Main Menu

கொரோனா விடுமுறையும் குழந்தைகளும் – Dr . விஷ்ணு சிவபாதம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

இன்று பெற்றோர்களுக்கு கொரோனா பற்றிய கவலையை விட தமது குழந்தைகளை எவ்வாறு வீட்டில் வைத்துக்கொள்வதென்பதே பெரிய பிரச்சினையாகவுள்ளது.

அதாவது முதலாம் தவணைக்கான விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், பிரத்தியேக வகுப்புக்களும் நிறுத்தப்பட்டுள்ளதால் பெற்றோர்களின் பாடு திண்டாட்டம் தான்.

சொல்லப்போனால், இப்பொழுது தான் இந்த சிறு குழந்தைகளுக்கு படிப்பிலுள்ள அழுத்தம் குறைந்து சற்று நிம்மதியாக இருக்கின்றார்கள் என்று சொல்லலாம்.

சரி இப்பொழுது இந்த குழந்தைகளை எவ்வாறு வீட்டில் பார்த்துக்கொள்வதென்று பார்ப்போம்.

குழந்தைகளுக்கு எப்பொழுதும் தொலைக்காட்சி, தொலைபேசி, காட்டூன் போன்றவற்றைக் காண்பிப்பதால் அவர்களின் சிந்தனை ஆற்றல், சமூகத்தொடர்பு, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு என்பன மழுங்கடிக்கப்படுகிறது. எனவே, அவர்கள் ஒரு சுகதேகியான, சமூகப்பண்புள்ள நபராக வருவதற்கான வாய்ப்புகளும் குறைக்கப்படுகின்றது.

எனவே, பெற்றோராகிய நாமும் தற்பொழுது வீட்டிலிருப்பதால் அவர்களுக்கென்று சற்று நேரம் ஒதுக்குவது சாலச்சிறந்தது. இதன் மூலம் ஒரு குடும்பத்திற்குள் பிணைப்பு மேலும் அதிகரிக்கின்றது.

குழந்தைகளை எப்பொழுதும் ஒரு நேரசூசியுடன் வேலைகளைச் செய்வதற்கு பழக்குங்கள். அதாவது, தூக்கத்துக்குச்செல்லும், நேரம் தூக்கத்திலிருந்து எழும்பும் நேரம் சாப்பிடும் நேரம் போன்றவை.

கண்டிப்பாக அவர்கள் படிப்பதற்கு சிறிது நேரத்தை ஒதுக்குங்கள்.

மற்ற நேரங்களில் வீட்டிலிருந்து விளையாடக்கூடிய செஸ் (Chess), கேரம் (Carom), கார்ட்ஸ் (Cards) போன்ற விளையாட்டுகளில் அவர்கள் ஈடுபடலாம். பில்டிங் பிளாக்ஸ் (Building blocks) மூலம் உருவங்களை செய்ய விடுங்கள். களி (Clay) மூலம் உருவங்களைச் செய்து விளையாடலாம்.

அதே போல், வாழ்த்து அட்டைகளை அவர்கள் வடிவமைக்க நாம் உதவி செய்யலாம். இவை அவர்களின் சிந்தனை ஆற்றலை மேலும் அதிகரிக்கச்செய்யும். இதற்கு பெற்றோர்களின் உதவியும் மிக முக்கியமாகும். அதாவது, அவர்கள் பிழை செய்யும் பொழுது தட்டிக்கொடுப்பது மற்றும் சரியாகச்செய்யும் பொழுது பாராட்டுவது போன்றவை.

குழந்தைகளை சித்திரம் வரைந்து அதற்கு வர்ணம் தீட்ட வைப்பது மற்றும் கடதாசியில் ஆக்க வேலைகளைச் செய்ய வைப்பது அவர்களின் சிந்தனையைத் தூண்டி விடும்.

அதை விட அவர்களுக்கு கதைப்புத்தகங்களைக் கொடுத்து வாசிக்கச்சொல்லலாம். வாசிக்க முடியாத குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அந்த கதைப்புத்தகங்களை வாசித்துக்காட்டலாம். குழந்தைகளின் வயதுக்கேற்றாற்போல் நீதிக்கதைகள், புராணக்கதைகள், இதிகாசங்கள், நாவல்கள் போன்றவற்றைக் கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு சமையல் வேலைகளில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பத்தை வழங்கலாம். அவ்வாறே குடும்பத்தில் தாய், தந்தையரின் வகிபாகம் பற்றி கற்றுக்கொடுக்கலாம்.

பெண் குழந்தைகள் என்றால் அவர்களின் தம்பி, தங்கைகளைப் பராமரிப்பதற்கு சந்தர்ப்பங்களை வழங்கலாம். இதன் மூலம் அவர்களுக்கு இடையேயான சகோதர பாசம் இன்னும் அதிகரிக்கும்.

அதை விட சிறு வீட்டு வேலைகளில் அவர்களை ஈடுபடுத்தலாம். இதன் மூலம் எமது வேலைகளும் சற்று சுலபமாகுமல்லவா?

குழந்தைகளை அவர்களின் கற்பனைக்கேற்றால்
போல் கதைகளைச் சொல்லச்சொல்லி அதை நாம் செவிமடுத்து ரசிக்கும் பொழுது அவர்களின் கற்பனைத்திறன் அதிகரிக்கும்.

இவற்றை அவர்கள் சரியாகச்செய்வதற்கு நாங்கள் அவர்களை ஊக்குவிக்குமுகமாக அவர்களுக்கு பிடித்த உணவுப்பொருட்களைச் செய்து கொடுக்கலாம்.

இவ்வாறாக குழந்தைகளுடன் நாம் பொழுதை வினைத்திறனுடன் கழிப்பதன் மூலம் அவர்களின் வளமான எதிர்காலத்தை நாங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

கண்டிப்பாக அவர்களிடம் கொரோனா வைரஸிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்று சொல்லிக்கொடுங்கள். அதையொரு முன்னுதாரணமாக நீங்கள் செய்து காட்டுங்கள். ஏனென்றால், குழந்தைகளுக்கு மாதா, பிதா இருவருமே எப்பொழுதும் முதன்மையானவர்கள், சிறந்த வழிகாட்டிகள்.

Dr. விஷ்ணு சிவபாதம்,
MBBS, DCH, MD Paediatrics
குழந்தைநல வைத்திய நிபுணர்,
போதனா வைத்தியசாலை மட்டக்களப்பு.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed