Main Menu

மக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன?

இந்த செய்தியைப் பகிர்க >>>

எம்.ஐ.லெப்பைத்தம்பி
உலகளாவிய ரீதியில் அச்சத்தை உண்டு பண்ணி, இலங்கையிலும் தாக்கஞ்செலுத்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் அரசு நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டத்தை மிகக்கடுமையாக அமுல்படுத்தி வருவதுடன், அதனை மீறுவோருக்கெதிராக கடுமையான தண்டனைகளையும் வழங்கி வருகின்றது.

நாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொரோனாவைக் கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதனடிப்படையில், ஒரு சில தரப்பினர் மீறி நடந்தாலும், பெரும்பாலான மக்கள் குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் நன்கு கடைப்பிடித்தே வருகின்றனர்.

இவ்வாறு தொடர்ச்சியாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்குச்சட்டம் ஒரு சில மணி நேரங்கள் தளர்த்தப்படும் போது, குறிப்பிட்ட ஒரு சில மணி நேரத்துக்குள் தங்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் கொள்வனவு செய்வதென்பது சாத்தியமான ஒன்றல்ல. அத்துடன், ஊரடங்குச்சட்டம் மீள அமுல்படுத்தப்படும் முன்னர் தங்களுக்கான அத்தியாவசியமான பொருட்களைக் கொள்ள வேண்டுமென்பதற்காக நெரிசல் ஏற்படுவதும், வயது வித்தியாசமின்றி வியாபார நிலையங்களில் ஒன்று கூடுவதும் தவிர்க்க முடியாதவொன்றாக மாறியுள்ளது.

இதன் காரணமாக, ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் நோக்கம் சின்னாபின்னமாகி நோய்த்தொற்று அதிகமதிகம் ஏற்பட வழியாகின்றது,

இதனைக்கட்டுப்படுத்த அரசாங்கம் லங்கா சதோஷ பல்பொருள் அங்காடி மூலமாக மானிய விலையில் பொதி செய்யப்பட்ட அத்தியாவசியப் பொருட்களைக்கொள்வனவு செய்து கொள்ளும் வாய்ப்பை வழங்கியுள்ளதுடன், அதற்காக அத்தியாவசிய பொருட்களைப் போதியளவு கையிருப்பில் வைத்துள்ளதாக அரசாங்கமும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஓட்டமாவடி-கொழும்பு வீதியில் மாவடிச்சேனையில் அமைந்துள்ள லங்கா சதோஷ பல்பொருள் விற்பனை நிலையத்திலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட போது, அதிகளவான கூட்டம் நிறைந்து காணப்பட்டதையும் சகலரும் போதியளவான அத்தியாவசிய உணவுப்பொருட்களைக் கொள்வனவு செய்து கொள்ள முடியாமல் தவித்ததையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையினைக் கருத்திற்கொண்டு பருப்பு, தகரத்தில் அடைக்கப்பட்ட மீன் ஆகியவற்றுக்கான விலைக்குறைப்பை அரசு செய்ததையடுத்து அவற்றை வாங்கிச்சேகரிக்க முண்டியடுத்ததையும் போதியளவான கையிருப்பு தீர்ந்து போனதனால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலையும் உருவானது.

நாடு முழுவது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு நாடெங்கிலுமுள்ள லங்கா சதோஷ பல்பொருள் அங்காடிகள் மூலம் ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதியினை வழங்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில், இப்பிரதேசத்தை மையப்படுத்தி அமைந்துள்ள லங்கா சதோஷ நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள சேவைகள் தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இப்பிரதேசத்திலுள்ள வருமானம் குறைந்த மக்களுக்கு சேவை அடிப்படையில் பொருட்களை வழங்க வேண்டுமெனும் நன்னோக்கில் இலட்சக்கணக்கான ரூபாய்களை வாடகையாகச் செலுத்தி திறக்கப்பட்டுள்ள குறித்த லங்கா சதோஷ நிறுவனம் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வருமானம் குறைந்த மக்களின் நன்மைகருதி திருப்திகரமான சேவையை வழங்க வேண்டுமென்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

அத்துடன், ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும் போது ஜன நெரிசலைக்குறைக்கும் வகையில் விலை அடிப்படையில் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதிகளை மானிய அடிப்படையில் வழங்குவதுடன், சந்தை வசதி, பலசரக்கு கடைகள் இல்லாத பிரதேசங்களில் பொருட்களை விநியோகிக்கும் நடைமுறையினையும் செயற்படுத்த வேண்டுமென்பது இப்பிரதேச மக்களின் எதிர்பார்ப்பாகும்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed