Main Menu

அத்தியாவசியப் பொருட்கொள்வனவில் மக்கள் ஆர்வம் : பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு தீவிரம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது முறையாக நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊடரங்குச்சட்டம் நீக்கப்பட்டமையால் மக்கள் அத்தியாவசியப்பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஆர்வத்துடன் ஈடுபட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.

அந்த வகையில், கல்குடாப்பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை வியாபார நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் ஊடரங்குச் சட்டம் நீக்கப்பட்டு பின்னர் வியாழக்கிழமை பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, பொது மக்கள் மிகுந்த அச்சத்துடன் வியாபார நிலையங்களில் அத்தியாவசியப்பொருட்களைக் கொள்வனவு செய்து வருவதை அவதானிக்க முடிந்ததுடன், பொது மக்களின் நடமாட்டம் அதிகளவாகவும் காணப்பட்டத்து. பெரும்பாலான மக்களின் மனதில் அச்சநிலை தொற்றி நிற்பதை காண முடிகிறது.

வியாபார நிலையங்களில் அத்தியாவசியப்பொருட்களைக் கொள்வனவு செய்து வரும் மக்களின் வருகை அதிகரித்துக் காணப்பட்டதுடன், மக்களின் பாதுகாப்புக்கருதி வாழைச்சேனைப் பிரதேச சபையினால் வாழைச்சேனை பொது மைதானத்திலும், ஓட்டமாவடிப் பிரதேச சபையினால் ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்திலும் தற்காலிக வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்றது.

இதன் காரணமாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மக்களின் நெரிசலைக் குறைத்து அவர்களுக்கான பாதுகாப்பினை வழங்கும் நோக்கில் கடமைகளில் ஈடுபட்டு வருவதைக்காணக் கூடியதாக இருந்ததுடன், பேரூந்து போக்குவரத்துக்களும் இடம்பெற்றது.

அத்தோடு, நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊடரங்குச்சட்டம் பல நாட்களுக்கு தொடரலாம் என்ற அச்ச நிலைமை மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. மக்களின் பாதுகாப்பு விடயத்தில் அரசாங்கம் அதீக கவனஞ்செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Comments are Closed