வைத்து, வெளிமாவட்ட கொள்வனவாளர்களுக்கு நல்ல விலைக்கு விற்று இலாபம் உழைக்கின்றனர். சிலர் பதுக்கி வைத்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கொள்ளை இலாபம் உழைக்கின்ற செயற்பாடுகளும் இடம்பெறாமலில்லை. எனவே, பாடுபடாத இவர்கள் இலாபம் உழைத்துக் கொண்டிருக்க, விவசாயிகள் வங்குரோத்து நிலைக்குச்செல்வதைப் பரவலாகக்காண முடிகின்றது.

ஆனால், பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் இது விடயத்தில் தமது பொறுப்பை வினைத்திறனாக நிறைவேற்றவில்லையென்றே கூற வேண்டியிருக்கின்றது. அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுகின்றதென்றால், திறந்த சந்தை தொழிற்பாட்டை தடை செய்து ஒவ்வொரு பிரதேசத்தின் சந்தையையும் அப்பிரதேச நெல் வியாபாரிகள். அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் தரகர்கள் ஆட்டிப்படைக்கின்றனரென்றால், நியாயம் எதுவுமின்றி நிர்ணய விலையை விட மிகக்குறைந்த விலைக்கு நெற்கொள்வனவு நடைபெறுகின்றதென்றால், அதை அதிகாரிகளும் சட்டமும் கண்டு கொள்ளவில்லையென்றால், இந்த சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு அதிகாரிகளும் மறைமுகமாக துணை போகின்றனர் என்பது தானே அர்த்தம்.

இதே வேளை, இவ்வளவு பிரச்சினை இருந்தாலும் கூட, முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகளும் விவசாயிகளுக்காக பேசுவதை காண முடியாதுள்ளது. மாபியா பற்றிப்பேசினால் முதலாளிகளைப் பகைத்துக்கொள்ள நேரிடுமென்று அவர்கள் நினைக்கலாம். அல்லது, இதுவெல்லாம் பெரிய பிரச்சினையா? என்று நினைத்திருக்கலாம்.

அரசாங்கத்திடம் கோரிக்கை
ஆனால், அரசாங்கம் விரைந்து, தீவிர நடவடிக்கையெடுக்க வேண்டும். தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினையைப் போல, அரச மற்றும் தனியார் துறையினரின் சம்பளம் பற்றி சிந்திப்பதைப்போல நெற்சாகுபடி மேற்கொள்கின்ற உண்மையான விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் கூடிய கவனஞ்செலுத்த வேண்டும்.

அந்த வகையில், கடந்த இரு வாரங்களுக்குள் நெல் கொள்வனவு விடயத்தில் இராணுவத்தினரை ஈடுபடுத்தியது போல காத்திரமான, இறுக்கமான அணுகுமுறையையும் பொறிமுறையையும் இது விடயத்தில் கையாள வேண்டியிருக்கின்றது.

• குறிப்பாக. விவசாயிகளுக்கு உரிய காலத்தில் உர மானியம் வழங்கப்பட வேண்டும். அத்துடன், பின் கதவால் அதிக விலைக்கு எப்பகுதியிலும் உரம் விற்கப்படுமாயின், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

• காலதாமதமின்றி நெற்சந்தைப்படுத்தும் சபையினர் நெற் கொள்வனவை மேற்கொள்வதை அரசாங்கம் உறுதி செய்வதுடன், உயர்ந்தபட்ச நெல் கொள்வனவு செய்யும் எல்லையை (அளவை) மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

• நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்திலும் நெல் மற்றும் அரிசிச்சந்தையைத் திறந்து விட வேண்டும். வெளியிடங்களிலிருந்து வரும் நெற்கொள்வனவாளர்களைத் தடை செய்கின்ற இடைத்தரகர்கள், அதற்கு இடமளிக்கும் அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

• குறிப்பாக, ஒவ்வொரு பகுதியிலும் மிகக்கஷ்டப்பட்டு உற்பத்தி செய்யப்படும் நெல்லை நிர்ணய விலையை விட மிகக்குறைந்த விலைக்கு வாங்குவதுடன், அதிக விலைக்கு வெளியூர் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து மாபியா ரக வர்த்தகம் நடாத்துகின்ற நெல் ஆலை உரிமையாளர்கள், நெல் வர்த்தகர்கள், இடைத்தரகர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கையெடுக்க வேண்டும்.

• அரசாங்கத்தின் விலைக்கட்டுப்பாடுகளை மதித்து, முறையாகச்செயற்படுகின்ற நெல் ஆலை உரிமையாளர்கள், நெல் வியாபாரிகள் ஊக்குவிக்கப்படுகின்ற சமகாலத்தில், உத்தரவாத விலையில் நெல்லைக்கொள்வனவு செய்யாமல், குறைந்த விலைக்கு வாங்கி, சந்தையில் கிராக்கியிருந்தும் கூட விற்பனை செய்யாமல் பதுக்கி வைத்து பின்னர் விற்பனை செய்கின்ற அரிசி ஆலை உரிமையாளர்கள் சட்டத்தை மீறியிருந்தால், அதற்காக அவர்களது அனுமதிப்பத்திரங்களை இரத்துச்செய்து ஏனையோருக்கு பாடம் படிப்பிக்க வேண்டும்.

• அரச அலுவலங்களுக்கு தற்போது விஷேட புலனாய்வு அதிகாரிகள் திடீர் விஜயம் செய்வதைப்போல, நெற்கொள்வனவு செயன்முறையை இரகசியமாகக் கண்காணிப்பதற்கும் தொடர்புபட்ட அரச நிறுவனங்கள் மற்றும் நெல் ஆலைகளுக்கு திடீர் விஜயங்களை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கையெடுப்பது அவசியமாகும்.

• இவை எல்லாவற்றுக்கும் மேலாக, நாட்டின் விவசாயத்துறைக்கு சேவையாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள மேல் மட்ட அதிகாரிகள் தொடக்கம் கீழ்மட்ட ஊழியர்கள் வரை அனைவரும் கண்காணிக்கப்பட வேண்டும். இதன்படி, சட்ட விரோத நடவடிக்கைக்கு துணை போகின்ற இலஞ்சப்பேர்வழிகள் மற்றும் கண்டும் காணாதது போலிருக்கின்ற அதிகாரிகள் போன்றோருக்கெதிராக சட்ட, ஒழுக்காற்று விசாரணை நடாத்துவது கட்டாயமானது.

இலங்கை விவசாய வளமிக்க நாடு என்று சொல்லிக்கொண்டு, விவசாயிகளின் நலனுக்காக திட்டங்களை வகுத்துக் கொண்டும் இருந்தால் மட்டும் போதாது. அந்த நலன்கள் விவசாயிகளைச் சென்றடைவதையும் உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும். அந்த வகையில், நெற்கொள்வனவுச்சந்தையில் நிலவும் ‘மாபியா’ தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டும்.

– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி – 16.02.2020)Comments are Closed